முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றிற்கு பிரவேசிப்பதால், ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்தவிதமானப் பிரச்சினைகளும் இல்லை எனத் தெரிவித்த ஐ.ம.சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவே தொடர்ந்தும் செயற்படுவார் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, சஜித்தை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கோ அல்லது அவர் எதிர்க்கட்சி தலைவர் இல்லை என்கிற நிலைப்பாட்டிலோ ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் இல்லை எனவும், சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணிலுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைவார்களெனத் தெரிவிக்கப்படுவதில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை. ரணிலுடன் இருக்கும் டீல் காரர்களே இவ்வாறானப் பொய்களைக் கூறி வருகிறார்கள்.
ரணிலுடன் இருப்பவர்கள், அரசியல் என்றால் ‘டீல்’ செய்வதென நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ரணிலின் தற்போதைய நிலைக்கு இந்த ‘டீல்’ காரர்களே காரணம். இதனை ரணில் புரிந்துக்கொள்ள வேண்டுமெனவும், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை வெளியேற்ற ரணில் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.