இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

அரியான் பொய்கை கைலாயர செல்லத்துரை! ரதிகலா புவனேந்திரன்.

அரியான் பொய்கை கைலாயர செல்லத்துரை அவர்கள் சீரும் சிறப்புகளும் கொண்டு பலவளங்களும், செல்வங்களும் நிறைந்த வன்னி வளநாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம் எனும் மூவகை நிலங்களையும் கொண்டமைந்த வவுனியா மாவட்டத்தில் நல்லோர்களால் நிறைந்த அரியாமடு என்னும் அழகு கொழிக்கும் கிராமத்தில் வளம்பல சேர்த்து வாழ்ந்து வந்த சைவவேளாண் குலதிலகர் கைலாயர், வள்ளியம்மை தம்பதிககுளுக்கு தவப் பயனாய் 1923ம் ஆண்டு மார்கழி மாதம் 25ம் திகதி அச்சுவினி நட்சத்திரத்தில் பிறந்தார்.


இவர் தனது கல்வியை இன்றைய கலைமகள் வித்தியாலயமாகிய முள்ளியவளை இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆரம்பித்தார். கல்வியிற் தலைசிறந்த ஆசிரிய, ஆசிரியையரிடம் ஐயந்திரிபறக் கற்று அவர்களது நன்மதிப்புக்குரிய மாணவனாகவும் திகழ்ந்தார். கல்வி கற்கும் பருவ காலம் முதலாக இலக்கிய, புராண இதிகாசங்களில் பயிற்சியுடையவராகவும் விளங்கினார். முள்ளியவளைப் பிரதேசத்தில் வசித்து வந்த அந்தணோத்தமருடன் சேர்ந்து புராண படனங்களிலும் பங்கேற்றும், குருவினுடைய கட்டளையை ஏற்றுப் புராண விரிவுரையாற்றும் பணியிலும் செயற்பட்டு வந்தார். சிரேஸ்ட பாடசாலைத் தராதரப்பத்திரப் பரீட்சையில் அகில இலங்கையிலும் முதலாவது மாணவனாகச் சித்தி பெற்றார். இதனால் தான் கற்ற பாடசாலைக்குப் புகழையும் சேர்த்து ஆசிரியப் பெருந்தகைகளின் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டார்.


இளவயது முதற்கொண்டே அறிவு நூல்கள் பலவற்றையும் விரும்பிக் கற்றறிந்தார். பாடசாலைக் காலம் நிறைவு பெற்றதும் மனித குலத்திற்குச் செய்திகளைக் கொண்டு சேர்க்கும் அஞ்சல் விநியோகப் பணியைத் தேர்ந்தெடுத்து, அதை அழகுறப் பணியாற்றி வந்ததோடு சமூக, கலை, கலாசார, சமயப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.


இவர் தனது மணவாழ்க்கையை புதுக்குடியிருப்பில் வாழ்ந்திருந்த தமது உறவினரான இளையதம்பி. சுந்தரம் தம்பதிகளது மகளான சிவபாக்கியம் என்பவரைத் தேர்ந்தெடுத்து, பெரியோர் முன்னிலையில் அவர்களது நல்லாசிகளுடனும் மணவாழ்க்கையை ஆரம்பித்ததார்.


இவருடைய இணைபிரியா நண்பனாக தமிழறிஞரும், வன்னிப் பிரதேசத்தின் புகழ் பூத்த சோதிடப் பேராசானுமாகிய கணுக்கேணியூர் சரவணமுத்து – இராமலிங்கம் அவர்கள் விளங்கினார். இருவரும் இணைந்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கருணைமலருக்கு விடயதானங்களை வழங்கி அழகுறவும் செய்தனர். மேலும் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கருணைமலரில் உள்ள இக்கவிகளின் மூலம் அரியான் பொய்கையின் கவித்துவச் சிறப்பினைக் காணலாம்.


‘சரணமலர் துணையென்று தவறாமலனுதினம்
தண்மலர் தூவி நின்று
தற்பரீ யுனது புகழ் சாற்றிடும் தொண்டர்தம்
சஞ்சலங் களைய வென்றே
அரணதிகமதில் சூழ்ந்த……’


வன்னிப் பிரதேசத்தில் ‘வேலப் பணிக்கன் ஒப்பாரி’ எனும் வாய்வழியாக வழங்கி வந்த பாடல் வடிவத்தை ‘வேழம் படுத்த வீராங்கனை’ என்னும் நாட்டுக் கூத்து நூலாக மாற்றி, மதங்கொண்ட யானையை அடக்கிப் படுத்த அரியாத்தை என்னும் வீரம் செறிந்த பெண்மணியைப் பற்றி விளக்கும் முழு இரவு நாட்டுக் கூத்தாக எல்லோரையும் பார்க்க வைத்த பெருமை அரியான் பொய்கை அவர்களையே சாரும்.


யாழ்ப்பாணத்துக் கோண்டாவில் கந்தையா சுவாமிகள் அவர்களின் மகாவாக்கியத்தை அரியான் பொய்கை அவர்களால் எழுதி வழங்கிய கருத்துரை பலராலும் பாராட்டப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் பேணிப் பாதுகாக்கவும் பட்டுள்ளது.


‘மா, உ, அறிந்து யாவும் நின்செயலென்று
உணரப் பெற்ற பெரியோர்க்கு எல்லையில்லா
ஆனந்தம் அளித்தனை
களவும், புள்ளமையும் உடைய தமியேனையும்
இவ்வண்ணம் விடுத்தனை
யாரொடு புகல்வேன் தக்கோய்! ‘


அத்தோடு இலக்கிய, சமய, சமூகக்கட்டுரைகள் என்பவற்றை எழுதியதுடன், கவியரங்குகள் பலவற்றிலும் பங்கேற்று வந்துள்ளார். ஏட்டில் எழுத்தாணி மூலம் எழுதும் வல்லமை பெற்றிருந்த அரியான் பொய்கை அவர்கள் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயம், புதுக்குடியிருப்பு துர்க்கை அம்மன் ஆலயம் ஆகியவற்றிற்காகச் ‘சிலம்பு கூறல்’ (கோவலனார் கதை) காவியத்தைத் தன் கைப்பட எழுதி வழங்கியுள்ளார்.


இவரின் தமிழ், சமயப் பணிகளைக் கௌரவித்து 1993ம் ஆண்டில் ‘தமிழ்மணி’ பட்டமும், இலங்கைக் கலாசார அமைச்சினால் ‘கலாபூஷணம்’ பட்டமும், காரைநகர் மணிவாசகர் சபையினால் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்றமைக்காகக் ‘கவிசேகரன்’ பட்டமும், அதனைத் தொடர்ந்து 11.10..2004ம் ஆண்டு நடைபெற்ற வடக்கு கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் ‘ஆளுனர் விருதும்’ இவருக்கு வழங்கப்பட்டன.


வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயம், முள்ளியவளைக் காட்டு விநாயகர் ஆலயம், முள்ளியவளைக் கல்யாண வேலவர் ஆலயம், முள்ளியவளை கண்ணகி அம்மன் ஆலயம், வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயம், வற்றாப்பளை முருகன் ஆலயம், தண்ணீரூற்று ஊற்றங்கரைச் சித்திவிநாயகர் ஆலயம், மாமூலை மகாவிஷ்ணு ஆலயம் ஆகியவற்றின் மீது பாடல்கள், திருவூஞ்சல் ஆகியவற்றையும் பாடியுள்ளார்.


அத்தோடு நல்ல நாடகங்கள் எழுதியும் நடித்தும், புராணக் கதைகளை புரியும் நாடகவடிவில் எழுதியும், புரியாத புதிராய் விகடகவியாய் நடித்தும் உள்ளார். அரிச்சந்திர மயானகாண்டத்தில் பபூன் பாத்திரமேற்றுள்ளார். பபூனின் உடையமைப்பானது பல வர்ணத்துணிகளாலும், பார்ப்போரை நகைப்பு கொள்ள வைக்கும் வகையிலும் அமைந்திருக்கும். நாடகத்தில் ஒவ்வொரு காட்சி முடிவிலும் வந்து நகைச்சுவையாக அசைவுகளுடனும் பாடலைப் பாடி நித்திரையிலுள்ள பார்போரை எழுப்பிவிட்டு செல்லும் வண்ணம் மிகவும் கோமாளித்தனமாகவும் அமையப்பெற்றிருக்கும்.


மேலும் கோயில் பாடல்களை கோலாகலமாய் இயற்றி சொல்லும் புராணபடனத்தை பயன்பெற விளக்கும் வல்லமையும் கொண்டுள்ளார். அத்தோடு சிந்து நடைக் கூத்தாய் அரியாத்தை வலம் வந்து சீரிய பல சிறப்புக்கள் அரசால் சிறக்கப் பெற்றார். இசைப்பாடல் இயற்றி அரிய ஆலோசனை வழங்கி இங்கிதமாய் புராணபடன குருவாய் திகழ்ந்தார். காட்டு விநாயகர் கல்யாண வேலவருக்கும், முள்ளியவளைக் கண்ணகி வற்றாப்பளையுறையும் பத்தினியாளுக்கும் பல பாடல்களையும் இயற்றியுள்ளார்.


இப்படியாகத் தனது இறுதிக்காலம் வரையிலும் இலக்கிய சமயப்பணிகளில் ஈடுபட்டிருந்து, வன்னிப் பிரதேசத்தில் நிகழ்ந்த பேரிடர் வேளையில் தமது அரிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், நினைவுப் பொருட்கள் என யாவற்றையும் வன்னி நிலத்திற்கே இரையாக்கி இடம் பெயர்ந்தவராய் வாழ்ந்து, மீண்டும் சொந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். தனது பயணத்தைத் தொடர்ந்தார்.


மாமூலை மகாவிஷ்ணு ஆலயத்தில் மகாபாரதபடனம் நிகழ்த்திய பின் இல்லம் வந்து சேர்ந்தவர் நள்ளிரவு 11.00 மணியளவில் தம் இல்லத்தில் இருந்து பாடங்கற்றுக் கொண்டிருந்த மாணாக்கர் ஒருவரிடம் ‘தம்பியர்! தொடர்ந்து நித்திரை விழித்துப் படிக்கலாமோ? படித்தவை மறந்து போய்விடாதோ? காலையிலும் படிக்கலாந்தானே! மனதில் நிற்கும்’ என அறிவுரை கூறிய பின் துயில் கொள்ளச் சென்றவர் படுத்துறங்கி, அதிகாலை வேளையில் 2011.01.09ம் திகதியன்று தனது 88வது வயதில் இறைபதம் அடைந்தார்.

அமைப்புக் குழுவினால் 2015ம் ஆண்டு முள்ளியவளைப் பிரதேசத்திலுள்ள சந்தியம்மன் ஆலயத்துக்கு முன்பாக இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

   ரதிகலா புவனேந்திரன்

கிழக்குப் பல்கலைக்கழகம்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.