குற்றப்புலனாய்வு பிரிவு நாட்டின் சட்டத்தை மீறி செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபருக்கு தடுப்புக்காவல் உத்தரவைக் கோரி குற்றப்புலனாய்வு திணைக்களம், சட்டத்தில் இல்லாத விதிகளை செயற்படுத்த முனைவதாக, கைதிகளின் உரிமைக்காக செயற்படும் முன்னணி குழு ஒன்று தெரிவித்துள்ளது.
“உண்மையில், இலங்கை சட்டத்திற்கு அமைய நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்படும் ஒருவரை தொடர்ந்து குற்றப்புலனாய்வு பிரிவு அல்லது நிர்வாகக் காவலில் வைக்க எவ்வித ஏற்பாடுகளும் இல்லை”
ஜூன் 16 புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அண்மையில் கைது செய்யப்பட்ட பல்லேவத்த கமகே சமிந்த தில்ருக் என்ற சந்தேகநபர், கடுவளை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு, குற்றப்புலனாய்வு திணைக்களம் தடுப்புக்காவல் உத்தரவைக் கோரியதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
“இவ்வாறு இல்லாத ஒரு விதியின் ஊடாகவே, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த நபரை ஒப்படைக்குமாறு அவர்கள் கோருகின்றார்கள்.
இலங்கையின் சட்டத்தில் இல்லாத ஒரு விதியைப் பயன்படுத்தி இந்த கோரிக்கை விடுக்கப்படுகின்றது.”
நாட்டின் சட்டத்திற்கு அமைய செயற்படுமாறு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்த சட்டத்தரணி, கைதிகளின் அண்மைய தலைவிதியை நினைவு கூர்ந்தார்.
“உடனடியாக, காவற்துறையினரும் தொடர்புடைய அதிகாரிகளும் காவலில் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், தங்கள் சொந்த நலன்களுக்காக மற்றவர்களைக் கொல்வதையும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.”
கைது செய்யப்பட்ட தன்னுடைய வாடிக்கையாளரின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக காவற்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது தொடர்பில் சட்டத்தரணி நினைவு கூர்ந்தார்.
தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் இருந்த தாரக தர்மகீர்த்தி விஜேசேகர அல்லது கொஸ்கொட தாரகவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக, பொலிஸ் மாஅதிபருக்கு அவரது சட்டத்தரணியால் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
தினெத் மெலன் மாம்புலா என்ற சந்தேகநபர் பொலிஸ் காவலில் இருந்த சமயத்தில் கொல்லப்பட்டார்.
கைதிகளின் உயிருக்கு தொடர்ந்து காணப்படும் ஏற்படும் ஆபத்தை முடிவுக்குக் கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கைதிகளின் உரிமைகள் பாதுகாப்புக் குழு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
2020 ஜூன் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் பொலிஸ் காவலில் எட்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த வருடம் அறிவித்தது.
தாரக தர்மகீர்த்தி விஜசேகர மற்றும் தினெத் மெலன் மாம்புலா ஆகியோர் ஆயுதங்களைக் காட்ட அழைத்துச் செல்லப்பட்ட சந்தர்பத்தில், சட்டவிரோதமாக கொலை செய்யப்பட்ட நிலையில், மேலும் மூன்று பேரின் உயிரிழப்புகள் குறித்து, காவல்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 49 வயதான டி.சுனில் இந்திரஜித் மரணம், 22 வயது சந்திரன் விதுஷனின் மரணம் மற்றும் இரு பிள்ளைகளின் தந்தையான 48 வயது மொஹட் அலிகானின் மரணம் ஆகியவற்றுக்கு காவல்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.