சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டுத்திட்ட தெரிவுகளில் ,அரசியல் தலையீடுகள் உள்ளதாகவும் , அதனால் பயனாளிகள் தெரிவில் பெரும் மோசடிகள் இடம்பெறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதேவேளை அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சரின் சிபாரிசுகளை கூட தூக்கி வீசி விட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரதும் , அவரின் ஆதரவாளர்களின் சிபாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
நாட்டில் பெருந்தொற்று அபாயம் உள்ள நிலையில் அலுவலகர்களை தேவையற்று கடமைக்கு அழைக்க வேண்டாம் என கூறப்பட்ட நிலையில் ஒரே தடவையில் சுமார் 50 கிராம மட்ட உத்தியோகஸ்தர்களை அழைத்து கடந்த 17ஆம் திகதி பிரதேச செயலர் வீட்டுத்திட்ட தெரிவு தொடர்பிலான கூட்டம் ஒன்றினை நடாத்தி இருந்தார்.
அதன் போது 50 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களுக்கும் , வேறு இடங்களில் வீடு உள்ளோருக்கு என வீட்டு திட்ட தெரிவுக்குள் உள்வாங்க தகுதியற்றவர்கள் பெயர்களையும் வீட்டு திட்டம் தேவையானோர் பட்டியலில் இணைக்குமாறு , உத்தியோகஸ்தர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
வன்னியில் இருந்து சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மீள் குடியேறிய 45 பேருக்கு வீடு தேவை என யாழ்.மாவட்ட செயலகத்திற்கு பெயர் விபரம் அனுப்பட்ட போதிலும் அத்துடன் மேலதிகமாக 155 பேரின் இணைக்குமாறும் உத்தியோகஸ்தர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
வீட்டு திட்டத்திற்கு தாம் சொல்லும் பெயர்கள் இணைக்காவிட்டால் , அந்த உத்தியோகஸ்தர்களுக்கு நெடுந்தீவு , வன்னி உள்ளிட்ட இடங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் என மறைமுகமாக மிரட்டப்பட்டுள்ளனர். இவ்வாறாக குறித்த பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 44 கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றும் 132 கிராம மட்ட உத்தியோகஸ்தர்களுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை கடந்த 17ஆம் திகதி கூட்டப்பட்ட கூட்டத்தின் போது சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் அதிகாரிகள் கடைபிடிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
கடந்த மாதம் குறித்த பிரதேச செயலகத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு பிரதேச செயலகம் முடக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.