இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்)

20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் மிரட்டுவதாக சுட்டிக்காட்டி அதற்கு எதிராகவும், தமது தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொட்டகலை, டிறேட்டன் டீ.டி பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் இன்று (21.06.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என சட்டப்பூர்வமாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கு 800 ரூபாவே வழங்கப்படுகின்றது என சுட்டிக்காட்டும் தொழிலாளர்கள், தோட்ட முகாமையாளரை உடன் இடமாற்றுமாறும் வலியுறுத்தினர்.

நாளொன்றுக்கான பெயருக்கு 17 கிலோ கொழுந்தே முன்னர் பறிக்கப்பட்டது. ஆனால் தற்போது 20 கிலோவுக்கு குறைவாக பறிப்பவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படும் என நிர்வாகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிடுவதுடன், இது தொடர்பில் தொழிற்சங்கங்கள் உடனடி தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

” சம்பளத்துக்கு போராடினால் தொழிலாளர்கள் பழிவாங்கப்படுகின்றனா். அவ்வாறான நடவடிக்கை தற்போது எமது தோட்டத்தில் நடக்கின்றது. அடிப்படை நாட் சம்பளத்துக்கு 17 கிலோ கொழுந்து பறித்தால் போதும் என்ற ஏற்பாடு உள்ள நிலையில் கம்பனிகள் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றன. நிர்வாகத்தின் தான்தோன்றித்தனமான – அடாவடித்தனமான – தொழிலாளர்களை அடிமைகளாக வழிநடத்தும் செயற்பாட்டை அனுமதிக்க முடியாது. ஆகவே, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கமும் இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.” – எனவும் போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

தற்போதைய சூழ்நிலையில் தமக்கான வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், பொருட்களின் விலை உயர்வு சம்பந்தமாகவும் தமது உள்ளக் குமுறல்களையும் தொழிலாளர்கள் வெளியிட்டனர்.

தொழிலாளர்களின் கோரிக்கை மற்றும் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட டிரேட்டன் தோட்ட முகாமையாளர் கூறியதாவது,

” 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்ற முடிவை நிர்வாகம் எடுத்துள்ளது. நிர்வாகம் இருந்தால்தான் தமக்கு வருமானம் என்பதை உணர்ந்து ஒரு டிவிசன் தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். 20 கிலோவுக்கு மேல் பறிக்கின்றனர். டீ.டி. டிவிசன் தொழிலாளர்களே நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்காமல் போராடுகின்றனர். 

நான்  ஐந்து வருடங்களாக முகாமையாளராக பணியாற்றியுள்ளேன். எவருக்கும் அரைநாள் பெயர் வழங்கவில்லை. வறட்சி காலத்தில் கூட முழு பெயர் வழங்கியுள்ளோம். தற்போதைய சூழ்நிலையில் 20 கிலோவுக்கு மேல் கொழுந்து பறிக்காவிட்டால் நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். கொட்டகலை பகுதியில் தேயிலை வளர்ச்சி சிறப்பாக காணப்படுகின்றது. ஹெக்டேயருக்கு அதிகளவான தேயிலைச்செடிகளும் காணப்படுகின்றன. எனவே, இலகுவில் 20 கிலோ எடுக்கலாம.” – என்றார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.