(மௌனகுருவின் கூத்த யாத்திரை- கொண்டதும் கொடுத்ததும்- நூல் விமர்சனம்! சமுத்திரன் – (பேராசிரியர் ந. சண்முகரத்தினம்) என்ற விமர்சனத்தை முன்வைத்து)
வரலாற்றை எழுதுவதற்கான, அடிப்படைகளாக இருப்பவை பெரும்பாலும் , எழுத்து வடிவில் இருக்கின்ற நூல்களும் ஆவணங்களுமே. இப்படி சொல்லுவதற்கு மிகமுக்கிய காரணம், நவீன அறிவு பரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற, பெரும்பாலான ஆய்வுகள் இலக்கிய மற்றும் எழுத்து வடிவில் அமைந்த ஆவணங்களை மையப்படுத்தியதாகவே இருந்து வந்துக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், எழுதப்பட்டிருக்கின்ற ஆவணங்களில் வடிக்கப்பட்டிருக்கின்ற புனைவுகள், குறித்த கேள்விகளும், தேடல்களும் அவசியமாகி இருக்கின்றன. எழுத்தை மையப்படுத்திய வரலாற்றில், மிகச்சிறியதொரு குழு, அந்த எழுத்தின் வழி வெளித்தெரிகின்ற அல்லது வெளிக்கொணரப்படுகின்ற வரலாற்றை நிர்ணயம் செய்பவர்களாக இருந்துவந்திருக்கிறார்கள் என்பது தான் வெளிப்படையான உண்மை. இந்நிலையில், தனிநபர்களால் எழுதப்படுகின்ற, எழுத்தாவணங்களும் அவரவர் நிலைப்பாட்டை தக்கவைத்துக் கொள்ளவுமான முயற்சிகளாக இருந்துவருகின்றமையும் மறுப்பதற்கில்லை. இந்நிலையில்தான், புனைவுகளின் அரசியல் குறித்து சிந்திக்க வேண்டி இருப்பதுடன், தெளிவான கண்ணோட்டமும், அவசியமாகின்றது.
இத்தகைய கண்ணோட்டம் இருக்கும் பட்சத்தில், வரலாறுகளாக கட்டமைக்கப்படுபவற்றில், உண்மைகளை உய்த்துணர முடியுமாக இருக்கும். இந்தவகையில், நிகழ்ந்ததை ஆவணப்படுத்திவைக்கின்ற எழுத்தாவணங்களாக இருக்கின்றவற்றில் புனைவுகள் மலினப்பட்டு போவதற்கும் வரலாற்றின் உண்மை தன்மை பேணப்படுவதற்குமான காலம் பிறக்கும்.
கலைகளை ஆவணப்படுத்தல் தொடர்பிலும் எழுத்தாவணங்களே இற்றைவரை பிரதான இடத்தினை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கலைகளை பொறுத்தவரையும் புனைவுகளற்ற வரலாற்றின் அவசியத்தை மிகத்தெளிவாக உணரவேண்டியிருக்கிறது. அண்மையில், ஒருநூலுக்கான விமர்சனம் இத்தகைய தேவையை வலுவாக உணர்த்தியிருக்கிறது. (மௌனகுருவின் கூத்த யாத்திரை – கொண்டதும் கொடுத்ததும் – கூத்த யாத்திரை, கூத்தே உன் பன்மை அழகு ஆகிய இரு நூல்கள் பற்றிய கலந்துரையாடலினை zoom வழியாக லண்டனிலிருந்து இயங்கும் தமிழ் மொழிச் செயற்பாட்டகம் ஏற்பாடு செய்திருந்தது. அவ்வுரையாடலில் கலந்துக் கொண்ட பேராசிரியர் ந. சண்முகரத்தினம் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இது. ) என்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
குறிப்பாக ஈழத்தை பொறுத்தவரை, கூத்துக்கலை குறித்து பல்கலைகழக அறிவுப்பரப்பில் இருபெரும் விவாதங்களாக அல்லது கருத்தாடல்களாக பார்க்கப்படுபவை, கூத்து செம்மையாக்கமும், கூத்து மீளுருவாக்கமும். இதுவரை காலமும், கூத்து செம்மையாக்கச் செயற்பாடுகள் குறித்தும் கூத்து மீளுருவாக்கம் குறித்தும் எழுதப்பட்ட ஆவணங்களும், ஏனைய ஆவணப்படுத்தல்களும் இருந்துவருகின்ற நிலையில், “ஈழத் தமிழ்க் கூத்துக் கலையின் மீளுருவாக்கம் ஒரு தொடர்ச்சியான கூட்டு முயற்சி என்னும் செய்தி பலமாகச் சொல்லப்படுகின்றது.” என்ற ஆசிரியரின் ( பேராசிரியர் ந. சன்முகரத்தினத்தின்) கூற்றாக சொல்லப்படுகின்ற விடயம் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.
கூத்து செம்மையாக்கம், கூத்து மீளுருவாக்கம் என்னும் இருவேறு துருவங்களை, ஒரு தொடர்ச்சியான கூட்டு முயற்சி என்பதாக சொல்லுதல் எத்துணை பொருத்தப்பாடுடையது என்பது குறித்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. கூத்து செம்மையாக்கமும், கூத்து மீளுருவாக்கமும் அதன் அடிப்படை சித்தாந்தத்திலே, இருவேறு நிலைப்பட்ட கருத்தாடல்கள் என்பது குறித்த தெளிவு இருக்கின்ற பட்சத்தில், கூத்து மீளுருவாக்கம் என்பது, கூத்து செம்மையாக்க கருத்துநிலையிலிருந்து விடுப்பட்ட, அதன் நோக்கநிலையிலிருந்து விடுப்பட்ட செயற்பாடு என்ற தெளிவு பிறக்கும்.
ஈழத்துத் தமிழ் கூத்தரங்கில், தேசியமயமாக்கச் சூழலில், முன்னெடுக்கப்பட்ட கூத்துச் செம்மையாக்கம் மத்தியதரவர்க்க நலன் பேண் செயற்பாடாகத் தான் இருந்து வந்திருக்கிறது. அதற்கான வலுவான ஆதாரங்களும் இருந்து வருகின்றன. குறிப்பாக “நேரச் சுருக்கத்திற்கும் நாடகச் செம்மைக்கும் நான் முன்னரேயே குறிப்பிட்ட மத்தியதர வர்க்கப் பார்வையாளருக்கும் தொடர்புண்டு. இவர்கள் பாரம்பரியக் கூத்துக்களைப்படுத்துக்கொண்டே விடிய விடியப் பார்க்கும் கிராமிய மக்களைப் போன்றோர் அல்லர். இப்பார்வையாளர்கள் விடிய விடிய அமர்ந்து நாடகம் பார்க்கும் பின்னணி இல்லாதவர்கள். இவர்கள் அடுத்தநாள் அதிக அலுவல்கள் உள்ளவர்கள். அன்றியும் பல்வேறு நாடகம் பார்த்து, படித்து இரசனை கூடியவர்கள். இதிகாச புராணங்களைக் கல்வி மூலம் கற்றவர்கள். விமரிசனப் பாங்குடையவர்கள், கூத்தை கிராமிய மக்களைப்போல அன்றி புறவயமாக நின்று பார்ப்பவர்கள். எனவே இப்பார்வையாளர்களுக்குத் தக நேரச்சுருக்கமும் செம்மைப்படுத்தலும் இன்றியமையாததாயின.” ( மௌனகுரு.சி. நாடகம் -அரங்கியல் பழையதும் புதியதும் ‘கூத்தரங்கின் புத்தாக்கம் : பேராசிரியர் சு.வித்தியானந்தனின் பங்கு’)
“நாட்டுக் கூத்தினை வளர்த்ததோடு அவற்றைப் புதிதமைத்து நகரப்புறப் பார்வையாளர்களுக்கு ஏற்ப, செம்மையான வடிவத்தில் அளித்த பணியையும் சு.வித்தியானந்தன் செய்தார். கிராமங்களிலே ஆடப்பட்ட கூத்துக்களின் அளிக்கைத் தன்மையில் பாமரத் தன்மைகள் நிறைய இருந்தன. ஆடலும் பாடலும் சில வேளைகளில் இணைவதில்லை. மத்தள ஒலி நடிகர்களின் குரலை அமுக்கிவிடும். நடிப்பு அங்கு கவனிக்கப்படாதிருந்தது. பாடல்கள் பல்வேறு சுருதிகளில் இசைக்கப்பட்டு பெரும்பாலும் அபசுரமாகவே ஒலிக்கப்பட்டன. மேடையசைவுகள் திட்டமிடப்படாதனவாயிருந்தன. உடை, ஒப்பனை பாத்திரங்களின் இயைபுக்கு ஏற்றதாயில்லை. இக்குறைகள் யாவற்றையும் மீறிக்கொண்டே கூத்தைக் கிராமிய மக்கள் இரசித்தனர். காரணம் அது அவர்களின் வாழ்வோடு இணைந்திருந்தது.” (மௌனகுரு.சி. ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு ‘புதிய தேடலுக்கான அடித்தளங்கள் இடப்படுகின்றன: கலைக்கழகத்தின் தோற்றம், வித்தியானந்தன் வருகை, நாட்டுக்கூத்தின் மறுமலர்ச்சி ) என்ற செய்திகள் எல்லாம், கூத்துச் செம்மையாக்கம், ஒரு மத்தியதர நலன் பேண் செயற்பாடாக இருந்தமையை தெளிவாக சொல்லிச் செல்கின்றன.
சு. வித்தியானந்தனின் கூத்துச் செம்மையாக்கம் பற்றி சொல்லுகின்றபோது, அதனை முன்னெடுக்க நேர்ந்த சூழல் தொடர்பாகவும் எழுதப்பட்ட ஆவணங்களை கையில் எடுத்தலும், அதனை அறிதலும் அவசியமாகிறது. அந்தவகையில் தெளிவத்தை ஜோசப் அவர்களால் தாய்வீட்டில் ஆழத்துமுத்துக்கள் என்ற பகுதியில், “அரங்கியல் பல்கலைக்கழகம் – பேராசிரியர் சி. மௌனகுரு ” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நேர்காணல் கட்டுரையில், “உயர்க்கல்விக்காக மௌனகுரு அவர்கள் பேராதனை பல்கலைகழகம் சேர்ந்த ஆண்டு 1961. நாட்டுக்கூத்து மரபின் புத்துயிர்ப்பு முயற்சிகளில் சு. வித்தியானந்தன் அவர்கள் ஈடுபட்டிருந்த காலமும் அது…” , “1961 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இணைந்த மௌனகுரு அவர்களின் எழுத்துருவில் உருவான வடமோடி நாடகம் “ கர்ணன் போர்” பேராசிரியர் சு. வித்தியானந்தன் தயாரிப்பில் 1962 இல் பல்கலைக்கழகத்தில் மேடை ஏறுகிறது. பிறகு கண்டி, கொழும்பு, யாழ்ப்பாணம் என்று பல மேடை கண்ட நாடகம் இது…”, “ நாட்டுக்கூத்து முறை இக்காலத்துக்கு ஏற்று வராது என்ற கூற்றைப் பொய்யாக்கி இசையும் ஆட்டமும் இணைய வந்த சிறப்பு தமிழ் நாடக வல்லார் இதுவரை அடையாதது, மட்டகளப்பு நாட்டுக்கூத்து முறையினை ஆட்ட நிலையிலிருந்து நாடக நிலைக்குக் கொண்டு வரும் இம்முதல் முயற்சி பாராட்டுக்குரியது என்று பத்திரிகைகள் பாராட்டியிருந்தன.” “ 1963 நொண்டி நாடகம் – தென்மோடி நாடகம், எழுதியவர் சி. மௌனகுரு, தயாரிப்பாளர் சு. வித்தியானந்தன் மௌனகுரு ஏற்றிருந்த பாத்திரம் செட்டியார், 1964 இராவணேசன் வடமோடி நாடகம், பிரதியாக்கம் – சி. மௌனகுரு, ஏற்று நடித்த பாத்திரம் – இராவணன், தயாரித்தவர் – பேராசிரியர் சு. வித்தியானந்தன் மட்டகளப்பு பல்கலைக்கழகம் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேறிப் புகழீட்டிய நாடகம் இராவணேசன். இந்த மூன்று நாடகங்கள் மூலமாகவும் கூத்து நாடகமாக்கப்படுவதற்கான பயிற்சி மௌனகுரு அவர்களுக்கு கிடைத்தது.” என்ற முக்கிய சில பதிவுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகின்றன. இந்த பதிவுகளுடன் கூடிய குறித்த நேர்கண்ட கட்டுரை வெளிவந்த காலப்பகுதியும் முக்கியமுடையதாகிறது. குறித்த கட்டுரை 2013 ஆண்டு நவம்பர் காலப்பகுதியில் வெளிவந்திருக்கிறது.
இந்த கட்டுரையின் வழி சு. வித்தியானந்தன் அவர்கள் தேசியகலையாக்க முயற்சியில், கூத்தை செம்மைப்படுத்தியமையும், அதனை மேற்கொள்ள சி. மௌனகுரு அவர்கள் துணை நின்றமையும் ஒருபக்கம் தெரியவருவதுடன், இவ்விடத்தில் தான் ஏலவே சொன்னது போல, கூத்துச் செம்மையாக்கச் சூழலில் உருவாகிய நான்கு கூத்துக்கள், கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன், வாலிவதை பின்னர், நாடகம் என்பதாக சொல்லப்படுவதற்கான பிண்ணனியும் வெளித்தெரிகிறது. இந்நிலையில் தான் இக்கட்டுரை வெளிவந்த காலம் முக்கியம் பெறுகிறது. (2013 ஆம் ஆண்டு தான் குறித்த கட்டுரை வெளிவருகிறது.)
இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கூத்து மீளுருவாக்கம் தொடர்பான செயற்பாட்டு முன்னெடுப்புகள், ஈழத்து சூழலில் இடம்பெறுகின்றன. குறிப்பாக, மத்தியரதர வர்க்க பார்வையாளர்களை மையப்படுத்திய அல்லது அவர்களின் நலனை நோக்காக கொண்ட ஒரு செயற்பாட்டு முன்னெடுப்பாக அமைந்த கூத்துச் செம்மையாக்கச் செயன்முறையில், படசட்ட மேடைக்குரியதாக கூத்தை கொண்டு சேர்த்து அவற்றை கூத்து என்பதாக அடையாளப்படுத்தல், இதனடியாக பாடசாலைகளில் நாட்டுக்கூத்து என்ற பெயரில் போட்டிகளை நடாத்துதல் என்ற வகையிலான செயற்பாடுகளெல்லாம் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் தான் கிராமங்களில் ஆடப்பட்டு வந்த கூத்துக்களுக்கும், படசட்டமேடையில் கூத்து என்ற போர்வையில் அரங்கேறிய ஆற்றுகைகளுக்குமிடையிலான, முரண்நிலை வெளித்தெரியவருகிறது.
இந்த பின்னணியிலேயே, படசட்டமேடையில் ஆற்றுகைச் செய்யப்பட்டவை கூத்துக்கள் அன்று அவை நாடகத்தின் ஒரு வளர்ச்சிநிலையில் பார்க்கப்பட வேண்டியவை என்ற கருத்தாடல்கள் எல்லாம் வெளிவருகிறது. இந்த பின்னணியில்தான் கிராமங்களில் ஆடப்பட்டு வந்த கூத்துக்களில் நின்று கூத்துச் செம்மையாக்கத்தில் உருவாகிய கூத்துக்கள் நாடகத்தின் அடிப்படையை பெற்று நிற்பதும், அவை கூத்துக்கள் அல்ல என்கிற கருத்தாடல்களும் முக்கியம் பெறுகின்றன. இதே பின்னணியில் படசட்டமேடை ஏறிய இராவணேசன், அதற்கான பிரதியாக்க உரித்தினை பெறுகின்ற சி. மௌனகுரு அவர்களாலேயே, வடமோடி நாடகம் என்ற பெயரில், 2000 ஆம் ஆண்டு முதல் மேடையேற்றப்படுகிறது.
ஏலவே சொல்லப்பட்ட குறித்த நேர்காணல் கட்டுரையில் நாடகம் என்று அடையாளப் படுத்தப்பட்டவை, இத்தகைய அழுத்தங்களின் காரணமாக சொல்லப்பட்டது என்பதும் தெளிவாகின்றது. குறிப்பாக அதுவரைக்காலமும் கூத்துச்செம்மையாக்கம் தொடர்பில் பதியப்பட்டவற்றில், “பேராசிரியர் பல்கலைக்கழக மாணாக்கரைக் கொண்டு நான்கு கூத்துக்களை தயாரித்தார். அவையாவன கர்ணன்போர் (1962), நொண்டி நாடகம் ( 1963), இராவணேசன் (1964), வாலிவதை (1985)…” ( மௌனகுரு.சி. நாடகம் -அரங்கியல் பழையதும் புதியதும் ‘கூத்தரங்கின் புத்தாக்கம் : பேராசிரியர் சு.வித்தியானந்தனின் பங்கு’) என்பதாகத்தான் சி. மௌனகுரு அவர்களால் எழுதப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னரான காலப்பகுதியில், ஏலவே சொன்ன கருத்தாடல்கள், அழுத்தங்களின் பெயரில் சி. மௌனகுரு அவர்கள் நாடகம் என அடையாளப்படுத்துகிறார். இதனையே குறித்த நேர்காணல் கட்டுரை முழுதும் அவதானிக்க முடிகின்றது.
இங்கு சிந்திக்கப்பட வேண்டிய மிக முக்கிய விடயம், கூத்துச் செம்மையாக்கத்தின்வழி உருவாகிய கூத்துக்கள், முழு பூசனியை சோற்றுக்குள் மறைப்பது போல, கூத்தின் உண்மை நிலையை மறைத்து வேறு வடிவினை கூத்து என்பதாக, அடையாளப்படுத்த விளைந்ததன் வெளிப்பாடுதான் என்பதும், அதற்கெதிரான சமுகமட்ட குரல் அவற்றை புறக்கணிப்பதும் பின்னர் அவை நாடகம் என்ற கருத்தாடல்களும் அழுத்தங்களும் பிறக்கின்ற போது சு. வித்தியானந்தனின் கூத்துச் செம்மையாக்க செயற்பாட்டில் உருவாகிய கூத்துக்கள் என்று சொல்லப்பட்டவற்றை, சி. மௌனகுரு அவர்கள் நாடகம், கூத்து நாடகம் என்ற வகையில் பதிவுபடுத்தியிருக்கிறார் என்பது. மற்றொரு விடயம், கூத்து ஒரு சமுதாய கலை, அதன் உரித்து அந்த குறித்த சமுதாயத்திற்குரியதாக இருக்கின்ற பட்சத்தில், ஒரு கூத்திற்கான பிரதியாக்கத்திற்காக தனியாள், உரிமை கோரல் தொடர்பாகவும் சிந்திக்க வேண்டிக்கிடக்கிறது. இது தனியாக ஆராயப்பட வேண்டியது. ஆக இந்த ஒட்டுமொத்தமான பதிவுகள், வரலாற்றில் கூத்துச் செம்மையாக்கம் பற்றியதாகவும், அதனைத் தொடர்ந்து வந்த கருத்தாடல்களையும் தெளிவாக எடுத்துச் சொல்லுவதை அவதானிக்க முடியும். இந்த வரலாற்றோட்டம் இப்படியாக இருக்க,
கூத்து மீளுருவாக்கம் ஒரு தொடர்ச்சியான கூட்டு முயற்சி என்பதாக சொல்லுதல் தொடர்பில் நோக்குவோம், வரலாற்றில் 2002 ஆம் ஆண்டு முதல் சீலாமுனை பிரதேசத்தை மையப்படுத்தி சி. ஜெயசங்கர் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட, கூத்து மீளுருவாக்கம் அதன் ஆற்றுகையிலும், விடயப்பரப்பிலும் கூத்து செம்மையாக்கத்திலிருந்து முற்றுமுழுதாக விடுபட்ட ஒரு செயற்பாடாக அமைகின்றது. இதற்கும் சில ஆதாரங்களை இங்கு முன்வைத்தல் பொருத்தமாக இருக்கும்.
“அக்கால கட்டத்தில் வாழ்ந்த அண்ணாவிமார்கள் இக்கலை முற்றாக அழிந்துவிடாவண்ணம் பல கூத்துக்களை இயற்றிப்பாடி, பல கஸ்டங்களின் மத்தியிலும் பல கூத்தர்களை உருவாக்கி பாடி ஆடவைத்து பல தடவைகள் ஊர்களுக்குள்ளும் அவ்வூர் சார்ந்த கோயில்களிலும் அரங்கேற்றம் செய்தார்கள். இவ் அண்ணாவிமார்களுடையதும் கூத்து ஆர்வலர்களுடையதும் செயல்களினால் இக்கூத்துக்கலை முற்றாக அழிந்து விடவில்லை என்பதை எம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இக்காலகட்டத்தில் பல அரங்கேற்றக் களரிகளைக் கண்ணுற்ற பலகல்விமான்கள் இக்கலையால் கவரப்பட்டு அண்ணாவிமார்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இக்கலை சம்பந்தமாக அவர்கள் மூலம் பல விடயங்களை அறிந்துக் கொண்டு ஆச்சரியப்பட்டு இவ் அண்ணாவிமார்களின் துணையுடன் ஆய்வுகளை நடத்தி வந்துள்ளார்கள், என்றாலும் இக்கல்விமான்களின் கூத்துக்கலை பற்றி அறிமுகப்படுத்திய நடைமுறைகளில், கூத்துக்கலையின் தனித்துவமும் மரபு முறைகளும் பின்பற்றப்படவில்லை என்பதே எனது கருத்தாகும். கூத்து என்று அரங்கேறும் போது அது முழுக்க முழுக்க வட்டக்களரியிலேயே அரங்கேறும். இதுவே ஈழத்தமிழர்களுக்கு உரிமையான எம்முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அரங்காகும். இவ்வரங்கே இக்கலைக்குரிய மரபுமுறையும் இதன் உயிர்நாடியும் தனித்துவமும் ஆகும்.” , “கூத்து என்று சொல்லி தற்போது பாடசாலைகளில் ஆடப்படும் கூத்துக்களை படசட்ட மேடைகளில் அரைமணித்தியாலத்திற்குள் ஆடி முடித்து விடுகிறார்கள். இதைக்கூத்து என்று எப்படி ஏற்றுக் கொள்ளலாம்.” “ படசட்ட மேடைகளில் கூத்து என்று சொல்லி கூத்தை ஆடுவதால் கூத்தில் உள்ள பாரம்பரியப் பரிமாணங்களும் கூத்தின் தனித்துவமும் மரபு முறையும் இழக்கப்படுகிறது.”, “ஈழத்தமிழர்களுக்கென்று முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அரங்கின் உருவம் மக்கள் மத்தியில் இருந்து அழிக்கப்படுகிறது. இது கூத்துக்கலைக்கும் எம் முன்னோர்களுக்கும் செய்யப்படும் துரோகம் மட்டுமல்ல கூத்துக்கலையின் அழிவிற்கே வழிகோலுகிறது.” ( சிவநாயகம் . செ 2007 ஜூன், சீலாமுனை கூத்து மீளுருவாக்கம் அனுபவப்பகிர்வு – 1 ஏட்டண்ணாவியார் செ. சிவநாயகம் மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு)
அண்ணாவியாரின் இந்த பதிவுகள், நவீன ஆய்வறிவுருவாக்க பரப்பில், ஆய்வுகளுக்கு தகவல்களை வழங்குபவர்களாக, ஆய்வு சூழலில் அவர்கள் கையாளப்படுகின்றமையை வெளிப்படுத்தியிருப்பதுடன், எந்த சமுகத்தால் வரவேற்பு பெற்றதாக புனையப்பட்டிருக்கிறதோ அதே சமுகத்தின் குரல் குறித்த செயன்முறைக்கெதிரான கருத்துக்களை முன்வைப்பதை அவதானிக்கமுடிகின்றது. இவ்விடத்தில் கவனிக்கப்பட வேண்டியது வெறுமனே ஏடுகளை நிரப்பி புனையப்படுகின்றவற்றில் எத்துனை உண்மைதன்மை இருக்கிறது என்பதும் ஒருபக்க பார்வையாகவே வரலாற்றில் சில பதிவுகள் புனையப்பட்டிருக்கிறது என்பதும் மற்றையது நவீன ஆய்வறிவு பரப்பில் ஆய்வு என்பது யாருக்காக எதற்காக நடைபெறுகிறது, என்பதும் ஆகும்.
இந்த நிலையில் தான் கூத்துச் செம்மையாக்கம் செய்ததும் கொடுத்ததும் என்ன என்பது பற்றியும், அது பற்றிய சமுகமட்டத்திலான கதையாடல்களும் முக்கியம் பெறுகின்றன. எனினும், வரலாற்றில் மிக நீண்ட பாரம்பரியத்தை உடைய, வாய்மொழி தகவல்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்து, எழுத்தாவணங்களாக பதிவு செய்யும் போது, தனிநபர்சார்ந்த அல்லது வெள்ளை மற்றும் பார்ப்பனிய மனப்பான்மையில், அதிகார நிலைப்பட்டு சில விடயங்கள் கட்டமைக்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. இந்த நிலையில் தான் கூத்துச் செம்மையாக்கம் தொடர்பாக எழுதப்பட்ட பதிவுகளில், பாமரர்களாக, செம்மையற்றது என்பதாக சொல்லப்படுகின்ற விடயங்கள் பற்றிய கேள்விகள் மேற்கிளம்புகின்றன.
இத்தகையதொரு மேற்குமையப்பட்டதும் காலனிய, சமஸ்கிருதமையப்பட்டதுமான, அதிகாரத்தோரணையில் செய்யப்பட்ட. கூத்துச் செம்மையாக்கச் செயற்பாட்டிலிருந்து, கூத்து மீளுருவாக்கம் வேறுப்பட்டு நிற்கிறது. குறிப்பாக, கூத்து மீளுருவாக்கத்தில் பங்குகொண்ட சீலாமுனை மக்களின் குரல் பதிவுகளாக இருக்கின்றன. “ கூத்தில மாற்றம் செய்யிறதெண்டுறது கூத்த கூத்தில்லாம செய்யிறதில்ல. கூத்திர அடிப்படையை மாத்தாம, அதே நேரம் கட்டாயம் மாத்தவேண்டிய கருத்துக்களை மாத்தி மீள உருவாக்கிறதுதான் அது. அதாலதான் கூத்து மீளுருவாக்கம் என்று சொல்றம்”
“ தர்மபுத்திரன் கூத்து என்று சொன்னா, அதின்ர கதை என்ன? தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான சண்டை தான். தர்மர் ( பாண்டவர்கள்) பக்கம் தான் நேர்மை, நியாயம், துரியோதனன்ர பக்கம் ( கௌரவர்) நேர்மை இல்ல துரியோதனனாக்கள் சாகிறாங்க, தர்மராக்கள் வெல்லுறாங்க. இதுக்காகத்தான் இந்த கூத்துக்கு தர்மபுத்திரன் என்ற பேர் வைச்சிருக்காங்க போல, ஆனால் அந்த சண்டையில வந்து உண்மையா துரியோதனன் பக்கமும் நியாயம் இருக்குத்தானே. அந்த சண்டையைப் பார்த்தா அது சிம்மாசனத்துக்காகத்தானே நடந்திருக்கு. இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஆராஞ்சி மீளுருவாக்கினது தான் சிம்மாசனப் போர் என்ற கூத்து.”
“ ஒவ்வொரு வருஷமும் ஆடுற கூத்துக்கள மீளுருவாக்கித்தான் ஆடினம். அந்த வகையில இரண்டாவதாக “ இராம இராவண யுத்தம்” என்ற கூத்தை “ சீதை சூர்ப்பனகை வதை” என்ற கூத்தா மீளுருவாக்கினம். இராமாயணக்கதைதான் இராம இராவண யுத்தத்தில இருக்கு. இங்க பாத்த மெண்டா இராமனும் இராவணனும் சண்டை பிடிக்கிறதும், ஒரு ஆளை ஒரு ஆள் வீழ்த்திறதும் அவங்கட வீரமும் தான் சொல்லப்பட்டிருக்கு. ஆனால் இந்தச் சண்டைக்குள்ள மாட்டுப்பட்டு சீதை, சூர்ப்பனகை, மண்டோதரி போன்ற பெண்கள் பட்ட கஷ்டங்களை யாரும் கவனிக்கல்ல.
ஆம்பிளைகளிற நோக்கில கூத்து எழுதப்பட்டிருக்கிறதால இப்படி கவனிக்கப்படாம விடப்பட்டிருக்கு. உண்மையிலேயே சீதையும் சூர்ப்பனகையும் பட்ட அவஸ்தைகள் தான் இந்தக் கூத்துல அதிகமா இருக்கு. இதை விளங்கினதாலதான் பெண்ணிலை நோக்கில் இந்தக் கூத்தை நாங்க “ சீதை சூர்ப்பனகை வதை” என்று மீளுருவாக்கம் செய்தம்”. ( விவேகானந்தராசா. த, 2012 செப்டம்பர், கூத்துக் கலைஞர் சி. விஜேந்திரனுடனான நேர்காணல் – கூத்து மீளுருவாக்கம் அனுபவப்பகிர்வு – 3 மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுதிறன் செயற்பாட்டுக்குழு )
இத்தகைய பதிவுகள், கூத்து மீளுருவாக்கம், அதன் செயற்பாட்டு நிலைகள் என எல்லாவற்றுக்குமான பதிவுகளாகவும் இருக்கின்றன. உண்மையில் இந்த பதிவுகளோடு கூடிய வரலாறு காலனியநீக்க, சுருக்கமாக சொன்னால், “எங்களை நாங்கள் விடுதலை செய்துக் கொள்ளல்” அது கருத்தியல் சார்ந்ததாக இருக்கலாம், எது சார்ந்ததாகவும் இருக்கலாம், என்ற நிலைப்பாட்டை குறித்த சமுகத்தின் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. இதனுடைய தொடர்ச்சியாக பாரம்பரிய சூழலில் சிறுவர்களின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து சிந்திக்கப்படுகிறது, சிறுவர் கூத்தரங்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆக வரலாற்றில், கூத்து மீளுருவாக்கம் என்பது தொடர்பாக அதன் செயற்பாடுகள் தொடர்பாக பல்கலைகழக அறிவுபரப்பிலும், சீலாமுனை கிராம மக்கள், அண்ணாவியார், கலைஞர்கள் மத்தியிலும் தெளிவான பார்வையும் பதிவுகளும் இருக்கின்றன. தமிழில் மட்டுமல்லாது எழுதப்பட்ட ஆங்கில பதிவுகளும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதே நேரம் கூத்து சார்ந்த வரலாற்றில், 2000 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில், சீலாமுனை கூத்து மீளுருவாக்கம் என்ற செயற்பாடு, அதுசார்ந்த கருத்தாடல்கள் எல்லாம் பேசப்பட்டு இருக்கின்றன. இந்தநிலையில், 1961இல் தேசியகலையாக்க முயற்சிக்காக துணைநின்ற சி. மௌனகுரு அவர்கள், கூத்து செம்மையாக்கம், கூத்து புத்தாக்கம் என சு. வித்தியானந்தனின் பணிகளை தனது நூல்களில் பதிவுபடுத்தியவர், பின்னரான காலப்பகுதியில் நாடகம் என்றும் மீளுருவாக்கம் என்றும் அதனை வகைப்படுத்த விளைவதன் அல்லது புனைவதன் அவசியம் என்னவாக இருக்கிறது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
ஏனெனில், மிகத்தெளிவான ஒரு வரலாறு கூத்து செம்மையாக்கம் சார்ந்தும், கூத்து மீளுருவாக்கம் சார்ந்தும் இருக்கின்ற பட்சத்தில், சுயஆவணப்படுத்தலாக சொல்லப்படுகின்ற குறித்த நூல்விமர்சனத்தில், “ கூத்து வெற்றிகரமாக மூன்று தடவைகள் மேடையேறுகிறது. இந்தக் கூத்துப் பற்றிய விபரத்தை பேராதனைப்பல்கலைக்கழகத்தில் கூத்துக்கலையின் மீளுருவாக்கத்தில் ஈடுபாடுமிக்க பேராசிரியர்கள் கணபதிபிள்ளை மற்றும் வித்தியானந்தனுக்கு மட்டகளப்பைச் சார்ந்த இரு கல்வியாளர்கள் தெரியப்படுத்துகிறார்கள். என்பதாக தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுகிறது.” ஆக இதுவரை காலமும் கூத்துச் செம்மையாக்கம், கூத்து புத்தாக்கம் என்பதாக சு. வித்தியானந்தனின் பணிகளை சொல்லி வந்த சி.மௌனகுரு அவர்கள், மீளுருவாக்கம் என்பதாக, மீளுருவாக்கச் செயன்முறையிலிருந்து மாறுப்பட்ட செயன்முறையை மீளுருவாக்கம் என்பதாக சொல்ல வேண்டியதன் அவசியம் என்னவாக இருக்கிறது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
ஏனெனில் மிகத் தெளிவாக குறித்த நூல் விமர்சனத்தில் சொல்லப்படுகின்ற “ அவர் கற்றதை அவருடைய வார்த்தைகளிலேயே கேட்போம்… கூத்தை படசட்டமேடையில் ஆடலாம், சுருக்கிப் போடலாம், செம்மைப்படுத்தலாம், அழகுப்படுத்தலாம், மத்தளம் தவிர்ந்த பிற வாத்தியங்களையும் சேர்க்கலாம், ஒப்பனை உடைகளை மாற்றலாம், ஒளியமைப்பை நிகழ்த்தலாம் போன்ற விடயங்களை நான் இங்கு கற்றுக்கொண்டேன்.” ( மௌனகுருவின் கூத்த யாத்திரை – கொண்டதும் கொடுத்ததும் – நூல் விமர்சனம் சமுத்திரன் ) என்ற விடயத்தை அவதானித்தால் சி. மௌனகுரு அவர்கள் மீளுருவாக்கம் என்பதாக சொல்லும் விடயத்திற்கும், உண்மையில் மீளுருவாக்கத்தின் செயற்பாடுகளுக்கும் பாரியதொரு வித்தியாசத்தை மிகத்தெளிவாக கீறிட்டு விடலாம். சி. மௌனகுரு அவர்களின் இந்த கூற்று, ஏலவே கூத்து செம்மையாக்கம் பற்றி சொல்லும் போது அது எவ்வகையான காலனியநலன்பேண், மத்தியதரவர்க்க நலன் பேண் செயற்பாடாக இருந்ததை அவதானிக்க முடிந்ததோ அதுபோலத்தான், அதிகாரநிலைப்பட்ட, எடுப்பார்கைப்பிள்ளை என்ற நிலையில் கூத்தை அணுகுகின்ற அவரின் மனநிலையைதான் காட்டுகிறது.
இப்படியாக கூத்து மீளுருவாக்கம், அதனுடைய செயற்பாடுகள் என பதியப்பட்ட வரலாறு, மிகத் தெளிவாக கூத்து மீளுருவாக்கம் என்ற செயன்முறையை வரையறுக்கிறது. இந்நிலையில், தலையோடு காலையோ, காலோடு தலையையோ பொருத்தினாலும் எந்த விதத்திலும் பொருத்தப்பாட்டை காணமுடியாத இருவேறு நிலைப்பாட்டை, நிலைப்பாடு சார்ந்த செயற்பாட்டை கூட்டு முயற்சி என எப்படி நிறுவிச்செல்ல முடியும்? இத்தகைய பதிவுகள், வரலாற்றில் இருக்கின்ற போதே ஒருபக்க நிலையில் நின்று இத்தகைய கருத்துக்களை சொல்லிச் செல்லுதல், எத்தகைய அறிவுருவாக்கச் சமுகத்திற்கான வழிப்பாதையாக அமையும்? என்ற கேள்விகள் எல்லாம் இவ்விடத்தில் தொக்கி நிற்கின்றன. முழுமையாக, மீளுருவாக்கம் அது சார்ந்த செயற்பாடுகள், செயற்பாட்டில் இடுபட்டோர் என ஒரு வலிமையான ஆதாரபூர்வமான வரலாற்று பதிவுகள் இருக்கின்ற போது, “ இராவணேசனை மட்டுமன்றி வேறு பல கூத்துக்களையும் புதியமுறையில் மீளுருவாக்கினார்.” ( மௌனகுருவின் கூத்த யாத்திரை – கொண்டதும் கொடுத்ததும் – நூல் விமர்சனம் சமுத்திரன் ) என சொல்லுதலும் எழுதுதலும் எத்தகையதொரு அறிவுருவாக்கத்திற்கான வழிகாட்டலாக இருக்கப்போகிறது என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
சமகால அறிவுருவாக்கச் சூழலை பொறுத்தவரை, பரீட்சைமையப்பட்டு, ஏன் , எதற்கு என்ற கேள்விகளற்ற மனப்பாடக்கல்வியும் அது சார்ந்த ஓர் அறிவுருவாக்கச் சமுகத்தையும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மறுபுறம், புள்ளிகளை மையப்படுத்திய போட்டி, அதற்காக எழுதுதல் என்ற அறிவுபண்பாட்டையும் அவதானிக்க முடிகின்றது. இப்படியானதொரு கேள்விகளுக்கிடமற்ற அறிவுருவாக்கப்பண்பாட்டு சூழலில், இப்படியான புனைவுகள் அல்லது ஒருபக்க பார்வை என்பது, பன்மைத்துவ அறிவுருவாக்கத்திற்கும், கேள்விகளுடன் கூடிய திறனாய்வு நோக்கும், கண்ணோட்டத்திற்குமான, பேரிடராக அமைந்துவிடுமோ என்ற பேரச்சமும், இப்படியான எழுத்தாவணங்களை வாசிக்கின்ற போது, தொனிப்பதும் தவிர்க்க முடியாததாகின்றது.
வரலாற்றில், கூத்து மீளுருவாக்கம் அது சார்ந்த செயற்பாடுகளுக்கான தனியானதொரு வரலாறு இருக்கும் போது, காலந்தோறும் தனது எழுத்துக்களின்வழி சு. வித்தியானந்தனின் பணிகளை, கூத்துச் செம்மையாக்கம், கூத்து புத்தாக்கம், நாடகம், கூத்து நாடகம் என ஒவ்வொரு காலப்பகுதியிலும் வேறு வேறாக அடையாளப்படுத்தி, வருகின்ற சி. மௌனகுரு அவர்கள், தொடர்ச்சியாக கூத்து மீளுருவாக்கச் செயற்பாடு தொடர்பான வரலாற்று திரிபுகளை கட்டமைக்கவிளைகிறாரா என்பதுதான், இந்தவரலாற்று நீரோட்டத்தை அவதானிக்கின்ற சராசரி ஒரு தனியாளின் கேள்வியாக இருக்க முடியும். இந்த வகையான திரிபுபடுத்தல்களில் நின்றும் விடுபட்ட ஒரு பார்வை என்பதுதான் ஒரு ஆக்கபூர்வமாக அறிவுருவாக்க சமுகத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இருக்க முடியும்.
“வேறொரு முக்கிய அம்சம் கூத்தின் மீளுருவாக்கம் தொடர்பாக 2000 ஆம் ஆண்டிற்கு பின், விஷேடமாகக் கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து எழுந்துள்ள, கோட்பாட்டுரீதியான எதிர்க்கருத்தாகும். பின்நவீனத்துவ, பின்காலனித்துவாத சிந்தனைகளை சார்ந்திருக்கும் ஒரு குழுவினர் இதுவரை மௌனகுரு போன்றோர் செய்தது கூத்தின் மீளுருவாக்கம் அல்ல எனும் விமர்சனத்தை முன்வைப்பதுடன், அவர்களின் அணுகுமுறையில் சில மீளுருவாக்க கூத்துக்களை மேடையேற்றியுள்ளார்கள்” ( மௌனகுருவின் கூத்த யாத்திரை – கொண்டதும் கொடுத்ததும் – நூல் விமர்சனம் சமுத்திரன் ) என குறித்த விமர்சனத்தில் பதிவிடும் சமுத்திரன் அவர்கள், அந்த குறிப்பிட்ட குழு செய்த, அதனை மையப்படுத்திய எழுத்தாவணங்களை கருத்தில் கொள்ளாததன் நிதர்சனத்தையும், இந்த விமர்சனத்திலும், அதற்கு மாறாக வரலாற்று பதிவுகளாக இருக்கின்ற விடயங்களையும் எடுத்துவைத்து பார்க்கின்ற போது ஒரு முரண்நகையையும், திரிபுபடுத்தப்பட்ட வரலாற்று பதிவையும் தரிசித்து விட முடிகின்றது.
ஒருவேளை சமுத்திரன் அவர்கள் அந்த குழு செய்த விடயங்களை, கவனத்தில் எடுத்திருப்பாராக இருந்தால், கூத்து மீளுருவாக்கம் என்ற செயற்பாடு தொடர்பான, ஒரு தெளிவு பிறந்திருக்கும். அந்த தெளிவு திரிபுப்படுத்தப்பட்ட வரலாற்று புனைவுகளின் அரசியலை கேள்விக்குட்படுத்தியிருக்கும். கேள்விக்குட்படுத்தவேண்டும் அதுதான் எழுத்தின் தர்மமும் கூட. வள்ளுவன் , “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு” எனச் சொல்லுவதைப் போல சமுத்திரன் அவர்கள் மெய்யறிவை கண்டடைந்திருப்பார் என்பது தான் நிதர்சனம்.
இந்த இடத்தில் தான் ஒரு ஆக்கப்பூர்வமான அறிவுருவாக்க சமுகம், அத்தகைய அறிவுருவாக்கச் சமுகத்திற்கான எடுத்துக்காட்டுக்கள் உருவாக வேண்டியதன் அவசியத்தையும், நுனிபுல் மேய்தல் என்ற நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டு, ஆய்ந்தறிந்து கற்கவேண்டியதன், கற்றுத் தெளியவேண்டியதன் அவசியத்தையும் உணர வேண்டியிருக்கிறது.
இரா. சுலக்ஷனா.
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.
உசாத்துணை பட்டியல்
- மௌனகுரு, சி. 2005, நாடகம் – அரங்கியல் பழையதும் புதியதும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
- மௌனகுரு, சி. 2008, ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு, குமரன் புத்தக இல்லம் கொழும்பு
- மௌனகுருவின் கூத்த யாத்திரை – கொண்டதும் கொடுத்ததும் – நூல் விமர்சனம் சமுத்திரன் https://globaltamilnews.net/2021/165130
- சிவநாயகம்.செ, 2007, சீலாமுனை கூத்து மீளுருவாக்கம், மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழு , மட்டகளப்பு.
- விவேகானந்தராசா,த கூத்துக்கலைஞர் சி. விஸேந்திரனுடனான நேர்காணல், 2012, மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழு, மட்டகயளப்பு.
- மௌனகுருவின் கூத்த யாத்திரை – கொண்டதும் கொடுத்ததும் – நூல் விமர்சனம் சமுத்திரன் https://maatram.org/?p=9618
- தெளிவத்தை ஜோசப், தாய்வீடு ஆழத்து முத்துக்கள் “அரங்கியல் பல்கலைக்கழகம் – பேராசிரியர் சி. மௌனகுரு ” 2013 நவம்பர்.