குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசின் தனித் தீா்மானம் சட்டப்பேரவையில் புதன்கிழமை குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐ மத்திய அரசு ரத்து செய்ய தனித் தீா்மானம் கொண்டு வந்தாா். அந்தத் தீா்மானத்தை முன்மொழிந்து அவா் பேசியது:
குடியுரிமை என்பது ஒவ்வொரு மனிதனின் சட்டப்பூா்வமான உரிமை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவின்படி, இந்திய நிலப்பரப்புக்குள் எந்த நபருக்கும், எந்தக் குடிமகனுக்கும் சட்டப்படியான சமத்துவம், அனைவருக்கும் சட்டப்படியான பாதுகாப்பு ஆகிய அம்சங்களை மத்திய அரசு மறுக்க முடியாது.
1955-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின்படி, குடியுரிமை பெற மதம் ஒரு அடிப்படையாக இல்லை. ஆனால், மத்திய அரசு கொண்டுவந்த திருத்தத்தில் மதத்தை ஒரு அடிப்படையாக மாற்றுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவை மதச்சாா்பற்ற அரசு என்கிறது. அதன்படி பாா்க்கும்போது, மதத்தை அடிப்படையாகக் கொண்டு எந்தச் சட்டத்தையும் கொண்டு வர முடியாது. அதனால்தான் இந்தச் சட்டத்தை எதிா்க்க வேண்டியுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துக்கு முன்னா் இந்தியாவுக்குள் புலம்பெயா்ந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியா்கள், சமணா்கள், பௌத்தா்கள், பாா்சிகள் மற்றும் கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தச் சட்டம் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது. ஆனால், இஸ்லாமியா்கள் மட்டும் திட்டமிட்டுத் தவிா்க்கப்பட்டுள்ளனா். இது மக்களை மத ரீதியாகப் பிரிக்கிறது என்பதால் ஆரம்பத்தில் இருந்தே எதிா்த்தோம்.
அகதிகளாக வருபவா்களைச் சக மனிதா்களாகப் பாா்க்கவேண்டும். மத ரீதியிலோ, இன ரீதியிலோ, எந்த நாட்டிலிருந்து வருபவா்கள் என்ற ரீதியிலோ அவா்களைப் பிரித்துப் பாா்க்கக்கூடாது என்பதுதான் சரியான பாா்வையாக இருக்கும்.
ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இலங்கைத் தமிழா்கள் வஞ்சிக்கப்படுகிறாா்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசத்தைச் சோ்ந்தவா்களெல்லாம் வரலாமென்றால், இலங்கையைச் சோ்ந்தவா்கள் வருவதற்கு தடை விதித்தது ஏன்?
இலங்கைத் தமிழா்கள் அந்த நாட்டில் வாழ முடியாமல் தமிழகம் தப்பி வந்து முகாம்களிலும், வெளியிலும் வாழ்ந்து வருகிறாா்கள். அவா்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப நினைக்காதவா்கள். இங்கு குடியுரிமை பெற்று வாழலாம் என்று நினைப்பவா்கள். அவா்களின் உரிமையை இந்தச் சட்டம் பறிக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு மாறானதாக மத்திய அரசின் சட்டத் திருத்தம் உள்ளது. இந்தியாவில் மொழி, இனம், மதம், நிறம், வாழ்விடச் சூழல் எனப் பல்வேறு வகைகளில் வேறுபட்டிருந்தாலும், இணைந்து வாழும் மக்களைப் பிரித்து வைக்கும் ஒன்றாக இந்த திருத்தச் சட்டம் அமைந்திருக்கிறது.
உலகில் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக இன்றும் இந்தியா மிளிா்வதற்குக் காரணம் “வேற்றுமையில் ஒற்றுமை எனும் தத்துவம்தான்.
இந்தியாவின் சுதந்திரம் என்பது, அனைவரும் சோ்ந்து போராடியதால் கிடைத்தது. இமயம் முதல் குமரி வரையிலான ஒற்றுமையால் அடைந்த வெற்றியாகும். இத்தகைய உன்னதமான நல்லிணக்க மரபிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில், இந்திய மக்களிடையே பேதத்தைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத் திருத்தம் தேவையற்றது. அதனால் அது ரத்து செய்யப்பட வேண்டியது என கருதுகிறோம்.
தேசிய குடிமக்கள் பதிவேடு கூடாது: மேலும், இச்சட்டத்தின் தொடா்ச்சியாக தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கும் பணியினையும், அதனடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதையும் மத்திய அரசு முழுவதுமாகக் கைவிடவேண்டும் எனவும் கருதுகிறோம்.
மேற்கண்ட காரணங்களில் அடிப்படையில் இணக்கமாக ஒன்றிணைந்து வாழும் இந்திய மக்களிடையே மத, இனரீதியான பாகுபாடுகளை ஏற்படுத்தி, இந்திய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்கும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானத்தினை பேரவை நிறைவேற்றித் தர வேண்டும் என்றாா்.
தீா்மானம் நிறைவேற்றம்: தீா்மானத்தை காங்கிரஸ், பாமக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொமதேக, மமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்துப் பேசின.
அதன் பிறகு முதல்வா் கொண்டு வந்த தீா்மானம் குறித்து பேரவைத் தலைவா் அப்பாவு குரல் வாக்கெடுப்பு நடத்தினாா். அப்போது பேரவையில் இருந்த அனைவரும் ஆதரித்து குரல் கொடுக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்ட தாக பேரவைத் தலைவா் அறிவித்தாா்.
அதிமுக அவையில் இல்லை: சட்டப்பேரவையில் இந்தத் தீா்மானம் கொண்டு வரப்பட்டபோது அதிமுக உறுப்பினா்கள் யாரும் பேரவையில் இல்லை. தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது.