அமெரிக்காவில் ஊடகத் துறையின் உயர் விருது அந்தத் துறை சாராத கறுப்பின இளம் பெண் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. உலகெங்கும் அதிர்வை ஏற்படுத்தியகறுப்பின மனிதர் ஜோர்ஜ் புளொய்ட்டின் (George Floyd) கொலையின் போது வெள்ளை இனப் பொலீஸாரால் அவர் கைது செய்யப்பட்ட காட்சியைத் தனது தொலைபேசியில் பதிவு செய்து அவரது மரணத்தின் முக்கிய ஆதார சாட்சியாக மாறியவர் டார்னெல்லா பிரேஷியர் (Darnella Frazier) என்னும் 18 வயது யுவதி.
அவர் பதிவு செய்த சிறிய வீடியோ காட்சி உலகெங்கும் வெளியாகி இன நீதிக்கான பெரும் போராட்டங்கள் வெடிக்கக் காரணமாகியது.தக்க தருணத்தில் அந்த யுவதி செய்த துணிகரச் செயலுக்கான சான்றாக ‘புலிட்ஸர்’ (Pulitzer Prize) என்கின்ற ஊடகத் துறை கௌரவ விருது அவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
“பத்திரிகையாளர்களின் உண்மை மற்றும் நீதிக்கான தேடுதல்களில் சாதாரண சிவிலியன்களது பங்கு எத்தகையது என்பதற்கு யுவதியின் செயல் ஓர் எடுத்துக்காட்டு” என்று “புலிட்ஸர்” விருதுக் குழு தெரிவித்திருக்கிறது.
“புலிட்ஸர்” விருது அமெரிக்காவில் ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு போன்ற துறைகளுக்காக ஆண்டு தோறும் வழங்கப்படுகின்ற அதி உயர் விருது ஆகும்.
அமெரிக்காவின் மினியாபோலிஸ் பகுதியில் கடந்த ஆண்டு மே 25 ஆம் திகதி ஜோர்ஜ் புளொய்ட் கைது செய்யப்பட்ட வேளை யுவதி டார்னெல்லா தனது உறவினர் ஒருவருடன் வீதியில் சென்றுகொண்டிருந்தார்.
கைதின்போது பொலீஸ் அதிகாரி ஒருவரது பிடியில் புளொய்ட்டின் குரல்வளை நெரிக்கப்பட்டதில் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார். “ஒரு மனிதன் கொடுமைப்படுத்தப்படுவ தையும் உயிருக்காக இறைஞ்சுவதையும் கண்டேன். ஜோர்ஜ் புளொய்டை எனது தந்தையாக – சகோதரனாக – மாமனாக-
பார்த்தேன். ஏனெனில் அவர்கள் அனை வரும் கறுப்பர்கள். அவர்களில் ஒருவராக இருப்பதால் என்ன நேரும் என்பதை உணர்ந்தேன்.” -இவ்வாறு அந்த யுவதி பின்னர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது கண்ணீருடன் கூறியிருந்தார். அவர் பதிவு செய்த வீடியோ உலகெங்கும் வைரலாகப் பரவிபெரும் ஆர்ப்பாட்டங்களை உருவாக்கியது. பொலீஸ் அராஜகங்களின் ஓர் அடையாளமாக மாறியது. இனவெறிக்கு எதிரான கிளர்ச்சிக்கு வித்திட்டது.
இம்முறை “புலிட்ஸர்” குழுவின் 105 ஆவது ஆண்டு விருதுகள் ஆபிரிக்க -அமெரிக்க கறுப்பினத்தவர்கள் மீதான கொடுமைகளை முன்னிலைப்படுத்தும் வகையில் ஜோர்ஜ் புளொய்ட் கொலையு டன் தொடர்புடையவையாக அமைந்துள்ளன.
புளொய்டின் கொலைச் சம்பவத்தை முதலில் வெளியிட்ட மினியாபோலிஸ் நகர உள்ளூர் ஊடகமான “Minneapolis Star Tribune” பத்திரிகைக்குச் சிறந்த “பிறேக்கிங் நியூஸுக்கான(breaking news) ‘புலிட்ஸர்’ விருது கிடைத்திருக்கிறது.இந்தியப் பூர்வீகப் பெண்ணும் புலிட்ஷர் விருது பெறுகிறார்
சர்வதேச செய்தி அறிக்கையிடலுக்கான விருது நியூயோர்க்கில் இருந்து இயங்கு கின்ற BuzzFeed News இணையச்செய்திச் சேவையின் மூவருக்கு வழங்கப்படுகி றது. அவர்களில் ஒருவர் இந்தியப் பூர்வீகப்பெண்ணான மேஹா ராஜகோபாலன்.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில்முஸ்லீம்கள் மீது நடத்தப்படுகின்ற மனித உரிமை மீறல்களை செவ்விகள், செய்மதிப்படங்கள் அடங்கிய செய்திகள் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தமைக்காக மேஹா ராஜகோபாலன் மற்றும் Alison Killing, Christo Buschek ஆகிய மூவருக்கும் புலிட்ஸர் விருதுகிடைத்திருக்கிறது.
குமாரதாஸன். பாரிஸ்.
12-06-2021