இடர் கால நிதியுதவியான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நாளை முதல் யாழ் மாவட்டதில் வழங்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இடர் காலத்தில் அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு நாளையிலிருந்து யாழ் மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. யாழ் மாவட்டத்தில் சுமார் 75,000 குடும்பங்களுக்கு அதாவது சமுர்த்தி பெற்று வருகின்ற குடும்பங்களுக்கும். அத்தோடு வருமானம் குறைந்த 38 ஆயிரம் குடும்பங்கள் உட்பட மொத்தமாக ஒரு லட்சத்து 52 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. நாளையதினம் அந்தந்த பிரிவில் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
எனினும் தற்போது பயணத் தடை அமுலில் உள்ளதான் காரணமாக கடந்த காலங்களைப் போன்று சிலவேளைகளில் அந்தந்த பகுதி அரச உத்தியோகத்தர்களினால் வீடுகளுக்குச் சென்று அந்தக் கொடுப்பினை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்படுகின்றது.
கொரோனா நிலைமை தொடர்பில் ...
யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலைமையானது அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றது. நேற்று கிடைத்த பிசிஆர் முடிவுகளின் படி 102 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், அன்டியன் பரிசோதனையிலும் நேற்றைய தினம் மொத்தமாக 45 பேருக்கு தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இன்று வரையான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3144 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் நேற்று மூன்று இறப்புகள் யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளன . அந்த வகையில் இறந்தவர்கள் எண்ணிக்கை 43 ஆக தற்போது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சுமார் 3 ஆயிரத்து 298 குடும்பங்களைச் சேர்ந்த 2626 நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு ட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
ஏற்கனவே யாழ் மாவட்டத்தில் நான்கு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு
முடக்கப்பட்டிருந்தன அதிலே தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு அன்ரனி புரம் கிராமம் இன்று காலையில் இருந்து தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய தனிமைப்படுத்தப்பட்ட 3கிராமங்களும் கட்டங்கட்டமாக சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய விடுவிக்கப்படும்.
தடுப்பூசி தொடர்பில் ..
மேலும், யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கல் செயற்பாடானது கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்படுகிறது மிக வேகமாக பொதுமக்களுக்கான இந்த தடுப்பூசிகளை வழங்க வேண்டிய தேவையுள்ளது.
எனினும் ஆரம்பத்தில் மக்கள் ஆர்வம் இல்லாது அதனை பெற்றுக் கொள்வதற்கு முன் வராத நிலை காணப்பட்டது. எனினும் நேற்று, இன்று பொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். அத்தோடு இன்று வரை 9 ஆயிரம் பேர் தடுப்பூசியினை பெற்றிருக்கின்றார்கள்.
இன்றைய தினமும் தடுப்பூசி வழங்கல் மிக வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. இன்றைய தினம் 17 நிலையங்களில் தடுப்பூசி வழங்கல் இடம்பெறுகிறது. 29 கிராம சேவகர் பிரிவுகளிற்கு இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
14 பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 87 கிராமங்களுக்கு முதற்கட்டமான இந்த தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எனினும் முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கலை துரிதமாக நடாத்தி முடிப்பதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்திருக்கின்றோம். எனினும் தற்போது மக்கள் ஆர்வமாக தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளக்கூடியதை காணக்கூடியதாக இருக்கின்றது.
தடுப்பூசி நிலையங்களில் பெருமளவில் மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியினை பெறுவதை காணக்கூடியதாகவுள்ளது.
ஒரு சில இடங்களில் அவ்வாறு மந்தமான நிலை காணப்பட்டபோதிலும், தற்போது மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி பெற்றுக் கொள்வதை காணக்கூடியதாகவுள்ளது.
மேலும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையானது அடுத்தகட்ட தடுப்பூசியும் எமக்கு கிடைக்கப் பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இந்த நிலையில் ஏற்கனவே கிடைக்கப்பெற்ற 50 ஆயிரம் தடுப்பூசி வழங்கலை மிகவும் துரிதமாக முடிப்பதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றோம்.
எனவே பொதுமக்கள் தடுப்பூசியினை எந்தவித தயக்கமுமின்றி பெற்றுக் கொள்வதன் மூலம் அதாவது தமக்கென ஒதுக்கப்பட்டுள்ள கிராம அலுவலர் பிரிவில் தடுப்பூசி வழங்கும் நிலையத்துக்குச் சென்று உரிய நேரத்திற்கு சென்று தமக்கு ரிய தடுப்பு ஊசியை பெற்றுக்கொள்ள முடியும்.
அதோடு தற்போது பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் பொதுமக்கள் தடுப்பூசியினை பெற செல்வதற்கு எந்தத் தடையுமில்லை.
தமக்கு அண்மையில் உள்ள தடுப்பூசி நிலையங்களுக்குச் சென்று தமக்குரிய தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளமுடியும் என்றார்.