Home இலங்கை காலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும்! -ஏ.எம். றியாஸ் அகமட்.

காலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும்! -ஏ.எம். றியாஸ் அகமட்.

by admin

காலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும், கூத்துமீளுருவாக்கம் கொண்டுள்ள மீளுருவாக்கமும் மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள், சூழற்றொகுதிகள் போன்றவைகளை பாதுகாப்பதற்கான ஆய்வு, கற்றல் முறையாகும்.
-ஏ.எம். றியாஸ் அகமட், (சிரேஸ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்).


இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக நாகரிகங்கள் வளர்ச்சியடைந்த சமூகங்கள், அதன் வரலாற்று அசைவியகக்கங்களின் இயங்கியலூடாக வகுத்துக்கொண்ட அல்லது பெற்றுக் கொண்ட, கற்றுக்கொண்டவையெல்லாம் சுமார் இருநூறு வருடகால வரலாற்றைக் கொண்ட நவீனமானது மூட நம்பிக்கை, அறிவியல் அடிப்படையற்றது, பரிசோதனை செய்ய முடியாதது என்று நிராகரிக்கின்றது. அத்துடன் அறிவுருவாக்க முறைகளின் வித்தியாசங்களை விளங்கிக்கொள்வதையும் மறுக்கின்றது.


எழுத்துமரபல்லாத அறிவுமுறைகளை அதாவது வாய்மொழி வழக்காற்று அறிவு முறைகளை காலனியம் அல்லது நவீனத்துவம் நிராகரிக்கின்றது. இந்த வகையான அறிவு முறைகள் அறிவுபூர்வமற்றதெனவும், இதனை உருவாக்கியவர்கள் அறிவற்றவர்கள் அல்லது பாமரர்கள் எனவும், கணித்தும் வைத்திருக்கின்றது. காலனியத்தால் உருவான நவீன அறிவென்பது, உள்ளுர் அறிதல்கள் மூடத்தன்மையானது, அறிவில்லாதது, மூடநம்பிக்கையில் திளைத்தவை என்றும், உள்ளுர்வளங்களும், அறிவு முறைகளும், திறன்களும் அறிவபூர்பமற்றவை என்றும் நவீனம் கணித்துவைத்திருக்கின்றது.


அறிவுருவாக்கம் பல்வேறு வகைளில் நடைபெற்று வருகின்றது. ஆனால் நவீனமயமாக்கம் எனப்படுகின்ற காலனிய மயமாக்கம் அறிவுருவாக்கம் என்பது எழுத்தினால் மட்டுமே வருகின்ற அனைத்தும் அல்லது அச்சில் வருகின்ற அனைத்தும் என கட்டமைத்து வைத்திருக்கின்றது.
நவீனம் அல்லது காலனித்துவம் என்னும் பெயரில் உள்ளுர் அறிதல் முறைகளை நிராகரித்து,; எங்களைத் தின்ற அல்லது தின்று கொண்டிருக்கும் அரசியல், பொருளாதாரம், வரலாறு, வர்த்தகம், வாய்மொழி வழக்காறு, இயல், இசை, நாடகம் போன்ற உள்ளுர் அறிவு, ஆய்வு, கற்றல், கற்பித்தல், விவசாயம், பயிர்ச்செய்கை, விலங்கு வேளாண்மை போன்ற விடயங்களைப் பேச வேண்டி இருக்கின்றது.


அத்துடன் காலனியம் அறிமுகப்படுத்திய கல்வியும் அதன் எச்ச சொச்சங்களும், உள்ளுர் அறிவுமுறைகள் என்பது பாமரத் தன்மையும், அறிவியல்தன்மையற்றவையும் என கட்டமைத்து, இவைகளுக்கெதிராக நவீன அறிவியலையும் உருவாக்கிவைத்திருக்கிறது.

நவீனத்துவம் அல்லது காலனியம் ஆராய்ச்சிகளையும் விட்டுவைக்கவில்லை. ஆய்வு என்பது எழுத்துவடிவானது. மேற்குஐரோப்பிய, வட அமெரிக்கமயப்பட்டதாக இருக்க வேண்டும். உலகத்தரம் வாய்ந்ததாகவும், நியமமானதாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் இருக்க வேண்டும். அத்துடன் ஆய்வுச் செயற்பாடானது புறவயமானதாகவும், அறிவுபூர்வமானதாகவும் இருக்க வேண்டும்.


