கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கிராம மட்டங்களில் குழுக்கள்
உருவாக்கப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த ஆளும்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, தடுப்பூசிகள்
மாத்திரம் கொரோனாவுக்கு தீர்வல்ல எனவும் தெரிவித்தார்.
வைரஸ் தொற்று (கொவிட்-19) தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான
நாடாளுமன்ற விவாதத்தில் நேற்று (17.08.21) கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் மாத்திரம் ஒரே தீர்வல்ல. ஒரு தடுப்பூசியை மாத்திரம் செலுத்துவதும் போதாது. இரு டோஸ்களையும் செலுத்த வேண்டும்
எனவும் தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்தியதன் பின்னர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட இரு
வாரங்கள் செல்லும் எனவும், அரசியல் கட்சிகளின் குழு ஒன்றை
நாடாளுமன்றத்தில் நியமித்து, அக்குழுவை சுகாதார அமைச்சுடன் தொடர்புபடுத்தி
நாட்டின் நிலைமைகள் தொடர்பில் அதனூடாகக் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற
வேண்டும் என்றார்.
கிராம மட்டத்திலும் குழு ஒன்றை அமைக்க வேண்டும். கிராமங்களில் சுகாதாரப்
பாதுகாப்புக்களைப் பின்பற்றாதவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்கி, அதனை
சரி செய்ய அக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கிராமத்தில் எவருக்காவது நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை
விரைவாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த அந்தக் குழு ஊடாக நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் . இதுபோன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தால் அதிக நிதியை செலவிடாது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.