பரந்த நிலப்பரப்பில் குறுக்கிடுகின்ற தடைகள் அனைத்தையும் தாண்டிக் குதித்து முன்னேறும் குதிரைப் பந்தயம் Cross-country riding எனப்படுகிறது. இயற்கையாக அமைந்த தடைகளையும்செயற்கையாக உருவாக்கிய தடுப்புகளையும் தாண்டிப் பாய்ந்து ஓடுகின்றஒரு சாகஸ விளையாட்டு என்று அதைக்கூறலாம். குதிரையேற்றம் என்ற விளையாட்டுப் பிரிவினுள் அது உள்ளடங்குகிறது.
ரோக்கியோவில் நடைபெறுகின்ற 2020ஒலிம்பிக் போட்டிகளின் நடுவே நேற்று இடம்பெற்ற சாகஸ குதிரைப் பந்தயம்பெரும் சோகத்தில் முடிந்தது. சுவிஸ் குதிரை ஓட்ட வீரர் ரொபின் ஹொடெல் (Robin Godel) அவர்களது குதிரை தடை தாண்டும் பந்தயத்தின் நடுவே திடீரெனக் கால் முறிந்து தரையில் சாய்ந்தது. ஜெற் செற்(Jet Set) என்ற பெயர் கொண்ட 14 வயதான அந்ததக் குதிரை படுகாயமடைந்த நிலையில் களத்தில் இருந்து வெளியேற நேர்ந்ததால் பந்தயம் இடைநடுவில் நிறுத்தப்பட்டது.
குதிரை உடனடியாக அம்புலன்ஸ் மூலம் கால் நடை மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டது. குதிரையின் வலது பக்க கால்களின் மூட்டுகள் மற்றும் குழம்புக்கு மேற்பட்டபகுதிகள் குணப்படுத்த முடியாத அளவு தசைநார் சிதைவை வெளிப்படுத்தியதால் அதன் வலிகளைக் கருத்திற் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் குதிரையை ஆழ் உறக்கத்தில் வைக்கமுடிவு செய்யப்பட்டது என்று குதிரையேற்ற விளையாட்டு சம்மேளனம்(equestrian federation) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குதிரையின் உரிமையாளர் மற்றும் சவாரி வீரர் ஆகியோரின் சம்மதத்துடனேயே அதனை ஆழ் உறக்கத்துக்குக் கொண்டுசென்று மரணிக்க வைக்கும் ‘கருணைக் கொலை’ முடிவு எடுக்கப்பட்டது (euthanized) என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பல பந்தயங்களில் விருதுகளையும்நட்சத்திரங்களையும் வெற்றிகொண்டஜெற் செற் குதிரைக்கு நேர்ந்த இந்த அவலம் ஒலிம்பிக் ரசிகர்களையும் குதிரையேற்ற விளையாட்டு சமூகத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
ஜெற் செற்றுக்கு அஞ்சலிக் குறிப்பு ஒன்றை தனது இன்ஸ்ரகிராம் தளத்தில்வெளியிட்ட சுவிஸ் வீரர் ரொபின் ஹொடெல், சமூகவலைத் தளங்களில் இருந்துசில நாள்கள் விலகி இருக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார். இது அவரது முதலாவது ஒலிம்பிக் குதிரைப் பந்தயம்என்பது குறிப்பிடத்தக்கது.
விலங்குகளை அவற்றின் இயல்புக்கும் வலிமைக்கும் புறம்பாக தீவிர பயிற்சிகளுக்குப் பழக்கப்படுத்தி போட்டிகளுக்கும் காட்சிகளுக்கும் பயன்படுத்துவதை விலங்கு உரிமை பேணும் அமைப்புகள்கடுமையாக எதிர்த்துவருகின்றன.
——————————————————————–