வடமராட்சியில் உள்ள பிரதேச செயலகம் ஒன்றில் ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ ரி.சேர்ட் வாங்கியதில் பாரிய முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பிரதேச செயலக ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ ரி.சேர்ட்டை, தைத்து வாங்குவதற்கு உள்ளூரில் உள்ள நிறுவனங்களை புறம் தள்ளி , கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து ரி. சேர்ட்டை கொள்வனவு செய்துள்ளனர்.
உள்ளூர் நிறுவனங்களிடம் ஒரு ரி.சேர்ட் அதிக பட்ச விலையாக 600 ரூபாய்க்கு வாங்க கூடிய நிலை காணப்படும் இடத்தில் அதே தரமுடைய ரி.சேர்ட்டை கொழும்பு நிறுவனத்திடம் 800 ரூபாய்க்கு கொள்வனவு செய்துள்ளனர்.
ஒரு ரி.சேர்ட்டுக்கு 200 ரூபாய் அதிகமாக கொடுத்து வாங்கியுள்ளனர். அவ்வாறாக 500 ரி.சேர்ட் களை ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை மேலதிகமாக கொடுத்து கொள்வனவு செய்துள்ளார்.
ஊழியர் நலன்புரி சங்கத்தின் பணத்திலேயே ரி.சேர்ட் கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமையால் , நலன்புரி சங்கத்தின் ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகமான பணம் வீண் விரயமாகி உள்ளது.
அதேவேளை , ரி.சேர்ட் கொள்வனவுக்காக கேள்வி கோரல் எதுவும் இல்லமால் அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவரின் தன்னிச்சையான முடிவின் பிரகாரமே ரி.சேர்ட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் , தெரிவிக்கப்படுகிறது.
அதனால் குறித்த ஊழியர் ரி.சேர்ட் கொள்வனவில் பெருமளவான பணத்தினை தரகு பணமாக பெற்றுக்கொண்டு இருக்கலாம் எனும் சந்தேகம் சக ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.