பாரிஸின் மொபானாஸ் (Montparnasse) ரயில் நிலையத்தில் இருந்து நாட்டின்
தென்பகுதிகளுக்குச் செல்லும் அதிவேக ரயில் (TGV) சேவைகள் நேற்று மாலை முதல் தடைப்பட்டுள்ளன. சுமார் 70 ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான பயணிகளது விடு முறைப் பயணங்கள் தாமதமாகியுள்ளன.
பாரிஸின் புற மாவட்டமான எஸோனில் உள்ள மஸ்ஸி-பலசு (Massy-Palaiseau) எஸ்.என்.சி.எவ் (SNCF)ரயில் நிலையம் அருகே தரை அகழ்வுப் பணிகள் நடந்துகொண்டிருந்த ஒரிடத்தில் திடீரென நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு RER B, C மற்றும் அதிவேக ரயில்(TGV) மார்க்கங்களது முக்கிய சந்திக்கு அருகே நேற்று மாலை நிகழ்ந்த இந்த அனர்த்தத்தில் பொறியியலாளர் ஒருவர் இடிபாடுகளில் சிக்குண்டு உயிரிழந்தார்.
கடந்த பல மாதங்களாக கட்டட வேலைகள் நடைபெற்றுவந்த ஓர் இடத்திலேயே
திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச் சரிவை அடுத்து பாதுகாப்புக் கருதி
அந்த மார்க்கம் ஊடாக நாட்டின் தெற்கு மேற்குப் பகுதிகளுக்குச் செல்கின்ற
விரைவு ரயில் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கோடை விடுமுறைப் பயண நெரிசல் நிறைந்த சமயத்தில் நிகழ்ந்த விபத்துத்
தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படும்என்று ரயில்வே போக்குவரத்து அமைச்சர் Jean-Baptiste Djebbari நேற்றிரவு சம்பவம் நடந்த பகுதியைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை காலை முதலே சேவைகள் வழமைக்குத் திரும்பும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. சேவைகளை மீள ஒழுங்குபடுத்துவதில் நீண்ட நேரதாமதங்கள் ஏற்படும் என்று பயணிக ளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.
26-07-2021