தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகள் 231 கோடி செலவில் மீளமைக்கப்படும் எனவும், அவர்களின் குழந்தைகளின் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதகாவும் அறிவித்தார்.
மேலும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குதல், இலங்கை திரும்ப விரும்பும் பகுதிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், பொதுத்துறை செயலர், முகாம்வாழ் தமிழர்களுக்கான பிரதிநிதி அடங்கிய குழு அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கை வாழ் தமிழர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பதை அரசு உறுதி செய்யும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் இலங்கை தமிழ் பொலிடெக்னிக் மாணவர்களுக்கு 2,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் ஆகவும், கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு 3,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாய் ஆகவும், இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு 5,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாய் ஆகவும் உதவித்தொகை உயர்த்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கை தமிழர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு அறிவிப்புக்களை சட்டப்பேரவையில் வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சட்டமன்ற கட்சித்தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இலங்கைத் தமிழர் குடும்பங்களை சேர்ந்த பொறியியல் படிக்க தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 பேரின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களைத் தமிழக அரசே ஏற்கும். முதுநிலை படிக்கும் மாணவர்களின் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும். தொழிற்கல்வி படித்து வரும் இலங்கை அகதி மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக அகதிகளாக முறையான அடிப்படை வசதியின்றி வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இனி பாதுகாப்பான கவுரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தருவதை இந்த அரசு உதவி செய்யும் என்றார்.
இதற்காக அவர்கள் தங்கியிருக்கும் முகாம்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் பின்வரும் அறிவிப்புகளை வெளியிடுகிறேன் என கூறினார்.
இலங்கைத் தமிழர் முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் 7,469 வீடுகள், 231 கோடியே 34 லட்ச ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித் தரப்படும். இதில், முதல் கட்டமாக 3,510 புதிய வீடுகள் கட்டுவதற்கு நடப்பு நிதியாண்டில் 108 கோடியே 81 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
முகாம்களில் உள்ள மின்வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இது தவிர, ஆண்டுதோறும், இதுபோன்ற வசதிகளைச் செய்துதர ஏதுவாக, இலங்கைத் தமிழர் வாழ்க்கை தர மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்கப்படும். விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும்”என முதலவர் ஸ்டாலின் அறிவித்தார்.