ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் நேற்றையதினம் இணையவழி கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், அந்தக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஶ்ரீகாந்தா ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியுள்ள இக் கலந்துரையாடல் சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
குறித்த கலந்துரையாடலின் போது தமிழ் கட்சிகள் இணைந்து ஜெனிவாவிற்கு கடிதமொன்றை அனுப்புவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை முதற்கட்டமாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான கோரிக்கை, அரசியல் கைதிகளின் விடுதலை, திட்டமிட்ட காணி அபகரிப்பை நிறுத்துதல் மற்றும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசையும் இந்தியாவையும் கோருதல் ஆகிய நான்கு விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் இணக்கம் காண்பதற்கு இதன்போது தீா்மானிக்கப்பட்டதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.