கோப்பாய் காவல்துறையினரினால் இளைஞன் ஒருவரும் , அவரது சகோதரியும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக மனிதவுரிமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான இளைஞன் ஒருவர் காவல்துறையினரினால் தேடப்பட்டு வந்துள்ளார்.
இளைஞனின் வீடு , அவரது சகோதரி வீடு என்பவற்றுக்கு சென்று காவல்துறையினா்தேடுதல்கள் நடத்தியதுடன் , அவர்களின் அன்றாட வாழ்விற்கும் இடையூறு விளைவித்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டார் குறித்த இளைஞனை கடந்த 24ஆம் திகதி கோப்பாய் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
காவல்துறையினா்ரிடம் ஒப்படைக்கப்பட்டு 24 மணி நேரம் கடந்தும் இளைஞனை நீதிமன்றில் முற்படுத்தவில்லை எனவும் , தமக்கும் இளைஞனை காட்டவில்லை எனவும், இளைஞனை தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்துவதாகவும், வீட்டாரால் மனிதவுரிமை ஆணைக்குழுவின் , யாழ்.மாவட்ட பிராந்திய அலுவலகருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது .
முறைப்பாட்டின் அடிப்படையில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் விசாரணைகளை ஆரம்பித்த போது , காவல்துறையினா் 25ஆம் திகதி மாலை யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் முற்படுத்தினர்,
அதேவேளை விசாரணைகளை ஆரம்பித்த இணைப்பாளர் , குறித்த இளைஞனை , சட்ட வைத்திய அதிகாரியின் முன் முற்படுத்தி அறிக்கை பெறுமாறும், அத்துடன் யாழ்.பிராந்திய காவல்துற அத்தியட்சகரிடம் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து தமக்கு அறிக்கை சமர்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.