எத்தகைய நிலைமைகளிலும் எத்தகைய வழிமுறைகளுக்கு ஊடாகவும் காலனிய ஆதிக்கத்தைத் தக்கவைப்பது என்பது உலக அரசியல், பொருளாதார, சமூகப், பண்பாட்டு நடவடிக்கையாக்கப்படுகிறது. முக்கியமாக மத விவகாரம் அடிப்படைவாத நடவடிக்கையாக இருக்கிறது. உள்ளுர்வழிபாட்டு மரபுகள் அழிக்கப்படுகின்றன. இதன் காரணமான வெறுப்பரசியல் பண்பாட்டுச் சூழலில் அக்கம் பக்கமாக வாழ்ந்திருந்த மனிதர்கள் பகைவர்களாக மாற்றப்பட்டு உறவழித்தலின் மூலம் உள்ளுர் உற்பத்திகள், உருவாக்கங்கள், பகிர்வுகள், விற்பனைகள் என்பவற்றுக்கான சாத்தியப்பாடுகள் இல்லாமல் ஆக்கப்படுகின்றன. அந்த இடத்தில் பல்தேசிய நிறுவனங்களின் உற்பத்திகளால் நிறைக்கப்பட்ட பல்பொருள் அங்காடிச் சங்கிலிகள் கொத்தளம் அமைக்கின்றன.


காலனிய ஆதிக்கத்தை தக்கவைப்பதற்காக வரலாறுகள் கட்டமைக்கப்படுகின்றன. பொதுவாக வரலாறு என்பதே கட்டமைக்கப்பட்டது என்பதும், உண்மையான வரலாறு என்பதும் மிகப் பொய்யானதும் என்பதும் உண்மையானது. ஓவ்வொரு பகுதியினதும் தங்களுக்குச் சார்பாக வரலாறுகளை கட்டமைத்துக்கொள்ளகின்றார்கள். புதுப்புதுத் தரவுகளுடனும் ஆதாரங்களுடனும் தேவை கருதி திரும்பத் திரும்பக் கட்டமைத்துக் கொள்கிறார்கள். இத்தகையதான எந்தவொரு வரலாற்றிலும் பெண்கள் இருந்ததில்லை, விளிம்புநிலை மக்களும் இருந்ததில்லை வரலாறு மனிதனின் கதையாகவும், கதையாடலாகவுமே இருந்து வருகிறது. அதாவது ஆதிக்கம் பெற்ற ஆணின் அல்லது ஆண்களின் கதை.


காலனியநீக்கம்:


மேற்கு ஐரோப்பிய காலத்திற்கு முன்பிருந்தே மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், பயிர் செய்திருக்கிறார்கள், உணவை உண்டிருக்கிறார்கள், நோய்களுக்கு வைத்தியம் செய்திருக்கிறார்கள், பயணம் செய்திருக்கிறார்கள், கட்டடங்கள், குளங்கள், கால்வாய்கள், சுமைதாங்கிகள், சத்திரங்கள், அம்பலங்கள், ஆவிரஞ்சிகள், தண்ணீர் தொட்டிகள் அமைத்திருக்கிறார்கள், அறிவியல் நூல்கள் படைத்திருக்கிறார்கள், பிற மொழி அறிவை பயின்றிருக்கிறார்கள், பிறமொழி நூல்களைப் படித்திருக்கிறார்கள், படைத்திருக்கிறார்கள். அரசமைத்து படையெடுத்து ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்கள், காலனியப்பட்டிருக்கிறார்கள், காலனியப்படுத்தியிருக்கிறார்கள் இது இயல்பான வாழ்வியல் வரலாறு. எதிர்பாராத கொரோனா போன்ற கொள்ளை நோய்களின் தாக்கத்திற்கு உட்பட்டு தப்பிப்பிழைத்து இருக்கிறார்கள், தப்ப முடியாமலும் போயிருக்கிறார்கள்.


