வரி செலுத்தாமல் ஐரோப்பிய சந்தையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இழக்க நேரிடும் என்பதால் பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.
“ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில், தற்போதுள்ள சட்டங்களை ஆய்வு செய்வதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கை அரசு அறிக்கை ஒன்றினை இந்த வார ஆரம்பத்தில் வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சமார் ஒரு வருடம் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகேர மற்றும் உதவி காவல்துறை பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோர் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு நாளின் பின்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கைக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம், ஐரோப்பிய சந்தையை எளிதில் அணுகுவதற்கு வாய்ப்பாக காணப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட உதவிகளையும் இழக்கும் அபாயம் இலங்கைக்கு ஏற்பட்டது.
ஜூன் 10, வியாழக்கிழமை பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக கைது செய்யப்படுவதை மையமாகக் கொண்டது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிவில் சமூக ஆர்வலர்கள், சட்டத்தரணிகள் மற்றும் எழுத்தாளர்களை கைது செய்வது, சரியான சட்ட செயன்முறை இல்லாமல் மற்றும் நீதிக்கான அணுகல் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து, ஐரோப்பிய நாடாளுமன்றம் தனது கரிசனையை வெளிப்படுத்தியது.
ஜூன் 14, 2021 அன்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை குறித்த தீர்மானத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் 2021 ஜூன் 10 அன்று ஏற்றுக்கொண்டமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
2021 ஜூன் 10ஆந் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப் பட்டமைக்கு வெளிநாட்டு அமைச்சு வருத்தம் தெரிவிக்கின்றது. ‘இலங்கையில் நிலைமை, குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்’ என்ற தலைப்பிலான இந்தத் தீர்மானமானது உண்மைக்கு மாறான கருத்துக்களைக் கொண்டிருப்பதுடன், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியில் இலங்கை மேற்கொண்டுள்ள பன்முக முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தவில்லை.” என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கடும் கவலையை வெளிப்படுத்தியுள்ளது, அதாவது “குடிமக்கள் மீதான கட்டுப்பாடுகள், பரவலான தன்னிச்சையான கைதுகள், உரிய செயல்முறை நடைமுறைகள் அற்ற தடுத்து வைப்புகள் சிறுபான்மையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மற்றும் அரசாங்கத்திற்குள் அதிகரிக்கும் இராணுவமயமாக்கல்” உள்ளிட்ட விடயங்கள் குறித்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தன்னிச்சையாக கைது செய்யப்படுவதற்கும் இலங்கையில் முஸ்லிம் அல்லது ஏனைய சிறுபான்மைக் குழுக்களை தடுத்து வைப்பதற்கும் முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற கூற்றை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
“அரசாங்கம் தனது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் அதன் அரசியலமைப்பு ஆணை மற்றும் சர்வதேச கடமைகளுக்கு ஏற்ப பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 12 (2) ஆனது, இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து, பிறந்த இடம் அல்லது அத்தகைய காரணங்களை அடிப்படையாகக் கொண்ட பாகுபாட்டை தடை செய்கின்றது. என குறிப்பிடப்பட்டுள்ளது.
அஹ்னாப் தடுத்து வைப்பு
இலங்கைக்கு எதிரான கடுமையான நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஒரு வாரத்திற்குள், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த அஹ்னாப் ஜசீம் என்ற இளம் கவிஞர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என அவரது குடும்ப உறுப்பினர்கள் அல்லது அவரது சட்டத்தரணிகளுக்கு அறிவிக்கப்படாததால் அவர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகும் வாய்ப்பை இழந்ததாக சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர, உப காவல்துறை பரிசோதகர் சுகத் மென்டிஸ் ஆகியோர் சுமார் 10 மாதங்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் இரண்டு சந்தேகநபர்களையும் விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், கம்பஹா மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை ஒப்புக் கொண்ட மனித உரிமைகள் கடமைகளை நிறைவேற்றப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால், தற்போதைய ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஆணைக்குழுவிடம் கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
பொறுப்புக்கூறல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மற்றும் நல்லிணக்கத்தில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய இடைத்தரகர்களை அரசாங்கம் தொடர்ந்தும் புதுப்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு நவம்பரில், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை மீள்பரிசீலனை செய்யப்படும்போது, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மனித உரிமைப் பதிவு குறித்து ஆராய்வதோடு, சர்வதேச மனித உரிமைக் கடமைகளைச் செயல்படுத்துவது உட்பட வலுவான மதிப்பீட்டையும் வழங்கும்.
மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஏற்பாடு மஹிந்த ராஜபக்ச நிர்வாகத்தால் செயல்படுத்தப்படாததால், பெப்ரவரி 2010 இல் முன்னுரிமை வரி சலுகையான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தப்பட்டதோடு, நல்லாட்சி அரசாங்கம் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச உறுதிமொழிகளை அமுல்படுத்தும் என்ற நம்பிக்கையில் 2017 மே மாதம் மீண்டும் வழங்கப்பட்டது.