கிளிநொச்சி கல்வி வலய ஆசிரியர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படாமையால் , தடுப்பூசி பெறுவதற்காக தமது ஆசிரிய தொழிலை உறுதிப்படுத்த முடியாத நிலையில் ஆசிரியர்கள் இன்னல்களை சந்தித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி கல்வி வலயத்தினால் ஆசிரியர்களுக்கான தொழில் அடையாள அட்டை வழங்கப்பட்ட போது , அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு , சிங்களம் மற்றும் ஆங்கில மொழி இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஊடகங்களில் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
அதனை அடுத்து மறுநாள் 7ஆம் திகதி முதல் ஆசிரியர்களுக்கான அடையாள அட்டை விநியோகம் கல்வி வலயத்தினால் நிறுத்தப்பட்டது. அடையாள அட்டைகள் வழங்கப்படாமையால் , ஆசியர்கள் தமது ஆசிரிய தொழிலை உறுதிப்படுத்த முடியாத நிலையில் கடந்த ஒரு வருட காலமாக பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர்.
தமக்கான அடையாள அட்டைகளை விரைந்து தருமாறு பல தடவைகள் வலய கல்வி பணிமனையினரை கோரிய போதிலும் அவர்களுக்கான அடையாள அட்டைகள் ஒரு வருட காலம் கடந்தும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்றைய தினம் ஆசியர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகளை பெற சென்ற ஆசிரியர்களுக்கு தமது ஆசிரிய தொழிலை உறுதிப்படுத்துவதற்கான அடையாள அட்டை இல்லாமையினால் , அதிபரிடம் கடிதம் வாங்கி வருமாறு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
அதனால் ஆசிரியர்கள் தடுப்பூசி பெற சென்று வீண் அலைக்கழிவுகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். கல்வி வலயம் , ஆசியர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்குவதற்கு கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக பின்னடித்து , அசமந்தமாக இருப்பதனால் கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் கடமையாற்றும் ஆசிரியர்கள் தமது தொழிலினை உறுதிப்படுத்த முடியாத நிலையில் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.