ஆகவே காலனிய அறிவுமுறைக் காலத்திற்கு முன்பாக, உள்ளுர் அறிவு முறைகள், கல்விமுறைகள,; பொருளாதார முறைகள், மருத்துவம், விவசாயம், விலங்குவேளாண்மை, வர்த்தக நடவடிக்கைகள், போன்றவை மீண்டும்; உரையாடல்களுக்கு உட்டபடுத்தப்பட வேண்டும். உள்ளுர் அறிவுத் திறன்கள் அதன் உண்மையான, பூரணமடைந்த பரிணாமத்தில் அடையாளம் காணப்படவும் வேண்டும். இவைகளை மீட்டுக்கொண்டுவர, எமது நிலப் பிரதேசங்களின் மிக்குயர் உயல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களான என்ன செய்திருக்கின்றன? எவ்வாறான நடவடிக்கைளை எடுத்திருக்கின்றன? போன்ற கேள்விகளும் முன்வைக்கப்படவேண்டும். நீண்ட நெடிய வாழ்வியல் வரலாற்றோட்டத்தில் இருந்து வெட்டி விலக்கி நவீனமயமாக்கம் என்னும் காலனியமயமாக்கத்துடனேயே வாழ்வும், வரலாறும் அதற்கான அறிவியலும் உருவாக்கம் பெறுவதான நவீன கற்பிதம் கேள்விக்குள்ளாக்கப்படுவதும் அவசியமானதாகும்.
காலனியத்தின் பின்னரான நவீன அறிவிலிருந்தே அறிவுருவாக்கம் தொடங்குகின்றது. தொடர்கிறது என்ற நம்பிக்கையும், பார்வையும் நீக்கம் பெறுவதற்கான அறிவியல் இயக்கமே காலனிய நீக்கமாகும். வரலாறு, பொருளாதாரம், ஆய்வுகள், கூத்து போன்றவற்றை காலனிய நீக்கம் செய்யலாம். இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டவைகளில், தேவையில்லாத பிற்போக்கு விடயங்கள் நீக்கி, நல்லவைகளை, ஆரோக்கியமானவைகளை சேர்த்துக்கொள்வதே மீளுருவாக்கம் எனப்படும்.


காலனிய நீக்கவாதம், நவீன அறிதல் முறைக்குள்ளிருந்து தப்பித்து, காலனியத்திற்கு முன்னான பாரம்பரிய, உள்ளுர், பூர்வீக முறைகளுடன் தொடர்வை ஏற்படுத்தி, உலகத்தின், பூர்வீக முறைகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, உலகத்தின் பல அறிதலமுறைகளை கற்று அல்லது பரிச்சயமேற்படுத்தி புதிய நிலைமை, பதிய சூழலுக்கான அறிவுருவாக்கம்பற்றி உரையாடுகின்றது.


நவீனமும், காலனியமும் கூறிய ஆய்வுச் செயற்பாடுகளுக்குப் பதிலாக, இங்கே காலனியநீக்கம் பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டை முன்வைக்கின்றது. பங்குகொள் ஆய்வுச் செயற்பாடானது, சம்பந்தப்படும், அனைத்து தரப்புகளும் பங்கெடுக்க வேண்டும். அவர்களினது ஆலோசனைகள் கருத்திற ;கொள்ளப்படவேண்டும். கொடுத்து வாங்கும் பகிர்வுப் பொறிமுறையினூடாக இயங்குவதாக இருக்குவதாக இருக்க வேண்டும். அறிவனாது, அதிகாரபூர்வமான தங்கள் நிகழ்வில நிகழ்த்தப்படுவதில்லை. அது பல்வேறு தளங்ளில் பல்வகைப்பட்ட முறைமைகளினூடாக நிகழ்த்தப்படுகின்றன என்ற நவீன அறிவாதிக்கம் பெற்ற நீக்கப் பார்வை கொண்டு இயங்க வேண்டும். இதற்கு காலனிய நீக்கப் பார்வை மிக முக்கியமாகும். அத்துடன் கலையுருவாக்கம் சில மனிதர்களுக்கு சிறப்பியல்பானதும், எல்லா மனிதர்களுக்கு பொதுவானதல்ல என்ற முற்கற்பிதத்தையும் காலனியம் விதைத்திருக்கின்றது. அதுவும் உடைக்கப்பட வேண்டும்.


காலனியநீக்கமானது, தற்போதைய கல்விமுறைகளையும் சிரிப்புக்குள்ளாக்கியுள்ளது. கல்வி என்றால் என்ன? கல்வி ஏன்?, எதற்காக? என்பது அடிப்படையானது. கல்வியை எப்படி ஊட்டுவது அல்லது கற்பிப்பது என்பதெல்லாம் மேற்கூறியவற்றைத் தொடர்ந்து வருவது. ஆனால், கொறொனா பின்புலத்தில், எம்மத்தியிலான, கல்வி அம்மணப்பட்டுப் போயிருக்கிறது. ஆயினும், அம்மணப்பட்டுப் போயிருப்பது தெரியாமல், தொடர்ந்தும் இருப்பது தான் கொறொனாவிலும் பெரும் பேரனர்த்தமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில், எப்படி கற்பிப்பது என்பது தான், பூதாகாரப் பிரச்சனையாக இருக்கிறது.


