இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கேள்வி

ஒருநாளைக்கு ஆயிரம் என முப்பது நாளைக்கு முப்பதாயிரம் ரூபா சம்பளத்தை தோட்ட தொழிலாளர் பெறுகிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா, ஜனாதிபதி அவர்களே! தனது உரையில், “சிலோன் டீ” பற்றி பேசிவிட்டு, தோட்ட தொழிலாளரை மறந்த ஜனாதிபதி கோதாபயவிடம்  இதை நான் கேட்க விரும்புகிறேன் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமனற் உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இன்று எதிரணி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதுபற்றி மனோ கணேசன் மேலும் விவரித்து கூறியுள்ளதாவது,

விலைவாசி உயர்வுக்கு கொரோனா என காரணம் காட்டும் ஜனாதிபதியால், தனது பத்தொன்பது மாத ஆட்சியின் முழு அலங்கோலத்தையும் கொரோனா என்ற திரையை போட்டு மூட முடியாது.

ஜனாதிபதி கோதாபயவை நினைத்து, எல்லே குணவன்ச தேரர் இன்று கண்ணீர் விட்டு அழுகின்றார். இன்னொருவரான முருத்தெட்டுவே தேரர் திட்டி  தீர்க்கிறார். உண்மையில் அழ வேண்டியது அவர்கள் அல்ல, நாங்களே. ஆனால், இவர்கள் அழுது திட்டுகிறார்கள். இவர்கள்தான் இந்த ராஜபக்ச அரசாங்கத்தை உருவாக்கிய பெளத்த தேரர்கள். இவர்களின் அழுகையும், திட்டுமே  இந்த அரசின் இலட்சணத்ததை படம் பிடித்து காட்டுகிறது.  

இன்று இந்நாட்டில் ஆடை தொழில் ஏற்றுமதியின் எதிர்காலம் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. இவர்களின் மனித உரிமை மீறல் காரணமாக ஜிஎஸ்பி சலுகை இல்லாமல் ஆக போகிறது. இதனால், இந்த ஏற்றுமதி வருமானம் நின்று போகலாம். சுற்றுலாதுறை முழுமையாக  நின்று போய் விட்டது. மத்திய கிழக்கு பணியாளர்களின் வாழ்வும், வருமானமும் இன்று கேள்விக்கு உரியதாக மாறி உள்ளது.

இந்நிலையில், இன்றும் அன்றும், என்றும் இலங்கைக்கு வெளிநாட்டு வருமானத்தை பெற்று தருவது தேயிலை ஏற்றுமதியே. இதனாலேயே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கான தனது உரையில்,  “சிலோன் டீ” பற்றி பேசினார். ஆனால்,  “சிலோன் டீ” யின் பின்னால் உள்ள உழைப்பாளிகளின் உயிர் வாழ்வு அவருக்கு மறந்து விட்டது.        

தோட்ட தொழிலாளரை அப்படியே தொழில் அமைச்சர் நிமல் சிறிபால சில்வாவிடம் ஒப்படைத்து விட்டு நீங்கள் சும்மா இருக்கிறீர்கள். அவர்களை தோட்ட நிறுவனங்களிடம் பணயக்கைதிகளாக விட்டு விட்டீர்கள். உங்களை அரசில் தோட்ட தொழிலாளரை பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற கட்சி குறட்டை விட்டு தூங்குகிறது.

இலங்கை சிலோன் தேயிலை தொடர்பாக பேசிய ஜனாதிபதி, இலங்கைத் தேயிலையின் பின்புலத்தில் இருக்கும் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் பேச மறந்துள்ளார். அது தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு நாங்கள் ஞாபகப்படுத்த விரும்புகிறோம். எப்பொழுதும் போலவே இன்றும் நாட்டில் மிஞ்சியுள்ளது, தேயிலை உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் ஏற்றுமதித் தொழில்துறை மட்டுமே.

இந்தத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் ஒரு கணமேனும் நினைத்துப் பார்த்தீர்களா என அவரிடம் நான் வினவ விரும்புகின்றேன், கவலை கொள்கிறேன். அவர் சற்றும் அதுகுறித்து நினைத்துப் பார்த்தது போல் தெரியவில்லை. தோட்டத் தொழிலாளர்களும் இந்த நாட்டின் பிரஜைகளே.

தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத்தருவதாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கு எத்தனை நாட்களுக்கு அந்த சம்பளம் வழங்கப்படுகிறது? நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 30 நாட்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் கிடைப்பதாக ஜனாதிபதி நினைக்கிறாரா? அவ்வாறு இல்லை. ஏழு அல்லது எட்டு நாட்களுக்கான சம்பளமே அவர்களுக்குக் கிடைக்கிறது. அதுபோல, நாளொன்றுக்கு அவர்கள் பறிக்க வேண்டிய கொழுந்தின் எடை, தோட்டத்திற்கு தோட்டம், நிர்வாகத்திற்கு நிர்வாகம் மாறுபடுகிறது. தான்தோன்றித்தனமாக அவர்கள் அதனை நிர்ணயித்துக் கொள்கின்றனர். புத்தகத்திலே குறிப்பிடப் பட்டிருப்பதைப் போன்று அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்ற எண்ணப்பாட்டிற்கமைய, அந்த நியாயம் அவர்களுக்கு கிடைக்கவில்லை, 5000 ரூபாய் உதவிப் பணமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை,

தோட்ட தொழில் துறை இது ஒரு ஏற்றுமதி தொழில். இதில் எப்படி கொரோனா வருகிறது? வருமானம்தான் வருகிறது. இதில் கிடைக்கும் அரசின் வரி வருமானம் மூலம் தோட்ட தொழிலாளருக்கு நிவாரணம் வாங்குங்கள்.

இதேபோல் நடுக்கடலில் மிதந்த இரசாயன திரவியம் கொண்ட, தீப்பற்றிய கப்பலை யார் இங்கே இலங்கை கடலுக்குள் கொண்டு வர சொன்னது? துறைமுக மாஸ்டரா ? அல்லது உங்கள் அமைச்சரா? உங்கள் அரசா? அதில் பெருந்தொகை காப்புறுதி கிடைக்கும் என கற்பனை செய்தீர்களா?

இதனால் இன்று பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரை தோட்ட தொழிலாளரைப்போல், மீனவர்களும் நடுத்தெருவுக்கு வந்து கொண்டுள்ளார்கள். அது மன்னார் வரை போய் விட்டது. அவர்கள் வாழ்க்கை உடைகிறது. நம் கடலின் மீனவ செல்வங்கள் பேரழிவை சந்திக்கின்றன. அதேபோல் இலங்கை மக்களின் சாப்பாட்டு மேசைகளில் இன்று மீன் உணவு இல்லை. மீன் வாங்க சமைக்க எல்லோரும் பயப்படுகிறார்கள். மீன் உணவும் இல்லை. மீனவர் வாழ்வும் இல்லை.

அதேபோல், உங்கள் உரக்கொள்கை சந்தி சிரிக்கிறது. இரசாயன உரம் வேண்டாம். சேதன உரம் வேண்டும். என்ற கொள்கை பற்றி எங்களுக்கு நீங்கள் தொலைக்காட்சியில் வந்து விரிவுரை நடத்த வேண்டாம். அது எங்களுக்கு தெரியும். அதை ஒரே நாளில் செய்ய முடியாது. உலகில் நூற்றுக்கு நூறு சேதன உரத்தால், பயிர் செய்யும் நாடு என்ற ஒன்று கிடையாது.

நெல் விவசாயிகள் மட்டுமல்ல, காய்கறி விவசாயிகள், கிழங்கு விவசாயிகள், தேயிலை பயிர் என நாடு முழுக்க இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகசூல் குறைய போகிறது. இன்றைய நாளை விட, இன்னமும் சில மாதங்களில் நிலைமை மோசமடைய போகிறது. இது தொடர்பாக உங்களுக்கு யாரோ கொடுத்த இற்றுப்போன கயிற்றை நீங்கள் விழுங்கி, சாப்பிட்டு விட்டீர்கள். அதுதான் உண்மை.  

ஆகவே ஜனாதிபதி கோதாபய அவர்களே,  உங்களது பத்தொன்பது மாத அலங்கோல ஆட்சியினால், தோட்ட தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் ஆகிய அனைவரும் இன்று வாழ்விழந்து தெருவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.