அண்மை வாரங்களில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இரண்டு நகர்வுகள் ஈழத்தமிழர்களுக்கு உற்சாகமூட்டக்கூடியவை. அதேசமயம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடியவை.முதலாவது நகர்வு அமெரிக்கக் கொங்கிரசின் வட கரோலினாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்திருக்கும் ஒரு முன்மொழிவு. அது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தை தாயகம் என்று ஏற்றுக்கொள்ளும் ஒரு முன்மொழிவு. அது இனிமேற்றான் அமெரிக்க கொங்கிரசிலும் செனட் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் அதில் ஓர் அழுத்தப் பிரயோக நோக்கம் இருக்கிறது. அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தின் மீது ஏதோ ஒருவித அழுத்தத்தை பிரயோகிக்க விரும்புகிறது என்று பொருள். இது முதலாவது.
இரண்டாவது ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றம் இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தப்போவதாக எச்சரித்திருக்கிறது. 2017ஆம் ஆண்டு அச்சலுகையை மீளப்பெற்றபோது இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு சில வாக்குறுதிகளை வழங்கியது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது அல்லது அதை அனைத்துலகத் தரத்துக்குத் திருத்துவது,மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசப் பிரகடனங்களை நடைமுறைப்படுத்து ஆகிய வாக்குறுதிகளே அவை. அவ்வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை பற்றி மீளாய்வு செய்யவேண்டும் என்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் எச்சரித்துள்ளது.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்படுமாக இருந்தால் அது இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை பாதிக்கும்.ஏற்கனவே இலங்கைத்தீவு கடன் பொறிக்குள் சிக்கியிருக்கிறது.கொரோனா வைரஸ் மேலும் பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்தியிருக்கிறது. ஒருபுறம் கடன் இன்னொருபுறம் கொரோனா இரண்டுக்கும் நடுவே தடுமாறுகிறது நாடு.யுத்தத்தின் விளைவாக வீழ்ச்சியுற்ற இலங்கைத்தீவின் பொருளாதாரம் இன்றுவரையிலும் மீண்டுஎழவில்லை. யுத்தகாலத்தில் பட்ட கடன்களை தீர்க்க முடியாதிருந்த ஒரு பின்னணியில்தான் இலங்கைத்தீவு சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கியது.தொடர்ந்தும் கடனை அடைக்க கடனை வாங்குவதன் விளைவாக இலங்கைத்தீவின் பொருளாதாரம் முன்னேற முடியாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.கொரோனா வைரஸின் தாக்கத்தால் இலங்கைக்கு வருமானம் ஈட்டித்தரும் துறைகளான உல்லாசப் பயணத்துறை தைக்கப்பட்ட ஆடைகள் ஏற்றுமதி,மத்திய கிழக்கில் தொழில் புரிவோரின் உழைப்பு போன்றன பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
ஒருபுறம் கடன் இன்னொருபுறம் வைரஸ். அதனால்தான் வைரசைக் கட்டுப்படுத்த முழு அளவிலான சமூக முடக்கத்துக்கு போக அரசாங்கம் தயாரில்லை. சமூகத்தை முழுமையாக முடக்கினால் அது பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும்.எனவே பொருளாதாரத்தை பாதிக்காத ஒரு சமூக முடக்கத்தைத்தான் அரசாங்கம் சிந்திக்கின்றது. இது சிலசமயம் வைரஸ் பெருக்கத்தை அதிகப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இவ்வாறானதொரு பின்னணியில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையும் நிறுத்தப்படுமாக இருந்தால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பலவீனமடையும். எனவே அதன்மூலம் ஐரோப்பிய நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு செய்தியை உணர்த்த முற்படுகின்றன.அதாவது சீனாவை நோக்கி செல்வதிலும் மனித உரிமைகளை மீறி செல்வதிலும் இலங்கை அரசாங்கத்துக்குள்ள வரையறைகளை உணர்த்த முற்படுகின்றன என்று எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடாளுமன்றமும் மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் முன்னெடுத்து வரும் நகர்வுகளின் பின்னணியில்தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க மறுபடியும் நாடாளுமன்றத்துள் நுழைகிறார். யுத்தம் இலங்கைத் தீவின் இரண்டு பாரம்பரிய கட்சிகளையும் தோற்கடித்து விட்டது.இலங்கையின் பழம்பெரும் கட்சிகளான யு.என்.பியும் எஸ்.எல்.எப்.பியும் சிதைந்து போய்விட்டன.அவற்றின் சிதைவுகளில் இருந்து தாமரை பொட்டு கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் தோற்றம் பெற்றுள்ளன. இவ்வாறு சிதைந்துபோன ஒரு கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க மறுபடியும் அரங்கினுள் நுழைகிறார்.
அவர் ஒரு வலிய சீவன் எல்லாத் தோல்விகளின்போதும் நெருக்கடிகளின் போதும் ஒருகல உயிரியான அமீபாவைப் போல வழுக்கி வழுக்கி தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு வலிய சீவன்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கட்சி இரண்டாக உடைந்தது. சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய கூட்டு உருவாகியது.அதன்பின் நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் தோல்வியைக் கண்டது. அதற்கு கிடைத்த ஒரே தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கப்போவதாக கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டது.ஆனாலும் கடும் தோல்வியின் பின்னணியில் தேசியப்பட்டியல் மூலம் உள்நுழைவதற்கு ரணில் தயங்கினார். தவிர சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவம் ஒரு கட்டத்துக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்றும் அவர் கருதியிருக்கலாம். எனவே தன்னுடைய காலம் வரும் வரையிலும் அவர் காத்திருந்தார் என்றும் நம்பலாம். ஆயின் இப்போது அந்த காலம் வந்துவிட்டதா?
இல்லை அப்படிக் கூறமுடியாது.ஆனால் சஜித் பிரேமதாச தனது தலைமைத்துவத்தை நிரூபிக்க தவறி விட்டார் என்பது மட்டும் பெருமளவுக்கு நிரூபணமாகியிருக்கிறது.அவர் எதிர்க்கட்சித் தலைவராக வந்ததிலிருந்து நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கவர்ச்சியான விதத்தில் தன்னை நிரூபிக்கத் தவறியிருக்கிறார்.சஜித் தன்னை நிரூபிக்க தவறியமைக்கு பின்வரும் வலிமையான காரணங்கள் உண்டு.
முதலாவது சிங்கள் பௌத்த அரசியலில் காணப்படும் சாதி ஏற்றத்தாழ்வு. சிங்கள பௌத்த உயர் குழாம் அவரை அங்கீகரிக்கத் தயாரில்லை. அவர் தன் கட்சிக்குள்ளேயே போராட வேண்டியிருக்கிறது.இது ஒரு அடிப்படையான தடை. இதே தடை அவருடைய தகப்பனுக்கும் இருந்தது. ஆனால் தகப்பனை செதுக்கிய காலகட்டம் வேறு.மகனைச் செதுக்கும் காலகட்டம் வேறு.
இரண்டாவது காரணம்-யுத்த வெற்றி வாதத்துக்கு தலைமை தாங்கும் ராஜபக்சக்களை மேவி இனவாதத்துக்கு தலைமை தாங்க நாட்டில் ஒருவராலும் முடியாதிருப்பது. இனவாதத்தை கையில் எடுத்தால்தான் ராஜபக்சக்களை சமாளிக்கலாம். ஆனால் அது விடயத்திலும் சஜித் பிரேமதாச வெற்றிபெற முடியவில்லை.யுத்த வெற்றி வாதம் காரணமாக தாமரை மொட்டு கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருக்கிறது. அந்த பலத்தை உடைக்க எந்த ஒரு எதிர்க்கட்சியாலும் முடியவில்லை.
