செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் 5 நாள்கள் சாப்பிடாமல் இருந்த பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பின்னர் அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வட்டுக்கோட்டை மூளாய் வீதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜெயமலர் (வயது-61) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தவராவார்.
“அவரது வீட்டில் செல்லப் பிராணியான நாய் கடந்த 5 நாள்களுக்கு முன் திடீரென உயிரிழந்துள்ளது. அந்த சோகத்தில் குறித்த பெண் சாப்பிடாமல் இருந்துள்ளார். இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென மயக்கமடைந்த அவரை உடனடியாக அழைத்துச் சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும் வெளிநோயாளர் பிரிவு அனுமதியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது. அதனையடுத்து அவரது சடலத்தில் கொவிட்-19 பரிசோதனை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
பின்னர் இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்த திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், சடலத்தை சுகாதார முறைப்படி மின்தகனம் அனுமதியளித்தார்