யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு முதல் கட்டமாக விடுவிக்கப்பட்ட 36 மில்லியன் ரூபாய் நிதியில் 18 ஆயிரத்து 76 குடும்பங்களுக்கு இடர்கால நிதிக் கொடுப்பனவு இன்றுடன் வழங்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் தெரிவித்தார்.
இரண்டாம் கட்ட நிதி நாளை விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வருமானமிழந்த ஏனைய குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
“நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 10 நாள்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக வருமானத்தை இழந்துள்ள அரசின் எந்தவொரு கொடுப்பனவையும் பெற்றுக்கொள்ளாத குடும்பங்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் இடர்காலக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்தக் கொடுப்பனவைப் பெறுவதற்கு 36 ஆயிரம் குடும்பங்கள் தகுதி பெற்றன. அதற்காக 72 மில்லியன் ரூபாய் நிதி அரசிடம் கோரப்பட்டிருந்தது.
அதில் முதல் கட்டமாக 36 மில்லியன் ரூபாய் நிதி கிடைத்தது. இன்று வரை யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகப் பிரிவிலும் 18 ஆயிரத்து 706 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவ வழங்கப்பட்டுள்ளது. என்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் தெரிவித்தார்