தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விருது விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது அசுரன் படத்துக்காக வெற்றி மாறனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அசுரன் படத்தில் தனுஷின் இளைய மகனாக நடித்த கென் கருணாஸுக்குச் சிறந்த அறிமுக நடிகர் விருதும் அசுரன் படத்தில் வந்த எல்லு வய பூக்களையே பாடலை சிறப்பாகப் பாடியதற்காக சைந்தவிக்குச் சிறந்த பாடகிக்கான விருதும் அசுரன் படத்துக்காக வேல்ராஜுக்குச் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்துக்குச் சிறந்த படத்துக்கான விருதும், அதில் நடித்த அர்ஜுன் தாஸுக்குச் சிறந்த வில்லன் விருதும், ஜார்ஜ் மரியானுக்குச் சிறந்த துணை நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளன.
மகாமுனி படத்தில் சிறப்பாக நடித்த இந்துஜா ரவிச்சந்திரனுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதனுக்குச் சிறந்த அறிமுக இயக்குநர் விருதும், ஆடை படத்தை தயாரித்த வி ஸ்டூடியோஸுக்குச் சிறந்த அறிமுக தயாரிப்பாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளன.