மக்ரோன், மெர்கல் விளக்கம் கோரல் அமெரிக்கா தனது ஐரோப்பியக் கூட்டாளி நாடுகளின் தலைவர்களை டென்மார்க் நாட்டின் உதவியுடன் ரகசியமாக உளவு பார்த்தது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான புலனாய்வுச் செய்தி ஒன்றை டென்மார்க்கின் வானொலி சேவையான Danmarks Radio (DR) வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரகம்(US National Security Agency – NSA) 2012-2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் டென்மார்க்கின்
ரகசிய இணையத் தொடர்பு கேபிள்களை ஒற்றுக் கேட்டது என்ற பரபரப்பான தகவலை அந்த வானொலி வெளியிட்டி ருக்கிறது.
ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே, சுவீடன் போன்ற நாடுகளின் உயர் மட்டஅரசியல் தலைவர்களது தொலைபேசி, இணை யம், குறுந்தகவல்கள் என்பவற்றை அமெரிக்கப் பாதுகாப்பு முகவரகம் ரகசியமாகச் சேகரித்தது என்ற விவரங்களை அந்த வானொலி வெளியிட்டுள்ளது.
அதிபர் மெர்கல், ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் தகவல் பரிமாற்றங்களை
அமெரிக்கா அணுகியது என்ற விவரங்க ளும் வெளியிடப்பட்டுள்ளன
இது குறித்து அதிருப்தி அடைந்துள்ள ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மெர்கல் பிரான்ஸின் அதிபர் மக்ரோன் ஆகியோர் அமெரிக்காவும் டென்மார்க்கும் விளக்கம் அளிக்கவேண்டும் என்று கேட்டிருக்கின்றனர்.
கூட்டாளிகளிடையே ஒருபோதும் ஐயத்துக்கு இடம் இருக்கக் கூடாது என்று அதிபர் மக்ரோன் கூறியிருக்கிறார். “ஐரோப்பியர்களையும் அமெரிக்கர்களையும் ஒன்றிணைக்கும் நம்பிக்கையின் பிணைப்பில் நான் இணைந்திருக் கிறேன்,” “எங்களுக்கிடையில் சந்தேகத்திற்கு இடமில்லை.அதனால் தான் முழுமையான தெளிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்தத் தகவல்கள் மற்றும் கடந்த கால உண்மைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் எங்கள் டேனிஷ் மற்றும் அமெரிக்க பங்காளிகள் வழங்க வேண்டும்.அந்த பதில்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” – என்று மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மக்ரோனின் நிலைப்பாட்டுடன் தான் உடன்படுகிறார் என்று அங்கேலா மெர்கல் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான டென்மார்க், ஏனைய ஐரோப்பிய நாடுகளான சுவீடன், நோர்வே, ஜேர்மனி, நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகியவற்றுக்கு இடையிலான கடலடி கேபிள் (underwater internet cables) தொடர்புக் கட்டமைப்பு மையங்களை இணைக்கின்ற நாடு என்பது குறிப்பிடத்தக்கது.