சிலவகை மருந்துகள், ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள் மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலமை உடையவர்களுக்கும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள 5 வைத்தியசாலைகளில் நாளைமறுதினம் சனிக்கிழமை கொவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது,
இலங்கையில் தொற்று அதிகம் எனத் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணமும் உள்ளடங்குவதால், முன்னிலை அடிப்படையில் 50 ஆயிரம் சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசி முதற் கட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
சினோபாம் தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் மிக மிக அரிதாகும், எனினும் சிலவகை மருந்துகள், ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு, மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பழை, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் நாளைமறுதினம் (ஜூன் 5) சனிக்கிழமை தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தமது பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.