காலனிய நீக்கமானது பொருளாதார முறைமைகளையும் அம்பலப்படுத்தியிருக்கின்றது. இது பற்றி இரண்டுவிதமான கருதுகோள்கள் நிலவி வருகின்றன. முதலாவது, முதலாளியம் அம்பலபட்டுவிட்டது, கூட்டுறவு, ஆட்சிக்கான காலம் வாய்த்திருக்கிறது. இரண்டாவது, கோப்பறேட்டுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் அல்லது கிடுக்கிப் பிடிக்குள் உலகம் போய்விட்டிருக்கிறது என்பது. கோப்பறேட்டுகளின் முற்றுமுழுதான பார்வைக்குள்ளும், கட்டுக்குள்ளும் வீட்டுக்குள் அடைப்பட்ட மனிதர், இணையவழி அகப்பட்டனர் என்பது மேற்கூறியவற்றுடன் தொடர்புபட்டது.


பொருளாதார வளர்ச்சிப் பற்றிய இதுவரைகால வரைவிலக்கணம் நிராகரிக்கப்பட்டு, மக்களின் மகிழ்ச்சியும், நிறைவான வாழ்க்கையும் முதன்மைக்குரியதாகக் கொள்ளப்பட வேண்டுமென்பது. இவ்வாறான பற்பல விடயங்கள் எழுமாறாக நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலவரங்களைப் புரிந்துக் கொண்டு வாழும் தலைமுறைகளை பற்றி சிந்திக்கப் போகின்றோமா? வேலையற்றப் பட்டதாரி பெருக்கத்துக்கான கல்வியைத் தொடரப் போகின்றோமா? என்பதே எம்முன்னுள்ள கேள்வி. இவை போன்ற, மேலே கூறிய நிறைய விடயங்களை இந்த நூல்பேசிச் செல்கின்றது.


கூத்துமீளுருவாக்கம்:
காலனியநீக்கம் அல்லது நவீனத்தின் நீக்கம் அல்லது நவீனத்தின் அரசியலைப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுதல் என்பதன் தொடர்ச்சியே மீளுருவாக்கமாகும். பொதுவாக மீளுருவாக்கம் என்பது முற்றாக அழிக்கப்பட்ட அல்லது பகுதியாக அழிக்கப்பட்ட, தரம், பண்புகள் குறைக்கப்பட்டவைகளை, மாசு கலக்கப்பட்டவைகளை, அழிவுக்குள்ளாகாத இயற்கையான பகுதிகளை பாதுகாப்பதும், மாசுக்களை அகற்றுவதும், ஆரோக்கியமான புது விடயங்களை சேர்ப்பதுடன், முன்னைய இயற்கையான நிலைமைகளை மீளவரச்செய்து பாதுகாப்பதே மீளுருவாக்கமாகும்.


காலனியநீக்கம் என்பது அறிவார்ந்த முறை என்பதற்குப் அப்பால் அது ஒரு மாதிரியுரு (அழனநட) அல்லது அச்சு (டிடழஉம), அதற்குள் மேற்கூறிய எல்லாவற்றையுமே வாய்ப்புப் பார்க்கலாம். இந்த மாதிரியுரு அல்லது அச்சுக்கூடாகச் செல்லுகின்ற உள்ளீடுகள் மாறலாமேயொழிய வெளியீடுகள் மாறுவதில்லை. வெளியீடுகள் எப்போதும், காலனியம் நீக்கப்பட்ட உள்ளுர், அறிவுச் செயற்பாடாக அல்லது முறையாக அல்லது அறிதலாக மீளுருவாக்கத்திற்கு உட்பட்டிருக்கும்.


கூத்து என்னும் அரங்கச் செயற்பாட்டை அந்த அச்சுக்கூடாக அனுப்பும் போது கூத்து மீளுருவாக்கம் கிடைக்கின்றது. எனவே கூத்துமீளுருவாக்கம் என்பது துறைசார் அறிஞர்கள் சேர்ந்து உருவாக்கியதல்ல. மாறாக அது இயல்பான கூத்தரங்கச் செயற்பாடுகளினூடாக, அதனைத் தலைமுறை தலைமுறையாகப் பயின்றுவரும் சமூகத்தவருடன் இணைந்து கலைவழி உரையாடல்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பங்குகொள்; அரங்க ஆய்வு, தொடர் செயற்பாடாகும். சாதிய, பெண்ணிய, விளிம்புநிலைகளுடன் சம்பந்தப்பட்ட பிற்போக்குக் கருத்துக்கள் நீக்கப்பட்;ட பாரம்பரியக் கூத்துக்கள், மீளுருவாக்கக் கூத்துக்களாக உருவாகின்றன.


