போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தெரிவில் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன், சகல பிரதேச செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
அதனால் பயனாளிகள் தெரிவில் வெளிப்படைத் தன்மையைப் பின்பற்றுவதற்காக உரிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மாவட்டச் செயலாளரினால் சகல பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவில் வீட்டுத் திட்ட பயனாளிகள் தெரிவில் அரசியல் தலையீடு உள்ளமை செய்திகள் வெளியாகி இருந்தன. தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவுப் பட்டியலில் ஆரம்பத்தில்
வழங்கப்பட்ட பட்டியலில் இல்லாத 38 பேரின் விவரங்கள் பின்னர் வழங்கப்பட்ட பட்டியலில் இருந்தமை தொடர்பிலேயே சர்ச்சை எழுந்தது.
எனவே பயனாளிகள் தெரிவில் எழுந்துள்ள பிரச்சினைகளைச் சீர்செய்ய பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அவையாவன,
மாவட்ட செயலகத்தினால் தங்களுடைய பிரதேச செயலக பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகள் எண்ணிக்கைக்கு அமைய தங்களினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர் விவரங்களினை தமிழ்மொழியில் உரிய புள்ளியிடல் திட்டத்துடன் பிரதேச செயலகம், இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய சகல கிராம உத்தியோகத்தர்களின் அலுவலகங்கள் மற்றும் கிராம மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அலுவலகங்களில் 06.07.2021 தொடக்கம் 12.07.2021ஆம் திகதிவரை A3 தாளில் காட்சிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
ஒரு மில்லியன் ரூபாய் மற்றும் 0.6 மில்லியன் ரூபாய் பயனாளிகளின் விவரங்கள் பட்டியலை தனித்தனியாகக் காட்சிப்படுத்தவும்
காட்சிப்படுத்தில் அமைச்சினால் வழங்கப்பட்ட பயனாளிகள் தெரிவு தொடர்பான அறிவுறுத்தல் மற்றும் புள்ளியிடல் முறைகளையும் காட்சிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இப் பயனாளிகள் தெரிவு தொடர்பில் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் இது தொடர்பான மேன்முறையீட்டினை பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பிக்க அதுதொடர்பான மாதிரியைக் காட்சிப்படுத்தி அதற்கமைய முறையீடுகளைத் தயாரித்து முழுமைப்படுத்தி வழங்க அறிவுறுத்தல் வழங்கவும். மேன்முறையீட்டு விண்ணப்பதாரி தொடர்பில் இரகசியத் தன்மை பேணப்படுவதனை பிரதேச செயலகம் உறுதிப்படுத்தவேண்டும். கிடைக்கப்பெற்ற மேன்முறையீட்டினை 13.07.2021 தொடக்கம் 16.07.2021 வரையான காலப்பகுதியில் பிரதேச செயலக மீளாய்வுக் குழுவினால் ஆராயப்பட்டு குறிப்பிட்ட மேன்முறையீட்டாளருக்கு தெரிவு செய்யப்பட்டமை அல்லது முன்னுரிமைப்படுத்த முடியாமை தொடர்பில் அதற்குரிய படிவத்தை முழுமைப்படுத்தி தெரியப்படுத்தவும்.
முறையீடுகளுக்குப் பின்னர் இற்றைப்படுத்தப்பட்ட பயனாளிகள் பட்டியலை பிரதேச செயலகம், கிராம உத்தியோகத்தர்களின் அலுவலகங்கள் மற்றும் கிராம மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அலுவலகங்களில் உரிய புள்ளியிடல் திட்டத்துடன் காட்சிப்படுத்துவதுடன் அதனை 19.07.2021ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலகத்துக்கு அனுப்பிவைக்கவேண்டும்.
பிரதேச மட்ட மீளாய்வுக் குழுவின் தீர்மானத்தில் திருப்தியற்றவர்கள் அந்த மீளாய்வுக் குழுவின் தீர்மானப் பிரதியுடன் மாவட்ட செயலகத்திற்கு 23.07.2021ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடு செய்ய அறிவுறுத்தல் வழங்கவேண்டும்.
பிரதேச செயலாளர்களுக்கான இந்த 7 அறிவுறுத்தல் வழங்கிய கடிதத்தின் பிரதிகள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான வடமாகாண ஆளுநர், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.