இலங்கை பிரதான செய்திகள்

வடக்கில் 30 வயதிற்கு மேற்பட்ட ஒரு இலட்சம் பேர் தடுப்பூசிகளை பெறவில்லை

வடமாகாணத்தின் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ 100,000 பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு தெரிவித்துள்ளார்.  குறித்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , 
  வடமாகாணத்தில் தற்போது 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதுவரை வடமாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 547150 பேருக்கு 1வது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது வடமாகாணத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 85% ஆகும். மேலும் 2வது தடுப்பூசி 401,494 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 62% ஆகும்.

வடமாகாணத்தின் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ 100,000 பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லை. கடந்த ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதி முதல் வடமாகாணத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் இறப்புக்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது.

வடமாகாணத்தில் இதுவரை மொத்தமாக 32,844 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். இவர்களில் 14,480 தொற்றாளர்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்திலும் 5,847 தொற்றாளர்கள் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 12 நாட்களிலும் இனங்காணப்பட்டுள்ளனர். இதேபோல வடமாகாணத்தில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை மொத்தமாக 578 இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டடுள்ளன. இவற்றில் 228 இறப்புக்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்திலும் 169 இறப்புக்கள் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 12 நாட்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள இறப்புக்களை ஆராயும்போது பெரும்பாலான இறப்புக்கள் தடுப்பூசி எதுவும் போடாதவர்கள் மத்தியிலேயே ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றிக்கொள்வதன் மூலம் கொவிட் தொற்று ஏற்பட்டாலும் அதன் தாக்கத்தையும் இறப்புக்களையும் குறைக்கக்கூடியதாக இருக்கும். எனவே தற்போது ஏற்பட்டுள்ள இந்த அபாயகரமான பெருந்தொற்று சூழலிலே உயிரிழப்புக்களை குறைப்பதற்கு எம்மிடமுள்ள முக்கியமான உபாயம் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதே.

தற்பொழுது வடமாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரையும் உடனடியாக சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு வினயமாக கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.   

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.