அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுட்டுக்கொல்ல முயன்றமை மற்றும் அவர்களை சித்திரவதை செய்தமை தொடர்பில் சுயாதீன விசாரணை குழு ஒன்றை அமைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.இலங்கை ஜனாதிபதி இத்தகைய விசாரணைக்குழுவை நியமிக்கும் வரையாக அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கவேண்டுமென தமிழ் அரசியல் கைதிகளது குடும்பங்கள் அழைப்புவிடுத்துள்ளன.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை அவர்கள் முன்னெடுத்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில் வழக்கம் போல ஊடக அறிக்கைகளை விடுத்து பின்னர் ஓய்ந்து போவது எமது தலைவர்களது பண்பாடாகும்.அவ்வாறில்லாமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தமிழ் அரசியல் தலைவர்களிற்கு அரசியல் கைதிகளது குடும்பங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
கைதிகளது நலன்களை பாதுகாக்கும் ஒரு அமைச்சராக இருந்தவாறாக எமது பிள்ளைகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் மீது தனது சகபாடிகள் சகிதம் மதுபோதையில் அதுவும் இரவு நேரத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் அதிர்ச்சியை தந்துள்ளது.அக்கும்பல் எமது பிள்ளைகளை தமது பாதணிகளை நாக்கினால் துப்புரவு செய்ய சொல்லியிருக்கின்றனர்.
எமது உறவுகளை உயிருடன் பாதுகாக்க முதலில் அவர்களை யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றவேண்டும்.அதற்கு முன்னதாக அவர்கள் தொடர்பிலான வழக்குகள் உள்ள நீதிமன்றங்களில் அவர்களை முற்படுத்தி நடந்தவற்றை வெளிப்படுத்த வேண்டும்.கைதிகள் நீதிமன்ற விசாரணைகளிற்காகவே சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வகையில் அவர்களை பாதுகாக்க வேண்டியது இலங்கை நீதிமன்றங்களது கடமை.இதேவேளை தமிழ் கட்சிகளது பிரதிநிதிகள் குழுவொன்று உடனடியாக நேரில் அனுராதபுரம் சிறைக்கு பயணம் செய்து தமிழ் அரசியல் கைதிகளது நலன்களை முதலில் கண்காணிக்கவேண்டும்.ஜநாவில் 16 அரசியல் கைதிகளது விடுதலை பற்றி வெளிவிவகார அமைச்சர் உரையாற்றிக்கொண்டிருக்க சிறையினுள் கைதிகளை அமைச்சரே கொல்லமுற்படுகின்ற அவலம் இங்கேயே நடத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசியல் கைதிகளது விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற சந்திப்பில் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளது குடும்ப பிரதிநிதிகளும் இணைந்திருந்தனர்