யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் நாளை காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற யாழ். மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு தொடர்பான முன்னேற்பாட்டு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்,
நாடுபூராகவும் கொரோனாநோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக அரசாங்கத்தினால் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை காலையிலிருந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடானது முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த செயற்பாடானது வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க செயலர் ஆகியோரது வழிகாட்டலுக்கு இணங்க தடுப்பூசி வழங்கும் செயற்பாடானது முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றதுபடவுள்ளது. காலை 8 மணியிலிருந்து ஒரு மணி வரை ஒரு அமர்வும், அதன் பின்னர் இரண்டு மணியிலிருந்து இரவு 8 மணி வரை இன்னொரு அமர்வும் ஆக இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடானது முன்னெடுக்கப்படவுள்ளது.
அதனால் பொதுமக்கள் தங்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு என ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு மாத்திரம் அந்த இடங்களுக்கு வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளமுடியும். அத்தோடு கிராம அலுவலர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களினால் தங்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது, என உறுதிப்படுத்தினால் மாத்திரமே நீங்கள் தடுப்பூசி வழங்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.
எனவே நீங்கள் தேவையில்லாது அலையாது தங்களுக்குரிய வழிகாட்டல் கிடைத்த பின்னர் நீங்கள் தடுப்பூசியினை பெற செல்லும் இடத்திற்கு செல்ல முடியும் எனத் தெரிவித்தார்.