ஜேர்மனியில் தடுப்பூசி ஏற்றியவர்களை விட ஏற்றாதவர்கள் சுகாதாரக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் வரும் என்று அந்நாட்டு அரசின் உயர்மட்டபிரதிநிதி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
ஜேர்மனியின் “Bild am Sonntag”பத்திரிகைஇத்தகவலை இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்தால் தடுப்பூசி ஏற்றாதவர்கள் – வைரஸ் சோதனைச் சான்றுகளை வைத்திருந்தாலும் கூட – மேலும் புதிய கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என்றுஅதிபர் அங்கெலா மெர்கலின் பிரதமசெயலாளர் Helge Braun தெரிவித்துள்ளார்
“இதன் அர்த்தம் தடுப்பூசி ஏற்றாதவர்கள் உணவகங்கள், சினிமா போன்ற இடங்களுக்குச் செல்வது நீண்ட காலத்துக்கு சாத்தியமாக இருக்காது என்பதாகும். ஏனெனில் தொற்று ஆபத்து மிக அதிகமாக உள்ளது. நாட்டு மக்களது சுகாதாரத்தைப் பாதுகாக்கின்ற கடமையும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது “-என்று அவர் கூறியிருக்கிறார்.
பிரான்ஸ் மற்றும் வேறு சில நாடுகளைப்போன்று ஜேர்மனி தடுப்பூசியைக் கட்டாயமாக்க மாட்டாது என்று அதிபர் அங்கெலா மெர்கல் ஏற்கனவே உறுதிபட தெரிவித்துள்ளார். ஆனால் சமீப நாட்களாக அங்கு புதிதாகத் தொற்றுக்கள் அதிகரித்து வருகின்றன.
ஜேர்மனி அதன் ஐரோப்பிய அயல் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தக் கோடைகாலப்பகுதியில் குறைந்தளவு வைரஸ் தொற்றுக்களையே சந்தித்துள்ளது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக அங்கு டெல்ரா வைரஸ் தொற்றுக்கள் அதிகரிப்பைக் காட்டியுள்ளன.
அங்கு வளர்ந்தவர்களது மொத்த சனத் தொகை யில் 60.8% வீதமானவர்கள் முதலாவது தடுப்பூசியையும் 49.1% வீதமானவர்கள் இரண்டு ஊசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஜரோப்பாவில் முதல் நாடாக கட்டாய தடுப்பூசி, சுகாதாரப் பாஸ் என்பவற்றை உள்ளடக்கிய புதிய சுகாதாரச் சட்டத்தை பிரான்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது. அதற்கு எதிராக அங்கு பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவது தெரிந்ததே.
———————————————————————
குமாரதாஸன். பாரிஸ்.25-07-2021