இந்த வகையில் மீளுருவாக்கத்தில், கூத்துமீளுருவாக்கம் முக்கியமானதாக அமைகின்றது. மேலும், சமகாலத்தின் பூகோளமயமாக்கத்தினாலும் ஏற்படும் அபாயங்களிலிருந்து சமூகங்களை பாதுகாக்கவும், பொறிமுறைகளைச் கொண்ட ஒரு சமுதாய அரங்காக கூத்தினை அடையாளங்காட்டவும், அத்துடன் கூத்துமீளுருவாக்கம் என்பது ஒரு ஆராய்ச்சி என்பதால், அதற்கு அறிவியல் ஆராய்ச்சி,; சிந்தனைகள், தேடல்கள், கூத்துக்கலைசார் அறிவு, அதுசார்ந்த செயற்பாட்டு அனுபவங்கள் போன்றவைகளை ஆற்றுப்படுத்தவும் கூத்துமீளுருவாக்கமானது முக்கியமானதாக அமைகின்றது.


மக்கள் கூட்டம் கலைந்து செல்லாமல் திரளாக வைத்திருப்பதற்கும், மக்களை சமூகமயப்படுத்துவதற்கும், கூத்தரங்களின் அடிப்படை இயல்புகளான செய்வதன் ஊடாகக் கற்றதல், செவியேறல், மனன முறை, ஆளுமை விருத்திசெய்தல், சமூகம் சார்ந்த சிந்தனை விருத்தி, சமூகம் கார்ந்த வெயற்பாட்டுத் தூண்டலுக்கும் கற்பனை விருத்திக்கும், மிகப்பொருத்தமான கலைவழி விளையாட்டுக் களமாகவும், கல்விக் களமாகவும், இன்னொரு வகையில் கூறுவதானால், மகிழ்வூட்டலுக்கு ஊடான அறிவூட்டலும் திறன் வளர்த்தலுக்குமான சாதனமாகும் கூத்துமீளுருவாக்கம் உதவுகின்றது. இதற்கு கட்டுப்படல், முகாமைத்தவம், வித்தியாசமான கோணத்தில உதாரணமாக விளிம்புநிலை, இலகுவில் நொறுக்கப்படக் கூடியவர்களாக பெண்கள், சிறுவர்கள், விளம்புநிலையிலுள்ளவர்கள் போன்றவர்களின் பார்வைகளுடாக உலகத்தை உலகத்தைப் பார்க்கும் திறன் விருத்தி போன்றவைகளுக்கும் கூத்துமீளுருவாக்கம் உதவுகின்றது.


கூத்துமீளுருவாக்கத்துள் இருக்கும் மீளுருவாக்கங்களை ஒரு அரங்கச் செயற்பாடாக மட்டும் நான் பார்க்கவில்லை. உண்மையிலேயே அதற்குள் வேறு பல விடயங்கள் எனக்குத் தெரிகின்றன.
மீளுருவாக்கம் பல அர்த்தங்களைக் கொண்டு காணப்படுகின்றது. மீளுருவாக்கத்திற்கு வித்தியாசங்களைக் கொண்டாடுதல். பன்மைத்துத்தை மதித்தல். விளிம்புநிலையை உட்கொண்டு வருதல் அல்லது மையப்படுத்தல். முற்போக்காக்குதல்;. மதிப்புக் கொடுத்தல், கௌரவப்படுத்தல். உண்மையைத் கண்டடைதல் போன்ற பல கருத்தேற்றங்கள் இருக்கின்றன.

மறைந்துபோனவைகளை மீளவும் கொண்டுவருவது என்பதைவிட, அடிப்படை அம்சங்களில் மாற்றங்களை உண்டு பண்ணாது, தற்காலத்திற்கு முரணாக அமைகின்ற பிற்போக்கானவைகளில் கருத்தியல்ரீதியான மாற்றங்களை செய்து மீள்கொணர்வதாகும். இது தவறான ஒரு செயற்பாடல்ல. காலத்திற்கு தேவையானது.


எந்தவிதமான ஆய்வுகளும் இன்றி இந்த நாட்டில் பல விலங்குகள், தாவரங்கள் காலனியத்தின்போதும், அதற்குப் பின்வந்த காலங்களிலும் பல்வேறு காரணங்களுக்காக இந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருகின்றன. உதாரணமாக 1950 களில் அறிமுகப்படுத்தப்பட்ட திலாப்பியா மீனின் காரணமாக பல உள்நாட்டு மீனனிங்கள் அதன் வாழிடங்களிலிருந்து துரத்தப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. உணவை மட்டும் கருத்திற்கொள்பவர்கள் இந்த மீன்களின் அறிமுகத்திற்கான ஆதரவையும், உயிரியல்பல்வகைமை, சுற்றுச்சுழல் சமனிலை போன்றவற்றைக் கருத்திற்கொள்பவர்கள், இந்த மீனின் அறிமுகத்திற்கெதிரானவர்களாகவும் கருத்துக்களை தெரிவிவப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். இதே போன்றுதான் அலங்கார மீனாக இறக்குமதி செய்யபட்ட கிளாஸ் கிளினர் என்னும் மீனும், மற்றைய மீன்களை துரத்தி, அழித்து இன்று நீர்நிலையெங்கும் பெருக்கெடுத்துநிற்கின்றன. இந்த வகையிலேயே நவீனம் அல்லது நவீன அறிவு என்னும் பெயரில் இறக்குமதி செய்து நடுகைசெய்த சீமைக்கருவேலம், இப்பில் இப்பில், காயா போன்ற மரங்களையும், அறிமுகப்படுத்திய ஆற்றுவாழை, சல்வீனியா உதாரணத்தில் கொள்ள வேண்டும். இன்று நமது நாடு எதிர்கொள்ளும் அந்நிய ஆக்கிரமிப்பு தாவர, விலங்குகளினால் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகளுக்கு நவீனமே காரணமாகும்.


இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக, எங்களுக்கேயுரிய, தனித்துவமான பயிர்ச்செய்கை முறை இருந்தது. அது நவீனம் என்னும் பெயரில் அல்லது பசுமைப் புரட்சி என்னும் பெயரில் விளைச்சலை அதிகரிக்க இரசாயனப் பொருட்களை அதிகளவில் பாவித்த போது, சுற்றுச்சூழலும், மனிதர்களும் பல இழப்புக்களைச் சந்திக்க வேண்டியேற்பட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும், தங்களது தொன்மையான நிலங்களுடன் ஆத்மீகரீதியான உறவுகளைப் பேணி வாழ்ந்த தொன்மைக்குடிகள், அந்நிலங்களுடனான உறவுகளை அறுத்து, அந்த நிலங்களைவிட்டு வெளியேறி வலிகளுக்குள்ளானார்கள். மேலும், இந்த நவீனமானது இலங்கையின் வடமேல் மாகாணத்தில் பெருமளவு எண்ணிக்கையிலான இளைஞர்களின் சிறுநீரகங்களை பாதிப்படையச் செய்திருந்தது. இந்த வகையிலேயே மழுங்கடிக்கப்பட்ட விதைகள் (வுநசஅiயெவநன ளநநன), பரம்பரை உருமாற்ப்பட்ட உயிர்கள் அல்லது உணவு (புநநெவiஉயடடல அழனகைநைன கழழன), தொகுக்கப்பட்ட செயற்கை உரங்கள், இரசாயன களை கொல்லிகள், செயற்கையாக பழுக்க அல்லது முதிர்ச்சியடை வைக்கும்;, நீண்ட காலம் பாதுகாக்க பயன்படும் இரசாயனப் பொருட்கள் போன்றவைகளையும் நாங்கள் நோக்க வேண்டியிருக்கின்றது.


நாட்டுக்கோழி அதன் வளரப்பு முறை, அதன் உணவு முறை என்பதற்கூடாக, அது தேக ஆரோக்கியத்திற்கு ஏன் உகந்தது என்று சொல்கின்றோம், புறொய்லர் கோழி ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்று சொல்லுகின்றோம். ஆனால் நவீனம் புறொய்லர் கோழிகளை போசித்து வளர்க்கின்றது ஏன்? இதற்கு பின்னாலுள்ள காரணங்கள் யாவை? இதே போன்று அஜினமோட்டோ, சூப் கட்டிகள் புற்றுநோயை உருவாக்கும் நஞ்சு என்று நினைக்கும் மனப்பான்மையை அகற்றியது எது? வெள்ளையாயிருப்பது சிறந்தது என ஊட்டப்பட்டு, நஞ்சாகிய வெள்ளைச் சீனி, வெள்ளை அரிசி, வெள்ளைக் கோதுமை மா போன்ற உணவுகளை சிறந்த உணவாக எங்களை கருத வைத்தது எது? வெள்ளையாயும், சிவப்பாயும் இருப்பது அழகானது என கட்டமைத்து, ஒரே இரவில் கறுத்த தோலை வெள்ளைத் தோலாக மாற்றும் தோற்பூச்சு மற்றும் முகப் பூச்சு அழகு சாதனப் பொருட்களை சிறந்தது என தொடர்புசானதங்களினூடாகவும், விளம்பரங்களினூடாகவும் எங்களை நம்ப வைத்தது எது? போன்ற கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டும்.