மூன்றாவது காரணம். உலகப் பொதுவான கொரோன வைரஸ். அதுவும் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு தடைதான். அரசாங்கத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி வீதியில் இறக்குவதற்கு வைரஸ் ஒரு தடையாக இருக்கிறது.உலகம் முழுவதுமே மக்கள் எழுச்சிகளையும் திரட்சிகளையும் வைரஸ் நீர்த்துப்போகச் செய்திருக்கிறது. நல்ல உதாரணம் ஹொங்கொங்கில் நடந்த போராட்டம். எனவே வைரஸ் இது விடயத்தில் அரசுகளுக்கே அதிகம் சேவகம் செய்திருக்கிறது. இதுவும் சஜித் தனது தலைமைத்துவத்தை நிரூபிக்க முடியாமல் போனதற்கு ஒரு காரணம்தான்.
இதுபோன்ற பல காரணங்களினாலும் ஓர் எதிர்க்கட்சி தலைவராக சஜித் சோபிக்கத் தவறிவிட்டார்.இந்த இடையூட்டுக்குள்தான் ரணில் நாடாளுமன்றத்துக்குள் வருகிறார். சஜித்தின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பானது சம்பிக்க ரணவக்க போன்றோரை இணைத்துக்கொண்டு ஐக்கிய மக்கள் கூட்டணியாக எழுச்சி பெறக்கூடிய வாய்ப்புக்கள் தொடர்பில் உரையாடப்படும் ஒரு பின்னணியில் ரணில் நாடாளுமன்றத்துக்குள் வருகிறார்.
இலங்கைத்தீவில் இருக்கக்கூடிய ஏனைய எந்தத் தலைவரையும் விட ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஒரு திரட்சியை ஏற்படுத்த தேவையான தகுதி ரணிலுக்கு உண்டு என்று மேற்கு நாடுகள் நம்பக்கூடும். உருவாகக்கூடிய புதிய கூட்டுக்கு அவர் ஒன்றில் தலைமை தாங்கலாம் அல்லது முன்னைய ஆட்சி மாற்றத்தின் போது சந்திரிக்கா செயற்பட்டதை போன்று ஒரு நொதியமாகச் செயல்படலாம்.அவருடைய பாத்திரம் எப்படிப்பட்டதாகவும் அமையலாம். ஆனால் அவரை அரங்கில் செயற்படு நிலையில் வைத்திருக்க வேண்டிய தேவை மேற்கிற்கு உண்டு.
ராஜபக்சக்களின் யுத்தவெற்றி வாதம் எனப்படுவது 2009க்கு பின்னரான இனவாதத்தின் புதிய வளர்ச்சி.அதை தோற்கடிப்பதற்கு தேர்தல் அரசியலில் ஒரே ஒரு கூட்டினால்தான் முடியும்.அது என்னவெனில் இலங்கைத் தீவில் உள்ள மூன்று இன மக்களும் சேர்ந்துருவாக்கும் ஒரு கூட்டு.அதிலும் குறிப்பாக யுத்தவெற்றி வாதத்தின் பங்காளிகள் மத்தியிலிருந்து ஒரு பகுதியை உடைத்து எடுக்கவும் வேண்டும்.இதுதான் 2015இல் நடந்தது.
அந்த தோல்வியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில்தான் ராஜபக்சக்கள் தனிச் சிங்கள வாக்குகளை கேட்டு கடந்த தேர்தல்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றார்கள்.எனவே இனிமேலும் அவர்களை தோற்கடிப்பதற்கு மூவினத் தன்மை பொருந்திய ஒரு கூட்டு அவசியம்.அப்படி ஒரு கூட்டை உருவாக்கத்தக்க சக்தி நாட்டில் இப்பொழுது ரணிலுக்குத்தான் அதிகம் உண்டு என்று மேற்கு நாடுகள் சிந்திக்கின்றனவா? ஆனால்,2015இல் நடந்தது மீண்டும் ஒரு தடவை நடப்பதற்கு ராஜபக்சக்கள் இடம் கொடுப்பார்களா? அல்லது சீனா இடம் கொடுக்குமா? என்ற கேள்விகளுக்கு விடை கண்டால்தான் ஒரு ஆட்சி மாற்றத்தை குறித்து சிந்திக்க முடியும்.
