Home உலகம் பெல்ஜியம் சாலை ஒன்றிற்கு, குத்திக் கொலை செய்யப்பட்ட பாலியல் தொழிலாளியின் பெயர் சூட்டப்பட்டது!

பெல்ஜியம் சாலை ஒன்றிற்கு, குத்திக் கொலை செய்யப்பட்ட பாலியல் தொழிலாளியின் பெயர் சூட்டப்பட்டது!

by admin

யுனிஸ் ஒசயாண்டே: குத்தி கொலை செய்யப்பட்ட பாலியல் தொழிலாளியின் பெயரை பெல்ஜியம் ஒரு சாலைக்கு வைப்பது ஏன்?

பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரஸ்ஸல்ஸில், ஒரு புதிய சாலைக்கு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட பாலியல் தொழிலாளி ஒருவரின் பெயரை, விரிவான பிரசாரத்தின் ஒரு பகுதியாக வைக்க இருப்பதாக ப்ரஸ்ஸல்ஸ் நகரம் நிர்வாகம் கூறியுள்ளது.

புதிய தெருவுக்கு யுனிஸ் ஒசயாண்டே (Eunice Osayande) என்று பெயர் வைக்கப்படும் என ப்ரஸ்ஸல்ஸ் நகர கவுன்சில் கூறியுள்ளது. இவர் ஒரு பாலியல் தொழிலாளி. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பெல்ஜியம் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸுக்கு சென்றவர் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டார். கடந்த 2018 ஜூன் மாதத்தில் ஒரு வாடிக்கையாளரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

நல்ல வேலை மற்றும் வளமான எதிர்காலம் கிடைக்கும் என நம்பி யுனிஸ் ஒசயாண்டே ஐரோப்பாவுக்குள் நுழைந்தார். ஒசயாண்டேவை ஐரோப்பாவுக்கு அழைத்த நபர், நடிகர்களுக்கான முகவர் என்றும், அவர் தன்னை ஒரு சினிமா நட்சத்திரமாக்குவார் என கருதினார். ஆனால் யதார்த்தத்தில் அவர் ஒரு கடத்தல்காரர்.

ஒசயாண்டே பிரஸ்ஸல்ஸ் நகரத்துக்கு சென்ற பின் உடனடியாக பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டார். அவர் அந்த கடத்தல் கும்பலுக்கு 45,000 யூரோக்கள் கடன்பட்டிருப்பதாகவும், அவரை ஐரோப்பா அழைத்து சென்றதற்கான போக்குவரத்து மற்றும் இத்தியாதி செலவுகள் அது எனவும் அக்கும்பல் அவரிடம் கணக்கு கூறியது.

2018 ஜூன் மாதம், 23 வயதான ஒசயாண்டே, கரே டு நார்ட் என்கிற மாவட்டத்தில் ஒரு வாடிக்கையாளரால் 17 முறை கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார்.

KEVIN VAN DEN PANHUYZEN/BRUZZ
படக்குறிப்பு,யுனிஸ் ஒசயாண்டேவின் படத்தோடு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்மணி

இந்த கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, வெவ்வேறு நாடுகளிலிருந்து குடியேறி பாலியல் தொழில் செய்து வரும் சமூகத்தினர் தரப்பிலிருந்து போராட்டங்கள் வெடித்தன. பாலியல் தொழில் துறைக்கு தெளிவான வழிமுறைகள் விதிக்கப்பட வேண்டும் என உள்ளூர் அரசு அமைப்புகளிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. பாலியல் தொழிலாளர்களுக்கு நல்ல பணி சூழல் வேண்டும் என்றும் கோரினர்.

பெல்ஜியத்தில் பாலியல் தொழில் சட்ட விரோதமானதல்ல என்றாலும், அதை நிர்வகிக்கும் வகையில் ஒருங்கிணைந்த தேசிய அளவிலான விதிகள் எதுவும் இல்லை.

ப்ரஸ்ஸல்ஸில் இருக்கும் யூ.டி.எஸ்.ஓ.பி.ஐ என்கிற பாலியல் தொழிலாளர்கள் சங்கத்தின் இயக்குநர் மேக்சிம் மேஸ் போராட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு நிர்வகித்தார்.

“தகுந்த ஆவணங்களின்றி குடியேறி இந்த தொழிலில் இருப்பவர்களுக்கு, யுனிஸின் மரணம் மிகுந்க அழுத்தத்தைக் கொடுப்பதாக இருக்கிறது” என மேக்சிம் பிபிசியிடம் கூறினார்.

“இந்த பகுதியில் வன்முறை அதிகரிப்பதைப் பார்க்க முடிகிறது. மிகவும் விளிம்புநிலையில் இருப்பவர்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள்” 17 வயதான ஒருவர் மீது ஒசயாண்டேவின் கொலை தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது, விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

கடத்தல் கும்பலில் இருந்து நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் நான்கு ஆண்டு கால சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு புதிய சாலைக்கு ஒசயாண்டேவின் பெயரைச் சூட்டுவதன் மூலம், மனித கடத்தல் கும்பலால் பாதிப்புக்கு உள்ளான மறக்கப்பட்ட பெண்கள் மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்ட பெண்கள் தொடர்பாக கவனத்தை ஈர்க்க விரும்புவதாக ப்ரஸ்ஸல்ஸ் நகர நிர்வாக தரப்பு கூறியுள்ளது.

பெல்ஜியத்தில் ஒரு பாலியல் தொழிலாளியின் பெயரை ஒரு தெருவுக்கு வைப்பது, அந்நாட்டில் இதுவே முதல்முறை என ஆர்.டி.பி.எஃப் என்கிற ஊடகம் கூறியுள்ளது.

(KEVIN VAN DEN PANHUYZEN/BRUZZபடக்குறிப்பு, யுனிஸ் ஒசயாண்டேவின் படத்தோடு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்மணி)

ஒசயாண்டேவின் பெயர் சூட்டப்பட்டுள்ள சாலை, ப்ரஸ்ஸல்ஸ் நகரின் வடக்கும் பகுதியில் இருக்கும். இன்னும் பல சாலைகளுக்கு பெண்களின் பெயர் வைக்கப்பட உள்ளதாக நகர நிர்வாகம் ஒரு திட்டத்தை முன்னெடுத்து இருக்கிறது.

ஏற்கனவே நகர நிர்வாகம் சில குறிப்பிடத்தக்க பெண்களின் பெயர்களை சாலைக்கு சூட்டியுள்ளது. வொனே நெவெஜென் (Yvonne Nèvejean), ஆண்ட்ரே டி ஜாங்க் (Andrée De Jongh), சுசன் டேனியல் (Suzan Daniel) ஆகியோர் இதில் அடக்கம்.

“எங்களைப் பொருத்தவரை பெண்ணியம் என்பது பெரிதாக சாதித்த பெண்கள் மட்டுமல்ல” என கூறியுள்ளார் ப்ரஸ்ஸல்ஸ் நகர நிர்வாகத்தைச் சேர்ந்த அன்ஸ் பெர்சோன்ஸ் (Ans Persoons).

“சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலும் பெண்கள் உரிமைகள் மற்றும் பெண்கள் போராட்டங்களை உள்ளடக்கியது தான் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பெண்ணியம்” பெல்ஜியத்தில் 16 – 69 வயது வரம்புக்கு உட்பட்டவர்களில் 42 சதவீத பெண்கள், ஏதோ ஒரு கட்டத்தில் உடல் ரீதியிலான பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர்.

“இது பாலியல் தொழிலாளிகள் மத்தியில் இன்னும் அதிகமாக இருக்கிறது. ஆகையால் தான் யுனிஸ் ஒசயாண்டேவின் பெயர் ஒரு சாலைக்கு சூட்டப்படுகிறது” என கூறியுள்ளார்.

தற்போது கட்டுமானத்தில் இருக்கும் இந்த சாலை, அடுத்த மாதம் அதிகாரபூர்வமாக திறக்கப்படும், திறப்பு விழாவின் போது பாலியல் தொழிலாளிகள் மற்றும் குடியெர்ந்த சமூகத்தினர் உரையாற்ற அழைக்கப்படுவர் என நகர கவுன்சில் கூறியுள்ளது.

  • மேகா மோகன்
  • பாலின மற்றும் அடையாள செய்தியாளர் – BBC

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More