இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

வனராணி வடமோடி சிறுவர் கூத்து பனுவல் – சிறுவர் மைய நோக்கு! இரா. சுலக்ஷனா.

ஈழத்து பாரம்பரிய அரங்கச் சூழல் தொடர்பான இவ்விரு நோக்குநிலை என்ற அடிப்படையில் அணுகப்பட வேண்டியவை, கூத்து செம்மையாக்கமும், கூத்து மீளுருவாக்கமும் ஆகும். கூத்து செம்மையாக்கம், கூத்து மீளுருவாக்கம் என்பவை, ஈழத்துத் தமிழ் பாரம்பரிய அரங்கச் சூழல் தொடர்பாக இருவேறுப்பட்டநிலைப்பாடுகளில் நின்று செயற்பட்டவர்கள் பாற்பட்டவையாகவும், ஈழத்துத்தமிழ் பாரம்பரிய அரங்கச் சூழலில், இருவேறுப்பட்ட செயற்பாட்டு முன்னெடுப்புகளாகவும் அமைவதை அவதானிக்கலாம். சுருங்கக்கூறின், இவ்விரு செயற்பாட்டு முன்னெடுப்புகளிலும் முறையே காலனிய மையப்பட்ட காலனிய நலன் பேண் சிந்தனை ( கூத்து செம்மையாக்கம்), பின்காலனிய அல்லது காலனிய நீக்க சிந்தனை ( கூத்து மீளுருவாக்கம்) கோலோச்சி நிற்பதை அவதானிக்க முடியும்.


தேசியமயமாக்கச்சூழலில் முன்னெடுக்கப்பட்ட கூத்துச் செம்மையாக்கம், காலனிய நலன் பேண் சிந்தனையாக, மத்தியதரவர்க்க நலன் பேண் முன்னெடுப்பாக அமைகின்றமையை கீழ்வரும் நூற்குறிப்பு அரண் செய்கின்றது.


“ நேரச் சுருக்கத்திற்கும் நாடகச் செம்மைக்கும் நான் முன்னரேயே குறிப்பிட்ட மத்தியதர வர்க்கப் பார்வையாளருக்கும் தொடர்புண்டு. இவர்கள் பாரம்பரியக் கூத்துக்களைப்படுத்துக்கொண்டே விடிய விடியப் பார்க்கும் கிராமிய மக்களைப் போன்றோர் அல்லர். இப்பார்வையாளர்கள் விடிய விடிய அமர்ந்து நாடகம் பார்க்கும் பின்னணி இல்லாதவர்கள். இவர்கள் அடுத்தநாள் அதிக அலுவல்கள் உள்ளவர்கள். அன்றியும் பல்வேறு நாடகம் பார்த்து, படித்து இரசனை கூடியவர்கள். இதிகாச புராணங்களைக் கல்வி மூலம் கற்றவர்கள். விமரிசனப் பாங்குடையவர்கள், கூத்தை கிராமிய மக்களைப்போல அன்றி புறவயமாக நின்று பார்ப்பவர்கள். எனவே இப்பார்வையாளர்களுக்குத் தக நேரச்சுருக்கமும் செம்மைப்படுத்தலும் இன்றியமையாததாயின.” ( மௌனகுரு.சி. நாடகம் -அரங்கியல் பழையதும் புதியதும் ‘ கூத்தரங்கின் புத்தாக்கம் : பேராசிரியர் சு.வித்தியானந்தனின் பங்கு’)


மேற்படி கூற்று கூத்து செம்மையாக்கம், கூத்தரங்கின் புத்தாக்கம் என பேராசிரியர் சு. வித்தியானந்தனின் செயற்பாட்டு முன்னெடுப்புகளை வரையறை செய்வதோடு, மத்தியதர நலன்பேண் செயற்பாடாகக் கூத்துச்செம்மையாக்கம் அமைந்தமையும் மிகத் தெளிவாக கீறிட்டு காட்டுகிறது.


மற்றுமொரு நூற்குறிப்பு, பின்வருமாறு அமைகின்றது. “ நாட்டுக் கூத்தினை வளர்த்ததோடு அவற்றைப் புதிதமைத்து நகரப்புறப் பார்வையாளர்களுக்கு ஏற்ப, செம்மையான வடிவத்தில் அளித்த பணியையும் சு.வித்தியானந்தன் செய்தார். கிராமங்களிலே ஆடப்பட்ட கூத்துக்களின் அளிக்கைத் தன்மையில் பாமரத் தன்மைகள் நிறைய இருந்தன. ஆடலும் பாடலும் சில வேளைகளில் இணைவதில்லை. மத்தள ஒலி நடிகர்களின் குரலை அமுக்கிவிடும். நடிப்பு அங்கு கவனிக்கப்படாதிருந்தது. பாடல்கள் பல்வேறு சுருதிகளில் இசைக்கப்பட்டு பெரும்பாலும் அபசுரமாகவே ஒலிக்கப்பட்டன. மேடையசைவுகள் திட்டமிடப்படாதனவாயிருந்தன. உடை, ஒப்பனை பாத்திரங்களின் இயைபுக்கு ஏற்றதாயில்லை. இக்குறைகள் யாவற்றையும் மீறிக்கொண்டே கூத்தைக் கிராமிய மக்கள் இரசித்தனர். காரணம் அது அவர்களின் வாழ்வோடு இணைந்திருந்தது.” (மௌனகுரு.சி. ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு ‘புதிய தேடலுக்கான அடித்தளங்கள் இடப்படுகின்றன: கலைக்கழகத்தின் தோற்றம், வித்தியானந்தன் வருகை, நாட்டுக்கூத்தின் மறுமலர்ச்சி )


