13 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை ஐ.நா வதிவிட அதிகாரி ஹனா சிங்கரிடம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் கையளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை நடைபெறவுள்ள 48 ஆவது கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பிலான தமது நிலைப்பாட்டினை கூறவுள்ளார்.
இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் 13 பக்கங்கள் கொண்ட ஆவணமொன்றை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட அதிகாரி ஹனா சிங்கரிடம் கையளித்துள்ளார்.
காணாமற்போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டமை, நிலைமாறு நீதிக்கான திட்டத்தை உருக்குவதற்கான செயற்பாடு, பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடு உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி வௌிவிவகார அமைச்சர் இந்த ஆவணத்தை கையளித்துள்ளதாக Sunday Times பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கை உள்நாட்டு பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கியமை, இடம்பெயர்ந்தவர்களை மீள குடியமர்த்தியமை, இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த தனியார் காணிகளை விடுவித்தமை, சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.