யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 12 மையங்களில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 50,000 தடுப்பூசிகள் கிடைத்திருக்கின்றன. இந்த தடுப்பூசிகளை அதிகமாக தொற்று ஏற்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்குரிய ஏற்பாட்டினை சுகாதாரப் பிரிவினர் ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.
அந்த அடிப்படையிலே தடுப்பூசி எதிர்வரும் 15 நாட்களுக்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இதனை மிகத் துரிதமாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகளும் வட மாகாண சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையிலே தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையானது சுமார் 12 மையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் கர்ப்பிணி பெண்கள் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பகுதி மக்கள் தமது விருப்பத்தின்படி தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும் .எனினும் தடுப்பூசி நடவடிக்கைகளில் தெரிவு செய்யப்பட்ட நபர்களை தவிர வேறு பிரிவுகளில் இருந்தோ அல்லது பெயர் பட்டியலில் இல்லாதவர்களோஅங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கிராம உத்தியோகத்தர்கள் எத்தனை மணிக்கு அங்கே தடுப்பூசி பெற செல்ல வேண்டுமென மக்களை அறிவுறுத்துவார்கள்.அந்த நேரத்திற்கு சரியாக சென்று தடுப்பூசியை பெற்றபின் வீடு திரும்ப முடியும்.
அத்தோடு கிராம மட்ட சுகாதார குழுவினரும் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படவேண்டும். பொதுமக்கள் சமூக சமூக இடைவெளியினை பேணி ,சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து தமது குறிப்பிட்ட நேரத்திற்கு சமூகமளித்து தமக்குரிய தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.