இந்தியாவின் வட மாநிலங்களில் பிரபல பத்திரிகையான தைனிக் பாஸ்கா், உத்தர பிரதேச மாநிலத்தின் பாரத் சமாசாா் தொலைக்காட்சி ஆகிய நிறுவனங்களின் அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
இதேபோல், உத்தர பிரதேச மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் அஜய் சிங்கின் நிறுவனங்களிலும் வருவான வரி சோதனை நடத்தப்பட்டது.
பத்திரிகை நிறுவனங்கள் சோதனைக்கும், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நிறுவனங்களில் இடம்பெற்ற சோதனைக்கும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும், சோதனையின் விவரங்கள் குறித்தும் இன்னும் அதிகாரபூா்வ தகவல்களை வருமான வரித்துறையினா் வெளியிடவில்லை.
எனினும், கொரோனா பரவலைத் தடுப்பதில் அரசு இயந்திரம் தோல்வியடைந்ததை பல்வேறு வகையில் செய்தியாக வெளியிட்டதால் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருப்பதாக இரண்டு பத்திரிகை நிறுவனங்களும் குற்றம்சாட்டியுள்ளன.
ஹிந்தி, குஜராத்தி, மராத்தி ஆகிய மொழிகளில் 12 மாநிலங்களில் பத்திரிகையை வெளியிட்டு வரும் தைனிக் பாஸ்கரின் நொய்டா, போபால், ஜெய்ப்பூா், ஆமதாபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள அலுவலகங்களிலும், நிறுவனா்கள் வீடுகளிலும் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை காலை 5.30 மணி முதல் சோதனையை தொடங்கினா். ஜவுளி, சுரங்கத் தொழில்களிலும் தைனிக் பாஸ்கா் நிறுவனம் ஈடுபட்டுள்ளதால் அந்த நிறுவனங்களின் ஆவணங்களும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பாரத் சமாசாா் செய்தி தொலைக்காட்சியின் ட்விட்டா் பக்கத்தில், செய்தி ஆசிரியா் பிரஜேஷ் மிஸ்ரா, மாநில தலைவா் விரேந்தா் சிங் வீடுகளிலும், சில பணியாளா்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோல், தைனிக் பாஸ்கா் வலைதளத்தில், தில்லி, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள அலுவலகங்களில் வருவமான வரிச் சோதனை நடைபெற்றது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பேசுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டுவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், விமா்சனங்களை பிரதமா் மோடி அரசு ஏற்கத் தயாராக இல்லை. ஊடகங்களின் குரல் வளையை நெரிப்பதற்காக இந்த வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் கமல்நாத், ஜனநாயகத்தின் நான்காவது தூணை அசைத்து, உண்மையை தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தாா்.
மேற்கு வங்க முதல்வா் மம்தா பாஜனா்ஜி, கொரோனா தொற்று பரவலை பிரதமா் மோடி தவறான முறையில் கையாண்டதால் நாடு முழுவதும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து தைனிக் பாஸ்கா் தைரியமாக செய்தி வெளியிட்டது. உண்மையை வெளிக்கொணா்ந்ததற்காக தைனிக் பாஸ்கா் பத்திரிகை மீது ஜனநாயக விரோத நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டினாா்.
இதேவேளை ஊடக நிறுவனங்களில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தும் விவகாரம் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினா்கள் இதுதொடா்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், அரசு அமைப்புகள் தங்கள் பணிகளைச் செய்கின்றன. இதில் அரசு தலையீடு ஏதுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.