கடனும் வைரஸும் அரசாங்கத்தை சிங்கள மக்கள் முன் அம்பலப்படுத்தி விட்டன. பொருட்களின் விலைகள் ஏறிக்கொண்டு போகின்றன.மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அள்ளிக்கொடுத்த மக்கள் இப்பொழுது அரசாங்கத்தின் மீது கடுமையான அதிருப்தியோடு காணப்படுகிறார்கள்..ஆனால் இங்குள்ள பிரச்சனை என்னவென்றால் இரண்டு வைரஸ்களை முன்னிறுத்தி அரசாங்கம் சிங்கள-பௌத்த ஆதரவுத் தளத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதே.
முதலாவது வைரஸ் இனவாதம்.அதுதான் யுத்தவெற்றி வாதம். யுத்த வெற்றி வாதத்தை முன் நிறுத்தி அதன் மூலம் எல்லாப் பிரச்சினைகளையும் கடந்து போகலாம் என்பதே இலங்கைத்தீவின் நவீன அரசியல் அனுபவமாக காணப்படுகிறது.அதை ராஜபக்சக்கள் வெற்றிகரமாக செய்ய முடியும். ஏனெனில் யாரும் பெற்றுக்கொடுத்திராத ஒரு யுத்த வெற்றியை அவர்கள் சிங்கள மக்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.எனவே இந்த முதலாவது வைரஸ் வீரியம் இழக்காத வரையிலும் ராஜபக்சக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு பலமான கூட்டணியை ஏற்படுத்தினாலும் அது நீண்ட காலத்துக்கு தாக்குப் பிடிக்குமா?
இரண்டாவது வைரஸ் உண்மையான வைரஸ்.கொரோனா.இது எதிர்க்கட்சிகள் ஒரு திரட்சிக்கு போவதற்கு தடையாக காணப்படுகிறது. இந்த இரண்டு வைரஸ்களின் காரணமாகவும் இலங்கை தீவில் ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஒரு திரட்சியை ஏற்படுத்துவதில் வரையரைகள் உண்டு. இவ்வாறான ஒரு பின்னணியில்தான் ரணில் மறுபடியும் களமிறக்கப்பட்டிருக்கின்றார்.
ஆனால்,மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் இலங்கை அரசாங்கத்தை சீனாவிடமிருந்து பிரிக்கப் போதுமானவை அல்ல என்பதை கடந்த காலம் நிரூபித்திருக்கிறது. தொடர்ந்தும் ராஜபக்சக்களை நெருக்கினால் அவர்கள் மேலும்மேலும் சீனாவை நோக்கி போவார்கள்.ஏனெனில் இலங்கைத்தீவின் மிகவும் சிறிய பொருளாதாரத்தைக் கடன்சுமையில் இருந்து காப்பாற்றுவது சீனாவின் மிகப் பிரம்மாண்டமான பொருளாதாரத்துக்கு ஒரு பொருட்டேயல்ல. எனவே சீனா தொடர்ந்தும் ராஜபக்சக்களைப் பாதுகாக்கும். மேற்கிடமிருந்து வரக்கூடிய எந்த ஓர் அழுத்தமும் குறிப்பாக இன்னும் இரண்டு மாதங்களில் ஐநாவில் உருவாக்கப்படவிருக்கும் போர்க்குற்றம் தொடர்பான தகவல் திரட்டுவதற்கான பொறிமுறையும் இலங்கைதீவில் யுத்தவெற்றி வாதத்தை அப்டேட் செய்யவே உதவும். எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் ரணிலின் வருகை உடனடிக்கு ராஜபக்ஷக்களுக்கு அல்ல சஜித்துக்குத்தான் நெருக்கடியை ஏற்படுத்தும்.