இந்த நூற்குறிப்பு கூத்துச் செம்மையாக்கச் செயற்பாடு, மத்தியதர நலன் பேண் செயற்பாடாக அமைந்தமையை தெளிவுப்படுத்துவதோடு, மக்களின் வாழ்வோடு இணைந்திருந்த கலையாகிய கூத்தை, அவர்களிடமிருந்து பிரித்தெடுத்து, மத்தியதரவர்க்கப் பார்வையாளர்களுக்குப் பழகிப்போன, படச்சட்டமேடையில் கொண்டு சேர்த்தமையையும் தெளிவுப்படுத்துகின்றது.
காலனிய பார்வையில் நின்று உலகை பார்த்தல் அல்லது ஐரோப்பிய மையத்திலிருந்து உலகநாடுகளை உற்றுநோக்குதல் என்ற சிந்தனாவாதத்தினை அடியொட்டிய பன்மைத்துவங்கள் மறுதலிக்கப்பட்ட நிலையின் வெளிப்பாடு என்பதாகத்தான் படச்சட்டமேடைக்குள் கூத்தினை கொண்டு சேர்த்தமையையும் அதனையே கூத்து என்பதாக பரப்புரை செய்தமையையும் அவதானிக்க வேண்டி கிடக்கிறது.

மிகத் தெளிவாக, மனிதர்கள் வாழ்கின்ற உலகங்கள் பலவாக இருக்கின்ற பட்சத்தில், பன்மைத்துவங்கள் நிரம்பியிருத்தல் என்பது இயல்பு. எனினும், காலனிய நலன் பேணுகை செயற்பாடுகள் எவையாக இருப்பினும், அவை பன்மைத்துவங்கள் மறுதலிக்கப்பட்ட ஒற்றை பண்பாட்டு கட்டமைப்புப்பேணுகையையே விரும்பி ஏற்பதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் தான் காலனிய ஆட்சிக்குட்படுத்தப்பட்ட நாடுகளில், அறிமுகஞ் செய்யப்பட்ட மேடையமைப்பினை கையாண்டு, அல்லது அதனை அடியொட்டிய பார்வையில் எல்லாவகையான நிகழ்த்துகைகளையும் (இங்கு எல்லாவகையான நிகழ்த்துகை என்பது சிறப்பாக கூத்தினை மையமிடுகின்றது) யோசித்துப் பார்க்கின்ற மனநிலை அல்லது மனபாங்கு மிகமிக சாதாரணமாக மேற்கிளம்புகின்றது.


சாதாரண நிலையில், சேக்ஸ்பியரின் நாடகங்களாக இருந்தாலும் அவற்றை காலனிய ஆட்சியில் அறிமுகமாகிய படசட்டமேடையை மையப்படுத்தி கற்பனை செய்கிறோமே தவிர, சேக்ஸ்பியரின் அரங்கவெளியில் நின்று அவரின் நாடகங்களை தரிசிக்கவோ, கற்பனைசெய்து பார்க்கவோ தவறிவிடுகின்றோம். இதுவே காலனியத்தின் மிகப் பெரிய வெற்றி என்பதாகக் கருதக்கிடக்கிறது. இத்தகைய சிந்தனைவெளியில் நின்று செயற்படுகின்ற, காலனியர்கள், காலனிய ஆட்சிக்குட்பட்டோர் நிலைப்பாடு என்பது, பன்மைத்துவங்களை மறுத்து, ஒற்றைப் பண்பாட்டை காணவிளைதல் என்பதாக அமைகின்றது. இந்த நிலைபாட்டினை அடியொட்டிய செயற்பாட்டு முன்னெடுப்புகள் தான் எல்லாத் தளங்களிலும் இடம்பெற்றிருப்பதை உலக வரலாறுகள் எடுத்துக்காட்டுகின்றன.


இதற்குமாறாக, ‘அவரவர் மொழியில், அவர்களின் தேவைகளுக்காக அவர்களே கதைத்தல்’ என்ற காலனியநீக்கச் சிந்தனையின் பாற்பட்டு, ஆங்கிலத்தின்வழி உலகத்தைப் பார்த்தல் என்ற நிலைமாறி, பன்மைத்துவங்களின் வழி, பல்வேறு மொழிகளின்வழி உலகத்தைப் பார்ப்பதற்கும், பேசுவதற்குமான சூழல் வாய்க்க வேண்டியதன் அவசியத்தை, காலனிய நீக்கச் சிந்தனை வலியுறுத்துகின்றது. இந்தநிலையில் தான், பல்வேறு உலகங்களிலும் வாழுகின்ற மக்களின், பன்மைத்துவங்கள் வெளிப்படுவதற்கும், பேசப்படுவதற்குமான சூழல் வாய்க்கப்பெறுகின்றது. சிறப்பாக, காலனிய ஆட்சியும், காலனிய கல்வியும், நிலைநிறுத்தி வைத்திருக்கின்ற அறிவுநிலை என்பது, பாகுபாட்டினை அல்லது வர்க்கப்பரிவினையை (படித்தவர், பாமரர்) மேலும் வலுவடையச் செய்துவருகின்ற நிலையில், பன்மைத்துவ அறிவுருவாக்கத்திற்கானத் தளத்தையும், பன்மைத்துவ அறிவுருவாக்கத்திற்கானத் தேவையையும், காலனிய நீக்கச் சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றார்கள். இந்தநிலையில், கலைகளில் காணப்படுகின்ற, பன்மைத்துவங்கள் வெளிப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் மேற்கிளம்புகின்றன.


இரண்டு மூன்று நூற்றாண்டுகளாகவே உலகத்தின் முக்கால் பகுதி நாடுகள் நேரடியாகவும், ஓரளவுக்கு முழுமையாகவும் காலனித்துவம் மற்றும் எதேச்சதிகாரத்தின் பிடியில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளன. அரசியல் விடுதலை பெற்றும் அந்நாடுகள் அதன் பின்விளைவுகளிலிருந்து மீளவில்லை. காலனித்துவத்தைத் தொடர்ந்து நவீனக் காலனித்துவம் வந்ததால் முன்னைய காலனிய நாடுகளின் மொழி, இலக்கியம், அரசியல், சமூக விழுமியங்கள், கல்விக் கொள்கைகள், தேசியம், பண்பாடு குறித்த கருத்தமைவுகள் ஆகியவற்றில் ஐரோப்பிய மாதிரி வடிவங்கள் போற்றப்பட்டன. (நடராசன். தி.சு. திறனாய்வுக்கலை கொள்கைகளும் அணுகுமுறைகளும், ப. 243)
உணர்வு மற்றும் செயல்பாட்டு நிலைகளில் சுயங்கள் தாழ்த்தப்பட்டன. மரபுகள் ஒடுக்கப்பட்டன. இந்தச் சூழல்களின் எதிர்வினைகளாகவே இவற்றைத் தவிர்ப்பதும், இவற்றிலிருந்து மீண்டு வருவதும் காலத்தின் தேவையாயிற்று. ஐரோப்பிய சிந்தனை வடிவங்களைத் தூக்கியெறிந்துவிட்டு அவ்விடத்தில் தனக்கானதும் சுயமானதுமான கருத்தியல்களையும் செயற்பாடுகளையும் முன்வைப்பது, அவற்றை மறுசீரமைப்பு செய்வது, இவற்றில் பின்னை காலனித்துவம் ஆர்வம் காட்டுகிறது. (கருப்பத்தேவன்.உ. காலனியமும் பின்னைக் காலனியமும் – இலக்கியத் திறனாய்வுப் பின்புலத்தில்) போன்ற கூற்றுக்கள், பின்னைகாலனியத்தின் நோக்கினை அல்லது காலனிய நீக்கத்தின் அவசியத்தினை வலியுறுத்துவதை அவதானிக்க முடியும்.


இதற்கு சமாந்தரமாக இருபதாம் நூற்றாண்டின் முதற்கூற்றில், பாமரர் கலைகள் என்ற அடிப்படையில், தாழ்த்தப்பட்ட உள்ளுர்மரபுகளை காலத்தின் தேவைகருதி மீள்கண்டுபிடிப்பு செய்வதற்கான முயற்சிகள் மேற்கிளம்புகின்றன. இந்தவகையில், ஈழத்தில் காலனிய நலன்பேணுகை செயற்பாடாக அமைந்த, கூத்துச் செம்மையாக்கத்திற்கு மாறாக உள்ளுர்மரபுகளை பேணுகின்ற வகையிலும், கூத்தின் நெறிமுறைகளை பேணுகின்ற வகையிலும் கூத்து மீளுருவாக்கச் செயற்பாடு மட்டகளப்பு சீலாமுனை கிராமத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்றது.


கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டின் தொடர்ச்சியாக, பாரம்பரிய சூழலில் சிறுவர்களின் நிலைப்பாடு தொடர்பாக சிந்திக்கப்பட்டதன் விளைவாக, சிறுவர் கூத்தரங்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பொதுவாக கூத்தரங்கச் செயற்பாடுகளிலும் சிறுவரின் நிலைப்பாடு எதுவாக இருந்தது எனில், பெரியவர்களது கதைகளை விளங்கிக் கொண்டு, சிறப்பாக புராண இதிகாச கதைகளை அடிப்படையாகக் கொண்டமைந்த கூத்துக்களில் தோழி, கட்டியக்காரன் பாத்திரமேற்றாடல் என்பதாகத்தான் இருந்துவந்துள்ளது.


