முல்லைத்தீவில், செம்மலை கிராமசேவகர் பிரிவு முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக கொவிட்தடுப்பு பாதுகாப்பு செயலணி அறிவித்துள்ளது.
நாயாற்று பகுதியில் தென்னிலங்கையினை சேர்ந்த 5 மீனவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாயாற்று பகுதியில் புத்தளம்,வெண்ணப்புவ,கறுக்குபனையினை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் பருவகால கடற்தொழில் நடவடிக்கைக்காக சென்றுள்ளனர்.
இவர்கள் தொடர்பில் எந்தவித பதிவுகளும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கோ அல்லது வேறு அரச திணைக்களத்திற்கோ தெரியாத நிலையில்,
இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று அரச திணைக்களங்களாலோ அல்லது பாதுகாப்பு தராப்பாலோ கண்காணிப்பு முன்னெடுக்கப்படவில்லை.
இவர்கள் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காத நிலையினை நேற்று (02.07.21) சுகாதார அதிகாரிகள் சென்று பார்வையிட்டு சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்ந்துவரும் பகுதியில் 74 பேருக்கே பி.சி.ஆர் பிரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன ஏனையவர்கள் சம்மதிக்கவில்லை என சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். புத்தளம்,நீர்கொழும்பு பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வருபவர்களே இங்கு காணப்படுகின்றார்கள்.
இந்த மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து குறித்த நாயாற்று பகுதியில் வாடி அமைத்து தொழில் செய்துவருபவர்களின் பகுதியினை முடக்க நேற்று கேரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேசிய கொவிட் 19 தடுப்பு பாதுகாப்பு செயலணியினால் செம்மலை கிழக்கு பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.