கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை அமுலில் இருக்கும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு மற்றும் ஜப்பான் அதிகாரிகள் ஆகியோரின் சந்திப்பிற்கு பின்னா் இந்த அவசரநிலை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
ஜூலை 12-ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 22-ஆம் திகதி வரை இந்த அவசரநிலை அமுலில் இருக்கும் என அந்நாட்டின் பிரதமர் யோஷீஹிடே சுகா தெரிவித்துள்ளார்.
இந்தத் திகதிகளில் உணவகங்களிலும் மதுபான விடுதிகளிலும் மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் எனவும் அவை உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கே மூடப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது பார்வையாளர்களை அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்த முடிவினை எடுக்க அரசு அதிகாரிகளும் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
எதிா்வரும் ஜூலை 23ஆம் திகதி டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் அங்கு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு கடுமையான எதிர்ப்பும் உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.