“ஜனாதிபதி, பிரதமர் மற்றும் புதிய நிதியமைச்சர் ஆகியோர், தமக்கு பணத்தை தேடும் வழி தெரியும் என்று கூறினாலும் அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பணத்தை தேடும் வழியே தெரியுமென்பதை நாங்கள் நன்கு அறிவோம். சொந்த கணக்குகளில் வைப்பிலிடுவதில் அவர்களுக்கு நிகர், அவர்களே” என தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி, ஆனால் நாட்டுக்காக நிதியை திரட்டும் முறைமை, நாட்டின் கடனை செலுத்தபணம் தேடும் முறைமை தொடர்பில் அவர்களுக்கு தெளிவு உள்ளதா என்பது தொடர்பான கேள்வி இப்போதும் எழுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (15.07.21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து
கொண்டு கருத்துரைத்த போதே, ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுனில்
ஹந்துனெத்தி,“ நாட்டின் நெருக்கடிக்கு பிரதான காரணம் கொரோனா என தொடர்ச்சியாக அரசாங்கம் தெரிவிக்கிறது , கொரோனா இல்லாவிட்டால் எமக்கு இந்த நெருக்கடி இல்லை என்கின்றனர். ஆனால், விடயம் வரலாற்று காலம் தொடக்கம் நாம் நிவாரண சலுகைகளைப் பெற்றே எமது செயற்பாடுகளை முன்னெடுத்தோம்” என்றார்.
“கடன் வட்டியின் கீழ் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்த நாடு. ஆனால், நாம் 2007ஆம்
ஆண்டுக்கு பிறகு அபிவிருத்தி பிணைமுறி மற்றும் சர்வதேச சந்தைக்குச் சென்று, அதிக வட்டிக்கு கடன் பெற்றதுடன், அந்த கடன் முதலீட்டுக்கான பிரதிபலனை உரிய முறையில்
முன்னெடுக்காமையால், அந்த கடனை டொலரில் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது”
இதனை எமது மக்கள் நன்றாக பரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இறுதியில் வட்டிச்
சுமையை சுமக்க வேண்டிய நிலை மக்களுக்கே ஏற்படும் எனத் தெரிவித்த அவர், அத்தியாவசிய பொருள்கள் பலவற்றின் இறக்குமதி, கட்டுமானப் பணிகளுக்கான மூலப் பொருள்கள் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளன. அவ்வாறு செய்தும் டொலர் நெருக்கடியிலேயே நாம் இருக்கிறோம்.”
அரசாங்கம் இந் நெருக்கடி தொடர்பில் எதிர்வரும் மாதங்களுக்கு எவ்வாறு செயற்பட போகின்றது என்பதை, நாட்டுக்கு சொல்ல வேண்டும். இப்போது ராஜபக்ஸ வியாபார நிறுவனம், தனிப்பட்ட சொத்தாக கருதி எமது நாட்டின் வளங்களை விற்கின்றது. இதுவா அரசாங்கத்தின் கொள்கை,என கேள்வி எழுப்பி உள்ள சுனில் ஹந்துனெத்தி,
கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதி ஆனதும் மெஜிக் செய்வார் என்றனர். ஆனால், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ நிதிப் பிரச்சினையைத் தீர்ப்பார் என்று இப்போது சொல்கின்றனர்.
அவரது அமெரிக்கா முறையைப் பயன்படுத்தியாவது இந்த நெருக்கடிக்கு பதில் சொல்ல வேண்டும் என சுனில் ஹந்துநெத்தி கேட்டுக்கொண்டார்.