இவைகளுக்கு காலனியநீக்கம் மற்றும் நவீனத்துவத்தின் அரசியல்பற்றிய அறிவும், புரிதலும் அவசியமானதாகும். பல நூற்றாண்ணடுகளாக எங்களுக்குள்ளேயே ஒரு சூழலியல் கலாசாரம் சார்ந்த தன்னிறைவான விவசாய பொருளாதாரம் இருந்து வந்திருக்கின்றது. அப்போது எங்களுக்கு பொருளாதார பிரச்சினைகள் எழும்போது, அதனைத் தடுக்க அல்லது குறைக்க, எங்களுக்குள்ளேயே பல முறைகள் இருந்திருக்கின்றன. எங்களிடம் சீட்டு, முறை, கோழி வளர்ப்பு, ஆடு, மாடு வளர்ப்பு முறைகள் இருந்திருக்கின்றன. ஆடுகள், மாடுகள் பண நோட்டுக்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நேரடியாக உதவி செய்தல், மொய் அல்லது வட்டா முறைகள் எற்பளுக்குள்ளே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. எங்களின் பயிர்ச்செய்கை முறைகள் (பிரதான, ஊடுமுறை, வேலிமேல், வேலியோர பாதையோர, வரம்போர, மருத்துவ, மூலிகை, இலைக்கறி, மரக்கறி, தானிய, குடிபான), விலங்கு வளர்ப்பு (பறவை, கால்நடைகள், மீன்) முறைகள் எங்களுக்கு ஆரோக்கியமான உணவளித்து, எங்களின் நெருக்கடியான காலங்களில் எங்களின் கடினங்களைப் போக்கியிருக்கின்றன.


ஆனால் உலகத்தில் நவீனம் உருவாக்கிய அனைத்துப் பொருளாதார முறைகளும் பொய்த்துப் போயிருக்கின்றன. இலாபத்தை அடிப்படையாகக்க் கொண்ட பொருளாதார முறைகள் காரணமாக இயற்கை வளங்கள், அதீததமாகச் சுரண்டப்பட்டு, சுற்றுச்சூழல் சமனிலை குலைக்கப்பட்டு உயிரினப் பல்வகைமையை அழிக்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக குறோனா என்னும் மாயப் பேயால் சூழப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இறந்து கொண்டிருக்கின்றோம்.


வடக்கு, கிழக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னர், உதவி செய்வதற்காக முதலைக் கண்ணீருடன் வந்த அதிகரித்த நிதி நிறுவனங்களின் நுண்கடன் திட்டம் காரணமாக சாதாரணமாக கடனை வாங்கி, பொருளாதாரம் மேலும் தாழ்ந்து நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றார்கள். உயிரிழந்து கொண்டிருக்கின்றார்கள்.


நவீனம் அல்லது காலனியமானது அரசியலில் நாங்கள் யாரை நம்புவது? நம்பக்கூடாது? என்ற விடயங்களை எங்களுக்கு உணரச் செய்திருக்கிறதா? அதனை நாம் உண்மையில் உணர்ந்திருக்கிறோமா? போன்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேட வேண்டியிருக்கின்றது. அவைகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை என்றுதான் இருக்கின்றோமா?


1995களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நுழைகின்றேன். இலங்கைக் கற்கைகள் என்ற முதலாவது வருடப் பாடத்தின் நுண் கலைகள் என்னும் பாடப் பிரிவிற்கு கலாநிதி ஜெயசங்கர் விரிவுரையாளராக எங்களுக்கு கற்பிக்க நுழைகின்றார். எங்களுக்குப் பாடம் எடுக்கின்றார். அன்று தொடக்கம் அவருடனான தொடர்பு எனக்கு ஏற்படுகின்றது.


எங்களை வாசிக்க வைக்கின்றார். அரங்க, சுற்றுச்சூழல், சமூகம்சார் செயற்பாடுகளில் ஈடுபடச் செய்கின்றார். அவர் ஆசிரியராக இருந்ததைவிட வழிகாட்டியாகவே இருந்தார்.
அவருடைய விரிவுரைகள், அவருடைய பீடத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பெரும்பாலும்முறை சாராதவைகளாவே இருந்தன. பெரும்பாலான அவருடைய செயற்பாடுகளுக்கு ஒரு சாரார் எப்போதும் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்தவர்களாவே இருந்தார்கள். பிந்தைய காலப் பகுதியில் நான் விரிவுரையாளராக வந்த பின், புதியகல்வி முறைகளை அறுமுகப்படுத்துவதற்கான பயிற்சி பட்டறை என்னும் பெயரில் மூன்று நட்சத்திர விடுதிகளில் தங்கவைக்கபட்டு, புதிய கற்றல், கற்பித்தல் முறைகளை சொல்லித் தந்தார்கள். அதற்கு மாணவ மைய கற்றல் என்று பெயர். ஆசிரியரை சும்மா இருக்க விட்டுவிட்டு, அல்லது குறைவாக இயங்கவிட்டுவிட்டு, மாணவர்களை இயங்கச் செய்தல். அதாவது குறிப்பிட்டளவு கற்றுக்கொடுத்துவிட்டு, பெரும்பாலான நேரங்களில், மாணவர்களை தேட, ஆராய, செயற்பட, வாசிக்க, எழுத, பேச, உரையாடல்களை, ஆற்றுகைகளை நிகழ்த்த விட வேண்டும் என்றார்கள். இதுதான் எங்களுக்கு ஜெயசங்கர் இருபது வருடங்களுக்கு முன் சொல்லித் தந்தது. அதற்கு அவர் எதிர்மறையான விமர்சனங்களுக்கும் உள்ளாக நேர்ந்தது. இதுதான் எங்கள் மரபார்ந்த முறை. இதுதான் மீளுருவாக்கம். எங்கள் பாரம்பரிய, உள்ளுர் அறிதல் முறைகளுடன், பிற்போக்கு, பிழையான விடயங்களை நீக்கிவிட்டு, நவீனத்தின் நல்ல அம்சங்களையும் கலந்து செய்தல்.