இருபதாம் நூற்றாண்டில், சிறுவர் இலக்கியம் தொடர்பான பிரக்ஞை பூர்வமான முன்னெடுப்புகள் உலகளவில் பிரபல்யமானநிலையில், சிறுவர்களுக்கான கதைகள், சிறுவர்களுக்கான பாடல்கள், சிறுவர்களுக்கான நாடகங்கள் என அனைத்துத்தளங்களிலும் சிறுவர்கள் தொடர்பில் சிந்திக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சிறப்பாக சிறுவர் உளமுதிர்ச்சி குறித்து கவனஞ் செலுத்தப்பட்டு, பிற்போக்கான சிந்தனைகள் மலினப்படுத்தப்பட்டு, முற்போக்கான கருத்துக்களை தாங்கியவண்ணம் சிறுவர் படைப்புகளை படைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதற்கு சமாந்தரமாக சிறுவர்கள் அவரவர் பாரம்பரிய சூழலியல் பரப்பில் அறிவுடையவர்களாக, நவீன கல்விகொள்கையின் பாற்பட்டு பாமரர், அறிவற்றவர் செயல் என புறந்தள்ளி எள்ளிநகையாடாமல், தக்கன கொண்டு தகாதன விளக்கி வாழவும், காலவோட்டத்தின் தேவைகருதி தமது கலைகளை முன்னெடுக்கவுமான உந்துதலும், மனபாங்கும் வளர்வதற்கான சூழலை சிறுவர் கூத்தரங்கு முன்மொழிகிறது. சிறப்பாக, நவீன பரப்பில் சிறுவர் அரங்கும், கல்வியியல் அரங்கும் வலியுறுத்துகின்ற, பேணுகின்ற அம்சங்களையும் சிறுவர் கூத்தரங்கச் சூழலிலும் அவதானிக்க முடியும்.


வகுப்பறைக்குள் பெறுகின்ற கல்விக்கு அப்பாலான கல்வியும், வரையறுக்கப்பட்ட, பாடத்திட்டத்தினை மையப்படுத்தியதாக, பெறுபேறு, சான்றிதழ் நோக்கிய இலக்காக வடிவமைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதற்குமாறாக, எல்லாவகையான திறனாளர்களுக்குமான வாய்ப்பை சிறுவர் கூத்தரங்கு வழங்குகின்றது.


இந்நிலையில், நவீன கல்விமுறையில் ஏற்படுகின்ற அசமத்துவம் களைத்தெறியப்படுவதற்கான வாய்ப்பும் ஏற்படுகின்றது. கல்வி வேறு நடைமுறை வேறு என்றவகையிலான நிலைமைகள் களைத்தெறியப்பட்டு, கல்விக்கும் நடைமுறைக்குமான ஒருமித்த நிலையை சிறுவர் கூத்தரங்கு ஏற்படுத்த விளைகின்றது.


நடைமுறையில் வரையறுக்கப்பட்டதொரு நிலையில் புரிந்துக் கொள்ளப்பட்டுள்ள கல்வி என்பதற்கு மாறாக, பன்மைத்துவ அறிவுருவாக்க நிலைகளுக்கான சாத்தியப்பாடுகளை சிறுவர் கூத்தரங்கு ஏற்படுத்துகின்றது. சிறப்பாக, நவீன கல்விமுறையிலும் மனப்பாடக்கல்வியின் வீறுகண்டநிலையை தான், பரீட்சைத்தாள்களிலும் அவதானிக்கமுடிகின்றது. இந்நிலைக்கு மாறாக, புரிந்து, தெளிந்து படிப்பதற்கும், நடைமுறையில் பிரயோகிப்பதற்குமான தெளிந்தநிலையை கல்வியியல் அரங்கு போன்று சிறுவர்கூத்தரங்கும் ஏற்படுத்திவிடுகின்றது.


சிறப்பாக, செவிவழியேறல் சிறுவர்கூத்தரங்கின் மிகமுக்கிய கற்றல் முறையாகிறது. வாழ்தலுக்கான கல்வி, பரீட்சைக்கான கல்வி, தொழில்வாய்ப்புக்கான கல்வி, சமையலுக்கான கற்கைநெறி என நடைமுறையில் தனித்தனியாக எல்லாவற்றிற்குமான பிரத்தியேகத் தளங்களை உருவாக்கிக் கொண்டு செயற்படுகின்ற நடைமுறை வேறு கல்வி வேறு என்ற நிலைக்கு மாறாக, சமாந்தரமான கல்விமுறையை கூத்தரங்கச் சூழல் பெற்றுக் கொடுக்கின்றது.


கரும்பலகைக்கு அப்பால் எந்தவிதத்திலும் சிந்தனையோட்டத்தை செலுத்தமுடியாதளவிற்கு நடைமுறைகல்வி புள்ளி, பெறுபேறுகளை மையப்படுத்திய இருக்கமான மனநிலையை உருவாக்கிவிட்டிருக்கின்ற நிலையில், சிறுவர்கள் விரும்புகின்ற புறச்சூழலில் விளையாட்டாக கற்கவும், விரும்பி கற்கவுமான வாய்ப்பு சிறுவர்கூத்தரங்கில் வரையறுக்கப்படுகிறது. மிகமுக்கியமாக கல்வியியல் அரங்க, சிறுவர் அரங்கச் செயற்பாட்டாளர்களின் இணைவு, பாரம்பரிய அரங்கவெளியில் சிறப்பாக சிறுவர் கூத்தரங்கவெளி, கல்வியியல் அரங்குக்குச் சமாந்தரமாகவும் நவீன சிறுவர் அரங்குக்குச் சமாந்தரமாகவும் செயற்படுவதற்கு காரணமாயிற்று. இந்தஅடிப்படையில் உருவாக்கப்பட்டு ஆற்றுகைச் செய்யப்பட்டுவருகின்ற சிறுவர் கூத்துக்களில் வனராணி வடமோடி சிறுவர் கூத்து தொடர்பில், இக்கட்டுரை நோக்குகிறது.


வனராணி சிறுவர் கூத்து
வனராணி வடமோடி சிறுவர்கூத்து, சிவநாயகம் அண்ணாவியாரால் எழுதப்பட்டு, பல்வேறு இடங்களிலும் களரி கண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு சீலாமுனை கிராமத்தில், மூன்றாவது கண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழு நண்பர்கள், சீலாமுனை கலைக்கழக உறுப்பினர்கள், கூத்துக்கலைஞர்கள், சிறுவர்கள், கிராமமக்கள் பங்குபற்றலில் கூத்துக்கான சட்டங்கொடுத்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அதே ஆண்டு தனது ஆய்வுத் தேவையினை பூர்த்தி செய்யுமுகமாக, வினாயகமூர்த்தி விக்னேஸ்வரனால் வெருகல் கல்லடி கிராமத்தில் குறித்த கூத்து அரங்கேற்றங்கண்டுள்ளது. இதற்கு முன்னரான காலப்பகுதிகளிலும், கிழக்குப்பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வு நடவடிக்கைகளுக்காக, வனராணி அரங்கேற்றம் கண்டுள்ளதுடன், மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுத் திறன் செயற்பாட்டுக்குழு நண்பர்களால் பல்வேறு இடங்களிலும் அரங்கேற்றப்பட்டுள்ளமை குறித்தும் அறிய முடிகின்றது.

கதைச்சுருக்கம்
வனராணி வடமோடி சிறுவர் கூத்து சிறுவர் உலகில் நிலவுகின்ற, சிறுவர் தொழிலாளர்களாக அமர்த்தப்படல் என்கின்ற பிரச்சினையை பேசுவதாக அமைகின்றது. வனராணி சிறுவர் கூத்தரங்கின் ஏட்டு பிரதியை சீலாமுனை செ. சிவநாயகம் அண்ணாவியார் எழுதியிருக்கின்றார். வனராணி வடமோடி சிறுவர் கூத்து சிறுவர் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படுதலும் பின்னர் சிறுவர் தம்மை அந்த அடிமை நிலையில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காகப் பிரயத்தனப்பட்டு விடுவித்துக் கொள்வதுமான கதையமைப்பை கொண்டு அமைகிறது.


கட்டியக்காரன், உலகநாதன், உலகநாதனின் மனைவி மங்கையற்கரசி, உலகநாதனின் மகன் அரியராஜன், உலகநாதனின் மகள் சிந்தாமணி, அச்சுதன் உட்பட ஆறு சிறுவர்கள், கொப்பி ஆசிரியர், கூத்தர்கள் (வல்லரசன் கோட்டை அரசன் மந்திரி) வனராணி, சிறுவர் நலன் பாதுகாப்பு சபை தலைவர் ஆகிய கூத்து பாத்திரங்களினைக் கொண்டமைகின்ற குறித்த கூத்தின் கதையோட்டமானது பின்வருமாறு அமைகின்றதுஉலகநாதன் என்பவன் தன்னுடைய தொழிற்சாலை விருத்திக்காக தன் மக்களிடம் ஆலோசனை கேட்கவும் மனைவியாகிய மங்கையற்கரசி, மகன் அரியராஜன், மகள் சிந்தாமணி ஆகியோர் சிறுவர்களை தொழிலில் அமர்தாதீர்கள் என்றடிப்படையில் பலவகையிலும் ஆலோசனை கூறுகின்றனர். ஆலோசனையை ஏற்க மறுத்த உலகநாதன் தொடர்ந்தும் சிறுவர்களை துன்புறுத்தி வருகின்றான். தொழிற்சாலையில் சிறுவன் அச்சுதன் உலகநாதன் இல்லாத வேளையில் வனராணி குறித்த கதையை சொல்லிக்கொண்டிருக்க, அதனை தொழிற்சாலைக்கு திரும்பிய உலகநாதன் காணவே அச்சுதன் துன்புறுத்தப்படுகிறான். மயக்கமான அச்சுதனை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு செல்ல, அங்கிருந்து தப்பித்துக்கொள்ளும் அச்சுதன் கிராமத்தில் கூத்து பயிற்சி நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறான்.


பயிற்சி நிறைவில் அண்ணாவியார் அவனை விசாரிக்க நடந்த விபரீதம் சொல்லுகிறான். மற்ற சிறுவர்களையும் மீட்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்ட அச்சுதன் அண்ணாவியார் ஆலோசனைப்படி கூத்து பயிற்சிகளை பெற்று, வல்லரசு நாடு நோக்கி காட்டு வழியே செல்கிறான்.
செல்லும் வழியில் அச்சுதன் மயக்கமடைய, மயக்கத்தை தெளிவிக்க வந்த வனராணி மயக்கநிலை தெளிவித்து, அவனிடம் எல்லா விடயங்களையும் கேட்டு தெரிந்துகொண்டு அச்சுதனை வலிமை மிக்கவனாக மாற்றியதுடன், சிறுவர் நலன் பாதுகாப்பு சபை தலைவரை சந்தித்து ஆலோசனை பெற்று மற்ற சிறுவர்களையும் மீட்குமாறு வனராணி ஆலோசனை கூறி மறைகிறார்.
அவரின் ஆலோசனைகளின் பெயரில் தலைவரை சந்திக்கும் அச்சுதன், தலைவரின் ஆலோசனைப்படி கூத்தின் மூலம் அவனுக்கு (உலகநாதனுக்கு) எதிராக மக்களை விழிப்படையச் செய்து, சிறுவர்களை மீட்போம் என்று கூற அவரின் ஆலோசனைப்படி செயல்பட ஆரம்பிக்கின்றனர். இறுதியில் மனைவி மக்களிடம் உரையாடும் உலகநாதன் தான் திருந்தியதாக சொல்லி சிறுவர்களை விடுவிக்கிறான். இவ்வாறு வனராணி வடமோடிக் கூத்து சிறுவர் தங்களுடைய உலகத்தில் எதிர்க்கொள்கின்ற சமகால பிரச்சினையை பேசுவதாக அமைகின்றது.

சிறுவர் உரிமை சட்டமும் வனராணியும்
1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் 14 (அ) பிரிவின் மூலம் சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கையைத் தயார் செய்வதற்கு “தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு” தத்துவமளிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் இலங்கையில் வாழும் 18 வயதுக்குறைவான சகல ஆட்கள் தொடர்பிலும் ஏற்புடையதாகும் என்று குறிப்பிடுகின்றது. இவற்றோடு ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமை சமவாயத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதால் அதனை நடைமுறைப்படுத்தவும் கடப்பாடுடையதாகின்றது. இதன்படி சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் சமவாயம் பின்வருமாறு அமைகின்றது. (41 உறுப்புரைகளில் மிகமுக்கியமானவை எனக்கருதப்பட்டவை வைப்புச் செய்யப்படுகின்றன.)


உறுப்புரை 1 – 18 வயதுக்குட்பட்ட ஒவ்வொருவரும் பிள்ளைகளாவர். சமவாயத்தில் குறிப்பிட்டிருக்கும் எல்லா உரிமைகளையும் ஒவ்வொரு பிள்ளையும் அனுபவித்தல் வேண்டும்.
உறுப்புரை 3 – பிள்ளைகள் தொடர்பான சகல செயற்பாடுகளும் முடிவுகளும் அவர்களின் சிறந்த நலன்கனைக் கருத்திற் கொண்டே மேற்கொள்ளுதல் வேண்டும்.


உறுப்புரை 9 – பிள்ளைகளை அவர்களின் சிறந்த நலனை முன்னிட்டு அல்லாமல் (புறகணிப்பு, துஷ்பிரயோகம் போன்ற காரணங்களை முன்னிட்டு அல்லாமல்) பெற்றோரிடமிருந்து பிரித்தல் ஆகாது. பெற்றோர் பிரிந்து வாழ முடிவு செய்யும் பட்சத்தில், பிள்ளை இருவரில் ஒருவரை அல்லது இருவரையும் பிரிந்து வாழும் போதும் இரு பெற்றோருடனும் தொடர்பு வைத்திருக்கும் உரிமை அப்பிள்ளைகளுக்குண்டு.


உறுப்புரை 19 – பிள்ளைகள் சகல வகையான இம்சைகள், புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமையுடையவர்கள். பெற்றோரும் ஏனைய பராமரிப்பாளர்களும் பிள்ளைகளைத் துன்புறுத்தும் உரிமை அற்றவர்கள். பிள்ளைகள் இம்சைகள், புறகணிப்பு ஆகியவற்றுக்கு உள்ளாகாது, தடுக்கவும் அவற்றிலிருந்து மீளவும் வகை செய்யும் செயற்திட்டங்களைப் பொறுப்பேற்கும் கடப்பாடு அரசுக்குரியதாகும்.


