(க.கிஷாந்தன்)
டயகம சிறுமி ஜூட்குமார் ஹிசாலினியின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க கோரியும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட கோரியும் மலையகத்தில் தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தனது மகளின் மரணத்தில் மர்மம் காணப்படுவதாக பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளதையடுத்து சிறுமியின் உடலம் தோண்டி எடுக்கப்பட்டு, மீள் பரிசோதனை செய்யப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், சிறுமி ஹிசாலினியின் பிரேத பரிசோதணை சட்டரீதியாகவும் முறையாகவும் இடம்பெற்று அவரின் உயிரிழப்புக்கு சரியான நீதி கிட்ட வேண்டும், மலையகத்தின் எதிர்கால சிறுவர்களின் உயிர் மற்றும் உரிமை பாதுகாப்புக்கு சிறுமி ஹிசாலினியின் மரணம் ஒரு ஒளியை வழங்க வேண்டும், சிறுமியின் ஆத்மா சாந்தியடைய வேண்டும், அவரின் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, இன்று (01.08.2021) காலை நுவரெலியா மாவட்டத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதனடிப்படையில், பூண்டுலோயா நகரில் பூண்டுலோயா தோட்ட மக்கள், இன்று (01.08.2021) காலை ஒருமணி நேரம் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி பூண்டுலோயா நகரில் ஊர்வலமாக சென்றனர்.