மீளுருவாக்கம் பல அர்த்தங்களைக் கொண்டு காணப்படுகின்றது. மறைந்துபோனவைகளை மீளவும் கொண்டுவருவது என்பதைவிட, அடிப்படை அம்சங்களில் மாற்றங்களை உண்டு பண்ணாது, தற்காலத்திற்கு முரணாக அமைகின்ற பிற்போக்;கானவைகளில்; கருத்தியல்ரீதியான மாற்றங்களை செய்து மீள்கொணர்வதாகும். இது தவறான ஒரு செயற்பாடல்ல. காலத்திற்கு தேவையானது.


ஜெயசங்கர் செய்தது, செய்துகொண்டிருப்பது என்பதுதான் மீளுருவாக்கம் என்பது எனது நீண்டநாள் வாதம். அவருடைய பெரும்பாலான செயற்பாடுகளில் செயற்பாட்டிலும் நேரடி அனுபவம் உள்ளவன.; ஏற்கனவே நான் கூறியதுபோல மீளுருவாக்கம் என்பது அறிவார்ந்த முறை. அது ஒரு மாதிரியுரு (அழனநட) அல்லது அச்சு (டிடழஉம), அதற்குள் எல்லாவற்றையுமே வாய்ப்புப் பார்க்கலாம். இந்த மாதிரியுரு அல்லது அச்சுக்கூடாகச் செல்லுகின்ற உள்ளீடுகள் மாறலாமேயொழிய வெளியீடுகள் மாறுவதில்லை. வெளியீடுகள் எப்போதும், காலனியம், பிற்போக்குக் கருத்தியல்கள் நீக்கப்பட்ட உள்ளுர், அறிவுச் செயற்பாடாக அல்லது முறையாக அல்லது அறிதலாக மீளுருவாக்கத்திற்கு உட்பட்டிருக்கும்.


கூத்தை உள்ளீடாக்கினால், வெளியீடாக கூத்துமீளுருவாக்கம் கிடைக்கும். இதே போன்று பயிரைப் போட்டால் பயிர் மீளுருவாக்கம் கிடைக்கும், இதே போல விலங்கு வேளாண்மை, பொருளாதாரம், வணிகம், அரசியல், விiளாயாட்டு, கல்வி, ஆய்வு, உணவு, போசணை, மருத்துவம், கலை, இலக்கியம் எதனையும் உள்ளீடாக்கலாம். வெளியீடாக, எப்போதும், காலனியம் நீக்கப்பட்ட உள்ளுர், அறிவுச் செயற்பாடு அல்லது முறை அல்லது அறிதல் நிறைந்த அவைகளுக்கு மீளுருவாக்கங்கள் வெளியீடாகக் கிடைக்கும்.


மீளுருவாக்கம் என்பது இன்றைய நவகாலனித்துவச் சூழலில் மனிதர்களின் சுயசார்பான வாழ்வியலைத் தக்க வைப்பதற்காகன விடுதலைக் கொள்கையினை வலியுறுத்தி அதனைச் சாத்தியமாக்கும் செயல் மைய சிந்தனைப் போக்காக செயற்படுகின்றது. இதன் காரணமாக மீளுருவாக்கம் என்பது சமகால பூகோளமயமாக்கல் போன்ற ஆபத்துக்களிலிருந்து நமது சமூகங்களையும், தாவர, விலங்கு, நீர் உயிருள்ள சமுதாயங்களையும், நமது சுற்றுச்சூழல்களையும் பாதுகாக்கும் ஒரு பொறிமுறையேயாகும். இதற்கான மேலதிகமான ஆய்வுகளும், தேடல்களும் வளர்த்தும், விரித்தும் செல்லப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More