இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவதால் எந்த பிரச்சினையும் இல்லையென குழந்தைகள் வைத்திய நிபுணர் கே.அருள்மொழி தெரிவித்தார்.
யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினுடைய ஏற்பாட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
குழந்தைகளையும் கொரோனா தாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உலகளாவிய ரீதியில் கொரோனா கூடிக்கொண்டே செல்கின்றது. குறிப்பாக பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் குழந்தைகளை தொற்றும் வீதம் அதிகரித்திருக்கின்றது
குழந்தைகளுக்கு வரும் என்பது நிச்சயம் குழந்தைகளுக்கு கூறப்படுவதை மூன்று வகையாக கூறமுடியும் முதலாவது சாதாரணமாக தாக்கப்படுதல் அதன் அறிகுறிகள் தெரியாது, அல்லது அறிகுறிகள் மிகக் குறைந்த அளவில் காணப்படும். இவ்வாறான கொரோனாவே அதிகளவில் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது .
இரண்டாவது தீவிரமாக குழந்தைகளை தாக்குதல் .இது பெரியளவில் தென்னிலங்கையில் பேசப்படுகிறது.ஆனாலும் இங்கு பெரியளவில் இனங்காணப்படவில்லை .
மூன்றாவது குழந்தைகளின் உடல் உறுப்புக்களை தாக்குவதாகும். குறிப்பாக பிள்ளைகள் சோர்வடைதல், சிறுநீரின் அளவு குறைதல், நீராகாரங்களை உண்ணாதிருத்தல், தொடர்ச்சியாக சத்தி எடுத்தல், மூச்சுவிட கஷ்டப்படுவது போன்ற பிரச்சனைகளை நீங்கள் உங்கள் பிள்ளைகளில் கண்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடவேண்டும். தாய்க்கு தன்னுடைய பிள்ளையின் செயற்பாட்டில் வித்தியாசம் தெரியுமாக இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்து வருவது சிறப்பானது.
கை மருத்துவங்களை தவிர்த்தால் நல்லது. குழந்தைகளைத் தேவையற்ற இடங்களுக்கு கூட்டிச் செல்வதை தவிர்க்க வேண்டும். கைகளை கழுவுவதற்கு குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் . இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவதால் எந்த பிரச்சினையும் இல்லை.
உணவருந்தும் போதும் நித்திரை கொள்ளும்போதும் முகக்கவசத்தை அணிய தேவையில்லை. நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வீட்டில் இருப்பார்கள் எனில் குழந்தைகள் வீட்டில் முகக்கவசத்தை போடுவது நல்லது – அவ்வாறில்லாவிடில் தேவையில்லை.
சிலர் குழந்தைகளுக்கு முகக் கண்ணாடி (பேஸ் சீல்ட்) அணிவிக்கிறார்கள். முகக்கண்ணாடி (பேஸ் சீல்ட்) முகக்கவசத்துக்கு மாற்றாக அமையாது. அதேவேளை முகக்கவசத்துக்கு மேலதிகமாக அதனை அணியமுடியும்.
மிக விரைவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட போகின்றது.சில நாடுகளில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது . சீனா போன்ற சில நாடுகளில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் செயற்பாடுகள் நடக்கின்றது. ஆனால் இலங்கையை பொறுத்தவரை குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகின்ற எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றார்.