உறுப்புரை 28 – எல்லா பிள்ளைகளும் கல்வி கற்கும் உரிமையுடையவர்களாவர். அரசு ஆரம்பக் கல்வியேனும் கட்டாயமாகவும் இலவசமாகவும் கிடைப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
உறுப்புரை 38 – போர்க்காலத்தில் பாதுகாப்பு பெறும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு. 15 வயதுக்கு குறைந்த எந்த பிள்ளையும் போராட்டங்களில் நேரடியாக ஈடுபடவோ ஆயுதப்பிணக்குகளில் சேர்க்கப்படவோ கூடாது. அரசாங்கம் ஆயுதப் பிணக்கினால் பாதிக்கப்பட்ட எல்லா பிள்ளைகளுக்கும் பராமரிப்பும் பாதுகாப்பும் வழங்குதல் வேண்டும்.


உறுப்புரை 39 – ஆயுதப் பிணக்குகளில் சித்திரவதை, புறகணிப்பு, துர்நடத்தை அல்லது சுரண்டலுக்கு உள்ளான பிள்ளைகள் சமுதாயத்தில் மீண்டும் சேர்ந்து கொள்வதற்கான உதவிகளை உறுதி செய்யும் கடப்பாடு அரசாங்கத்தினுடையதாகும்.


இலங்கை சட்ட ஏற்பாடுகள், 18 வயதிற்குட்பட்டோரை சிறுவர்கள் என்றும், எல்லா சிறுவர்களும் 14வயதை அடையும் வரை பாடசாலை கல்வியை பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது. தேசிய சிறுவர் பாதுகாப்பு 1998 இன் 50 ஆம் இலக்கச்சட்டம் (The National Child Protection Act No. 50 of 1998) 39 ஆம் பிரிவு, 18 வயதுக்குட்பட்டோரை சிறுவர் என வரையறுக்கின்றது. இலங்கையின் 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியல்திட்டத்தின் 12 ஆம் பிரிவு சமத்துவம், உரிமைகள் பற்றி சொல்கிறது. 12 (4) பெண்கள், குழந்தைகள் அல்லது ஊனமுற்றவர்களின் முன்னேற்றத்தை தடுக்க எந்த சட்டமும் செய்ய முடியாது என்கிறது. 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களைச் சேவையில் ஈடுபடுத்துதல் சட்டத்தின் கீழ் 2006ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க திருத்த சட்டம் 20 (அ) ஆபத்தான தொழில்கள் என்று கருதப்பட்ட 51 வகையான தொழில்களில் 18 வயதுக்கு குறைந்தோரை ஈடுபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு சிறுவர்களை பாதுகாப்பதற்கான பல்வேறு சட்டஏற்பாடுகள் இருக்கின்ற போதும், வெவ்வேறு சட்டவரையறைகளில், சிறுவர்களின் வயதெல்லை வெவ்வேறாக குறிப்பிடப்படுகின்றமையால், அவர்கள் பாதிப்புக்குள்ளாகின்ற நிலையில், வீழ்ச்சிநிலை என்பது, மந்தகதியிலேயே நிகழ்ந்தேறுகின்றது. ( எடுத்துக்காட்டாக சிறுவர் எனக்கருதப்படுவோர் 18 வயதிற்கு உட்பட்டோர் என்ற போதும் கல்வியின் வயதெல்லை 14 என்பதாக வரையறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடலாம். இந்நீட்சி தொடர்பில் வாதப்பிரதிவாதங்களும் நடைபெற்ற வண்ணமே உள்ளன.)


இந்த பின்னணியில் சிறுவர்களை வேலைகமர்த்தல் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டு களரிகண்டுவருகின்ற வனராணி வடமோடி கூத்தானது முக்கியத்துவமுடையதாகின்றது. சிறுவர்கள் வேலைகமர்த்தல் தொடர்பில் பெரியவர்கள் அறிந்துவைத்திருப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகின்ற தரப்பினர் அது தொடர்பான புரிந்துணர்வுடனும், தெளிவுடனும் இருத்தல் என்பது அவசியமாகும். இந்தவகையிலே குறித்த சிறுவர் கூத்தில், சிறுவர் பாதுகாப்பு நலச்சபை உத்தியோகத்தரின் பாத்திரம் படைக்கப்பட்டிருப்பதாக, உய்த்துணரமுடிகின்றது. இவ்வகையில் கலைகளில் சமகாலச்சூழலை சித்தரித்தல் என்றவகையிலும், கலையை சமகாலத்திற்குரியதாக முன்னெடுத்தல் என்றவகையிலும் சிறுவர் கூத்தரங்கு முக்கியத்துவமுடையதாகின்றது.


தொகுப்புரை
கலைகளை சமகாலத்திற்குரியதாக முன்னெடுத்தல் காலத்தின் தேவைப்பாடாகிறது. அவரவர் சமுதாயக்கலைகளின் பேணுகையும் மாற்றீடும் என்பது குறித்த சமுதாயத்தின் பிரக்ஞை பூர்வமான தெளிவுநிலையில் சாத்தியமடைகின்றது அன்றி, புறத்தாக்கங்களின் வழி ஏற்படுத்தப்படுகின்ற மாற்றீடுகள், நிலைபேறுடைய மாற்றத்திற்கு வழிவகுக்காது என்பது தெளிவாகின்றது. அவரவர் சமுதாயக்கலைகளை முன்னெடுக்கவும் பாதுகாக்கவும், கடப்பாடுடையவர்கள் என்றவகையில் கலைகளை முன்னெடுப்பதுடன், தாமாகவே தமது கலைகளை புறக்கணித்தல் என்ற நிலைபாட்டிலிருந்து மீளுவதும் அது குறித்து சிந்திப்பதும், அவசியமாகின்றது.


பண்பாட்டினதும், கலைகளினதும் பன்மைத்துவங்களையும் அவற்றின்வழி வெளித்தெரிகின்ற பன்மைத்துவ அழகியலையும் தரிசிக்க விளைகின்ற போது, ஒன்றை இன்னொன்றாக மாற்றி, நுகர்விய பண்பாட்டுச்சூழலுக்குரியவர்களுக்கான கலையாக, கலாபூர்வமாக்கி முன்னெடுத்தல் அல்லது செம்மைப்படுத்த விளைதல் என்ற எண்ணப்பாட்டிலிருந்து விடுபட்டு, பன்மைத்துவங்களை ஏற்பதற்கும், காலத்திற்கேற்ப முன்னெடுப்பதற்குமான சாத்தியப்பாடுகள் மேற்கிளம்பும். இந்நிலையில், கலைகளின் பன்மைத்துவங்கள் தடையின்றி வெளிப்படுவதற்கான சூழ்நிலை வாய்க்கப்பெறுவதோடு, அவரவர் சுயங்கள் வெளிப்படுவதற்கும் வாய்ப்பு கிட்டும்.


இந்த அடிப்படையில், கலை, உணவு, மொழி, உடல், சிந்தனை ஆகிய மனித நிலைப்பட்டவை சார்ந்தும் சூழல் சார்ந்தும் காலனிய நீக்கச் செயற்பாடுகளை முன்னெடுத்தலும், முன்மொழிதலும் சர்வதேச அளவில், பல்வேறு படிநிலைகளில், பல்வேறு வடிவநிலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை கண்கூடு. இதற்கு சமாந்தரமான முன்னெடுப்பாக, ஈழத்தில் கூத்துமீளுருவாக்கமும், சிறுவர் கூத்தரங்கச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. “புதியன புகுதல் , பழையன கழிதல்” என்பதற்கமைய, கலைகளில், சமகால சூழலை பேசுதல் அவசியமாகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு, சிறுவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட சிறுவர் கூத்தரங்கு, சிறப்பாக வனராணி வடமோடி கூத்து, சிறுவர் உலகில் நிலவுகின்ற பிரச்சினைகளை மையப்படுத்தி, அதற்கான தீர்வுகளையும் அவர்களே அறிந்து தெளியும் வண்ணம் எழுதப்பட்டு களரிகண்டு வருகின்றது.


சட்ட ஏற்பாடுகள் இருக்கின்ற போதும், அவற்றின் முரண் நிலைகளும், போதாமைகளும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை ஏற்படுத்தி விடுகின்றன. பொதுவாக பாதிக்கப்படுகின்ற தரப்பினர் சட்டஏற்பாடுகள் தொடர்பான போதியளவு தெளிவுடன் இல்லாதிருத்தலும், சவாலுக்குட்படுத்துவதாக அமைகின்றது. இந்நிலையில், கலை வாழ்க்கைக்காக என்றடிப்படையில், கலைகளின் ஊடாக சமகாலத்தை காட்டுதலும், விழிப்படையச் செய்தலும் அவசியமாகின்றது. இதனை உய்த்துணர்ந்து, பல்வேறு கலந்துரையாடல்களுக்கு மத்தியில் சிறுவர் மைய நோக்குநிலையில் “வனராணி வடமோடி சிறுவர் கூத்து” எழுதப்பட்டு களரிகண்டு வருகின்றது.

உசாத்துணை பட்டியல்
1.சிவநாயகம், செ. வனராணி வடமோடி சிறுவர் கூத்;துப் பனுவல்.
2.மௌனகுரு, சி. 2005, நாடகம் – அரங்கியல் பழையதும் புதியதும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
3.மௌனகுரு, சி. 2008, ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு, குமரன் புத்தக இல்லம் கொழும்பு.
4.நடராசன் தி.சு. திறனாய்வுக்கலை கொள்கைகளும் அணுகுமுறைகளும், நியூ செஞ்சரி புக் ஹவுஸ் சென்னை.

 1. http://www.battinews.com/2015/09/blog-post_897.html
 2. http://www.battinews.com/2015/09/blog-post_142.html
 3. http://archives.thinakaran.lk/Vaaramanjari/2014/05/25/?fn=f1405255
 4. https://www.tamilmirror.lk/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/2014-09-28-06-13-41/56-128898
 5. https://voiceofrights.webs.com/slchlid.htm
 6. http://www.thinakaran.lk/2021/01/28/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/62519/2021-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81

இரா. சுலக்ஷனா
நுண்கலைத்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்.

Spread the love
 •   
 •   
 •   
 •   
 •  
 •  
 •  
 •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.