ராஜபக்ஸக்கள் குடும்பத்திடம் அனைத்து அதிகாரங்களையும் வழங்குவதுதொடர்பில், நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டுமென தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு பசிலே காரணம். அவரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க, பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸவால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென கூறுகிறார்கள். இதனூடாக மறைமுகமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் தோல்வியடைந்துவிட்டார்கள் என்றே கூறுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அவர்களால் முடியாதென்பதே இதனூடாக விளங்குவதாகவும் தெரிவித்த அநுர, இது உண்மை. ஜனாதிபதிக்கு பிரதமருக்கும் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்றார்.
பசில் ராஜபக்ஸவுக்குப் பின்னர் மற்றொரு ராஜபக்ஷவால் நாட்டை கட்டியெழுப்ப முடியுமென கூறுவார்கள். உண்மையில் நாட்டைக் கட்டியெழுப்புவது என்பது தனிநபர் கையிலோ அல்லது மெஜிக்காரர்கள் கையிலோ இல்லை எனவும் தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஸவே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர். 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவராக பசில் நியமிக்கப்பட்டார். எனவே நாட்டில் ஏற்பட்டுள்ளப் பொருளாதாரப் பிரச்சினைக்கும் நாட்டு மக்கள் முகங்கொடுக்கும் பொருளாதாரப் பிரச்சினைக்கும் பசிலே காரணம் எனவும் தெரிவித்தார்.