சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பிலான அறிவித்தல்கள், ஒழுங்கமைப்புகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
யாழ். மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஏனைய 13 பிரிவுகளிலும் இன்று (2021.06.01) பொதுமக்களுக்கான கொவிட்-19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட போதிலும் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசி வழங்கப்படவில்லை.
ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் ஓரளவுக்கேனும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றியிருக்கின்ற போதிலும், 50,000 வரையான சனத்தொகையைக் கொண்ட வலி.மேற்கு பிரதேசத்தில் இதுவரை 500 வரையான பொதுமக்களுக்குக் கூட தடுப்பூசி ஏற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டைக் கைவிட்டு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுடன் சுகாதார வைத்திய அதிகாரியும் சேர்ந்து பி.சி.ஆர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் மக்களை பலியெடுத்துக்கொண்டிருக்கும் கொடிய கொரோனா நோய்க்கு பல இலட்சக்கணக்கான மக்கள் பலியாகியிருக்கின்றனர். ஒரு தடுப்பூசி கிடைக்காதா என மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கிடைத்த தடுப்பூசிகளைப் பெற்று பொதுமக்களுக்கு ஏற்றுவதில் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஏன் ஆர்வம் காட்டவில்லை என அப்பகுதி சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
04 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், 11 குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள், ஒரு மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர், ஒரு மேற்பார்வை குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் அதைவிட பணியாளர்கள், சங்கானை, வட்டுக்கோட்டை, பாணாவெட்டி, போன்ற வைத்தியசாலை ஆளணியினர் என ஓரளவுக்கேனும் ஆளணியைக்கொண்டு இயங்கும் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை 500 வரையான பொதுமக்களுக்கு கூட இதுவரை தடுப்பூசிகளை ஏற்றியிருக்கவில்லை.
சுழிபுரம் மத்தி மற்றும் பனிப்புலம் ஆகிய இரு இடங்களில் மாத்திரமே தடுப்பூசி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
வலி.மேற்கு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் ஆளணி உதவியைப் பெற்று பல இடங்களில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை முன்னெடுப்பதன் மூலம் சில ஆயிரம் வரையான மக்களுக்கேனும் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆலோசனை முன்வைத்துள்ளனர்.