பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தனது டுவிட்டரில் படமொன்றை பதிவேற்றியிருந்தாா்.
மேலும் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில், அவர்களுக்கு ஏன் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை எனவும் அவா் கேள்வியும் எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் குறித்த சுமந்திரன் பதிவேற்றியுள்ள படத்தில் உள்ள நபர் சீன பிரஜை இல்லை எனவும் , அவர் அக்கரைப்பற்றை சேர்ந்த மொஹமட் ஹனிபா எனும் இஸ்லாமியர் எனவும் , அவர் யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியை சேர்ந்த தமிழ் பெண்ணொருவரை திருமணம் முடித்து குடத்தனையில் வசித்து வரும் நிலையில் , அப்பகுதியில் இடம்பெறும் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளார் எனவும் அங்கஜன் ராமநாதன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
இந்நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள சுமந்திரன் , “இந்த நபர் சீன நாட்டவர் அல்லர், இலங்கையர் என்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிழைக்கு வருந்துகிறேன். எதிர்காலத்தில் வடக்கில் பணிபுரியும் பிற உண்மையான சீனர்களின் படங்கள் இடுகையிடப்படும்”என குறிப்பிட்டுள்ளார்.