வடமாகாண அரச உத்தியோகஸ்தர்களிடம் இருந்து கொவிட் -19 க்காக என சேகரிக்கப்பட்ட 2 கோடியே 38 இலட்ச ரூபாய் நிதியினை வடமாகாண ஆளுநர் சேகரிக்கப்பட்ட நோக்கை விட வேறு தேவைகளுக்கு ஒதுக்கி உள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது.
கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளரான மு.தமிழ்ச்செல்வன் , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக எழுப்பிய கேள்வி மூலமே குறித்த விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களிடம் ஆளுநரின் அறிவித்தலுக்கு அமைய கொவிட் 19 இற்காக திரட்டப்பட்ட 2 கோடியே 38 இலட்சம் ரூபா நிதியில் 30 இலட்சம் ரூபா நிதி தேசிய கொவிட் 19 நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
மிகுதி 2 கோடியே 8 இலட்சம் ரூபாவை வடக்கில் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் வீடு, மலசல கூடம் இல்லாதவர்களுக்கு செலவு செய்கின்றனர். வீட்டிற்காக ஒரு பயனாளிக்கு ஒன்பது இலட்சம் ரூபா வீதம் 20 பயனாளிகளுக்கும், மலசல கூடத்திற்கு ஒரு பயனாளிக்கு 140000.00 ஆயிரம் ரூபா வீதம் 20 பயனாளிகளுக்கும் என 2 கோடியே 8 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் பி.சி.ஆர் இயந்திரம் போதாமை தொடர்ச்சியான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. வடக்கு மாகாண சபையின் கீழ் உள்ள மாவட்ட , பிரதேச மற்றும் ஆரம்ப வைத்தியசாலைகளில் நிலவும் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு அந்தந்த வைத்தியசாலை நிர்வாகங்கள் தொடர்ச்சியாக உதவிகளுக்கு நிதி உதவி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கைகள் எவற்றுக்கும் செவி சாய்க்காது , வீடு கட்டுவதற்கும் , மலசல கூடம் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு நேற்றைய தினம் 4.8 மில்லியன் ரூபா பெறுமதியான தானியங்கி ஆர். என். ஏ பிரிப்பு இயந்திரம் ஒன்று தனியாரால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
அந்நிகழ்வில் துணைவேந்தர் , வடக்கில் பலரிடமும் , பல மாதங்களாக இந்த இயந்திரத்திற்கான நிதியினை அன்பளிப்பு செய்யுமாறு கோரிக்கை விடுத்த நிலையில் தான் குறித்த தனியார் அந்த இயந்திரத்தை அன்பளிப்பு செய்தார் என தெரிவித்திருந்தார்.
கொவிட் – 19க்காக என சேகரிக்கப்பட்ட நிதியினை வீடு கட்டுவதற்கும் , மலசல கூடம் கட்டுவதற்கும் ஆளுநர் பெருமளவு நிதி ஒதுங்கி உள்ளார். நிதி வழங்கியவர்கள் கொவிட் – 19 காகவே நிதியினை வழங்கிய போதிலும் , வடமாகாணத்தில் கொரோனா அச்சம் இன்னும் நீங்காத நிலையில் , பி.சி.ஆர் இயந்திர பற்றாக்குறை உள்ளிட்ட பல வைத்திய தேவைகள் வடமாகாணத்தில் காணப்படும் நிலையில் , கொவிட் – 19 க்காக வழங்கப்பட்ட நிதியினை வேறு தேவைகளுக்கு ஒதுக்கியமை தொடர்பில் நிதி வழங்கிய உத்தியோகஸ்தர்கள் கேள்வி எழுப்ப முடியாது கையாலாகாதவர்களாக உள்ளனர்.
ஒரு தேவைக்காக நிதி சேகரிக்கப்பட்டால் , அதனை அந்த தேவைக்கே பயன்படுத்த வேண்டும் என்பதே அறம். அந்த தேவை நிறைவுற்று பின்னர் மேலதிகமாக நிதி காணப்பட்டால் அதனை வேறு தேவைகளுக்கு பகிர்ந்தளிக்க முடியும். ஆனால் வடக்கில் கொரோனா அச்சம் நீங்காத நிலையிலும் வைத்திய , சுகாதார தேவைகள் உள்ள நிலையில் வீடு கட்டுவதற்கும் , மலசல கூடம் கட்டுவதற்கும் நிதியினை ஒதுக்கியுள்ளார்.
வீடு , மலசல கூடங்கள் கட்டுவதற்கு அரசாங்கம் , வேறு சில நாடுகள் , அரச சார் சார்பற்ற நிறுவனங்கள் என பல தரப்பினரும் உதவி வரும் நிலையில் , கொவிட் – 19க்கு என சேகரித்த பணத்தினை ஆளுநர் இத் தேவைகளுக்காக ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது