உலக கிண்ண கால்பந்து போட்டி கட்டாரில் அடுத்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. இதில் நேற்று முன்தினம் இரவு அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடைபெற்ற தென்அமெரிக்க கண்ட அணிகளுக்கான தகுதி சுற்று போட்டி ஒன்றில் லயனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணியும் பொலிவியா அணியும் போட்டியிட்டன
ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன்போது 34 வயதான மெஸ்சி 14-வது, 64-வது, 88-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் அடித்து ‘ஹட்ரிக்’ சாதனை படைத்தார். அவர் சர்வதேச போட்டியில் ‘ஹட்ரிக்’ கோல்கள் அடிப்பது இது 7-வது முறையாகும்.
இந்த போட்டியில் மெஸ்சி 2-வது கோலை அடித்தபோது சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்த தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்தினார். அவர் 153 சர்வதேச போட்டிகளில் விளையாடி 79 கோல்கள் அடித்துள்ளார். இதற்கு முன்பு பிரேசில் முன்னாள் கதாநாயகன் பீலே (77 கோல்கள், 92 ஆட்டங்களில்) அதிக கோல் அடித்த தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த வீரராக விளங்கினார். அவரது சாதனையை மெஸ்சி முறியடித்துள்ளாா்
சர்வதேச போட்டியில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் போர்த்துக்கல் அணியின் தலைவா் கிறிஸ்டியானோ ரொனால்டோ (180 போட்டிகளில் விளையாடி 111 கோல்கள்) முதலிடத்தில் உள்ளாா். இந்த வரிசையில் மெஸ்சி 5-வது இடத்தை ஜாம்பியா வீரர் காட்பிரையுடன் இணைந்து வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது