(க.கிஷாந்தன்)
கேகாலை – தெரணியாகல – மாளிபொட தோட்டத்தின் நிந்தகம பகுதியில் குழந்தைக்காக கட்டப்பட்டிருந்ததொட்டில் புடவையில் கழுத்து இறுகி, சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (07) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.11 வயதான டில்மினி என்ற பாடசாலை சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது வீட்டில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில், தொட்டில் புடவையில் சிக்குண்டு, இந்த சிறுமி உயிரிழந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினா் கூறியுள்ளனர்.
இந்த சிறுமி நாளாந்தம், தமது சகோதரர்களுடன், ஊஞ்சல்கட்டி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, குறித்த சிறுமி நேற்றைய தினம், அறையின் கதவுகளை அடைத்து, தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்ததாக அவரது தாயார் காவல்துறையினருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
இவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, மிக நீண்டநேரம் வெளியில் வராததை அடுத்து, சிறுமியின் சகோதரர்கள் கதவை நீண்ட நேரம் தட்டியுள்ளனர்.
சிறுமியிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்காததை அடுத்து, சகோதரர்கள் தாயிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, தாய், வீட்டின் யன்னல் ஊடாக பார்த்தபோது, சிறுமி தொட்டில் புடவையில் தொங்கிக் கொண்டிருந்ததை அவதானித்துள்ளார்.
அதன்பின்னர், சிறுமியின் சகோதரனை யன்னல் வழியாக அறைக்குள் அனுப்பி, கதவை திறந்து, சிறுமியை தெரணியாகல வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் சந்தர்ப்பத்திலும், சிறுமி உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தெரணியாகல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெரணியாகல காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.