“ஹவானா நோய்க்குறி”(Havana Syndrome) என்பது உலகெங்கும் அமெரிக்காவின் ராஜதந்திரிகளைத் தாக்கி வருகின்ற மர்மமான ஒரு நோய் நிலை ஆகும். கடைசியாக ஜேர்மனியில் பேர்ளினில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் இருவருக்கு ஹவானா நோய்க்குறிகளை ஒத்த பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.
அமெரிக்காவின் துணை அதிபர் கமலாஹரிஸ் தனது ஆசிய விஜயத்தின் ஒரு கட்டமாக நேற்று சிங்கப்பூரில் இருந்து வியட்நாம் புறப்பட ஆயத்தமானார். அச்சமயத்தில் வியட்நாமின் ஹனோய் நகரில்உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் இருவருக்கு ஹவானா நோய் அறிகுறிகள் ஏற்பட்டன. இதனால் அவர்கள் அவசரமாக அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட இருந்தனர்.
ஹனோய் தூதரகத்தில் ஹவானா நோய்கண்டறியப்பட்டதை அடுத்துத் துணை அதிபர் கமலா ஹரிஸின் வியட்நாம் பயணம் சில மணிநேரங்கள் தாமதமடைந்தது என்று அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
சிங்கப்பூரில் இருந்துஅவரதுவிமானப் பயணம் மூன்று மணி நேரம்தாமதித்தே தொடங்கியது.அவர் நலமாகபயணத்தை தொடர்கிறார் என்று அவரது பேச்சாளர் கூறியுள்ளார். 2016 இல் முதன் முதலில் கியூபாவில் ஹவானா நகரில் சில அமெரிக்க ராஜதந்திரிகள் மத்தியில் இந்த மர்மநோய் அறிகுறிகள் தென்பட்டன. அதனால் அதற்கு”ஹவானா நோய்க்குறி”(Havana Syndrome)எனப் பெயரிடப்பட்டது.
அதன் பிறகு அமெரிக்காவிலும் உலகின் வேறு சிலநாடுகளிலும் மர்மமான அந்த நோயின்அறிகுறிகள் பலருக்கு ஏற்பட்டன. ராஜதந்திரிகள், தூதரகப் பணியாளர்களை மட்டுமே தாக்கி வருகின்ற அந்த நோய்எவ்வாறு ஏற்படுகின்றது என்பது தொடர்ந்தும் பெரும் மர்மமாகவே இருந்து வருகிறது.
திடீரென ஒற்றைத் தலைவலி, மயக்கம்,காது கேளாமை, மூளை நரம்புப் பாதிப்புபோன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகின்ற ஹவானா நோய்க்குறி, இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட அமெரிக்க அதிகாரிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாக காலப்பகுதியில் வெள்ளைமாளிகையிலும் சிலருக்கு அத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. சிலருக்குஇந்நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னர் காதில் பேரொலி கேட்ட உணர்வு இருந்தமை தெரிய வந்துள்ளது.
அமெரிக்க அறிவியலாளர்களும் பாதுகாப்பு வல்லுநர்களும் அந்த நோயின்மர்மங்கள் குறித்து அறிய முயன்று வருகின்றனர். ஏதேனும் கருவிகளது கவனக்குறைவான பாவனையா அல்லது கண்ணுக்குப் புலப்படாத ஒலி ஆயுதம் (sonic weapon) மூலமான தாக்குதலா அதற்குக் காரணம் என்பது இன்னமும்தெரியவரவில்லை.
. ——————————————————————-
குமாரதாஸன். பாரிஸ்.