இலங்கையை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதுடன், உரிய பொருளாதார முகாமைத்துவத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் நேற்று முற்பகல் அலரி மாளிகையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
நாடு சில தடவைகள் முடக்கப்பட்டமையால், உள்நாட்டிலும் வௌிநாடுகளிலும் இருந்து அரசாங்கத்திற்கு நிதி கிடைக்கும் வழிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் பணம் கிடைக்கும் முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு கூடிய விரைவில் நாடு திறக்கப்பட வேண்டும் என நிதி அமைச்சர் கூறினார்.
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் நாட்டில் 1.2 பில்லியன் டொலர் கையிருப்பு காணப்பட்டதாகவும், தற்போது 4 பில்லியனாகக் காணப்படும் கையிருப்பை முகாமைத்துவம் செய்வதன் மூலம், பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும் எனவும் குறிப்பிட்ட நிதி அமைச்சர்,
டொலரின் பெறுமதி அதிகரிப்பது தொடர்பில் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு தயார் எனவும் தெரிவித்துள்ளார்.