Home உலகம் கனடாவில் இன்று வாக்களிப்பு – தமிழர்களால் விரும்பப்படும் ஜஸ்டின் ட்ரூடோ வெல்வாரா?

கனடாவில் இன்று வாக்களிப்பு – தமிழர்களால் விரும்பப்படும் ஜஸ்டின் ட்ரூடோ வெல்வாரா?

by admin
படம் :GlobalNews, Canada

பழமைவாதிகளுடன் கடும் போட்டி உரிய காலத்துக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட திடீர்ப்பொதுத் தேர்தலில் கனடிய வாக்காளர்கள் இன்று திங்கட்கிழமைவாக்களிக்கவுள்ளனர். நாட்டின் 44 ஆவது நாடாளுமன்றத்துக்கான இத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல்கட்சிக்கும் எதிர்க்கட்சியாகிய எரின் ஓ ரூலின்(Erin O’Toole) பழைமைவாதக் கட்சிக்கும் (Conservatives) இடையே மிகநெருக்கமான போட்டி நிலவுவதைக் கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்தி உள்ளன.

இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே தேர்தலை அறிவித்த பிரதமர் ட்ரூடோ கடுமையான போட்டிக் களம் ஒன்றைச் சந்திக்க நேர்ந்துள்ளது. தமிழர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற தலைவராக விளங்கும் அவரது கட்சி உட்படமுக்கிய அணிகளில் கனடா வாழ் ஈழத்தமிழர்கள் சிலரும் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.

கனடாவின் 23 ஆவது பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதை நோக்கமாகக் கொண்டே திடீரெனத் தேர்தலைஅறிவித்தார். நாடு கொரோனா வைரஸஸின் நான்காவது அலையைச் சந்தித்துள்ள சமயத்தில் அவர் தனது கட்சி நலனுக்காகத் தேர்தலை நடத்த முற்பட்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சி கடுமையாக விமர்சித்தது.

தடுப்பூசி பாஸ் மற்றும் இறுக்கமான சுகாதாரக் கட்டுப்பாடுகளை எதிர்த்துவரும் பழமைவாதிகள், ஜஸ்டின் மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகிறார் எனக் கூறி தங்கள் பிரசாரங்களை முன்னெடுத்தனர். ஆனால் வைரஸ் நெருக்கடிக்குள் இருந்து நாட்டை அறிவியல் வழி யில் மீட்பது என்ற தனது கொள்கைக்குமக்களது தீர்ப்பைப் பெறுவதற்காகவே தேர்தலை முன் கூட்டியே நடத்தத் தீர்மானித்தார் என்று ட்ரூடோ கூறிவருகிறார்.

ட்ரூடோ தனது தேர்தல் பிரசாரங்களின்போது தடுப்பூசி எதிர்ப்பாளர்களது கல்லெறிகளைச் சந்திக்க நேர்ந்தது. கனடாவின் தேர்தல் பணியகத்தின் தகவலின்படி பதிவு செய்யப்பட்ட 27 மில்லியன்வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தவுள்ளனர். அவர்களில் 5.8 மில்லியன் வாக்காளர்கள் ஏற்கனவே முன்கூட்டியே வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.

வித்தியாசமான நேரவலயங்களைக் கொண்டுள்ளதால் வாக்களிப்பு முடிவடையும் நேரம் வலயங்களுக்குள் மாறுபடும்.பல்லாயிரக் கணக்கான வாக்குகள் தபால் மூலமும் செலுத்தப்படவுள்ளதால் இறுதி முடிவுகள் வெளியாகுவது தாமதமாகலாம் என்று தேர்தல்அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் கீழ்ச் சபையான பொதுச் சபைக்கு 338 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக இன்றைய தேர்தல் நடக்கிறது. பெரும்பான்மை அரசு ஒன்றைநிறுவுவதற்கு 170 ஆசனங்களை வெல்லவேண்டும்.பெரும் தொற்று நோய்க் காலப் பகுதியில் நடத்தப்படுகின்ற இன்றைய தேர்தலில், வைரஸ் நெருக்கடியுடன் அதற்குமேலதிகமாகப் பொருளாதாரம், வீட்டு வசதி, பருவநிலை மாற்றம் போன்ற பலவிடயங்கள் வாக்காளர் மனங்களில்செல்வாக்குச் செலுத்தப் போகின்ற முக்கிய விடயங்களாக உள்ளன.கடும் போட்டியைச் சந்தித்திருக்கின்றபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல்கட்சிக்கும் எரின் ஓ ரூல் தலைமையிலான பிரதான எதிர்க் கட்சிக்கும் முறையே, 31,32 சதவீத வாக்குகள் கிடைக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது தரப்பாக ஜக்மீத் சிங்கின்(Jagmeet Singh) புதிய ஜனநாயகக் கட்சி(New Democratic Party) 20 சதவீதமானவாக்குகளைப் பெறலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.எந்தக் கட்சியும் தனித்துப் பெரும்பான்மையைப் பெற வாய்ப்புகள் அரிது என்பதால் நாட்டில் மீண்டும் பெரும்பான்மைஇல்லாத அரசாங்கம் ஒன்று அமையலாம்என்றே அவதானிகள் குறிப்பிடுகின்றனர்

—————————————————————- –

பாரிஸிலிருந்து குமாரதாஸன் 20-09-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More